மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும்.
✠ லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 39-48.
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களை நோக்கிக் கூறியது: “எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.”
அப்பொழுது பேதுரு, “ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?” என்று கேட்டார்.
அதற்கு ஆண்டவர் கூறியது: “தம் ஊழியருக்கு வேளாவேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண்டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக்கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகிகளுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார்.
தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும், ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடிபடுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல், அடிவாங்க வேண்டிய முறையில் செயல்படுபவன் அவரது விருப்பத்தை அறியாமல், செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதியாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப்படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“உங்கள் உறுப்புகளைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்”
பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் புதன்கிழமை
I உரோமையர் 6: 12-18
II லூக்கா 12: 39-48
“உங்கள் உறுப்புகளைக் கடவுளிடம் ஒப்படையுங்கள்”
மனமாறச் சொன்ன மனிதர்:
பாரம்பரியமாகச் சொல்லப்பட்டு வருகின்ற செய்தி இது.
சோதோம் நகரில் வாழ்ந்து வந்த மக்கள் செய்த பாவம் ஆண்டவருக்குச் சினமூட்டியதால், அவர் அந்நகரில் இருந்தவர்களை அழித்தொழிக்க முடிவுசெய்தார். இச்செய்தியை அறிந்த ஓர் இறைமனிதர் மக்கள் நடுவில் சென்று, “கடவுள் இந்த நகரில் உள்ள மக்கள் செய்த பாவத்தால் சினமடைந்து இதை அழிக்கத் திட்டமிட்டுள்ளார். அதனால் எல்லாரும் மனம்மாறுங்கள். இல்லையென்றால் அழிவது உறுதி” என்று அறிவித்து வந்தார்.
மக்கள் அவர் சொன்னதைக் கேளாமல், எப்போதும் போல் பாவத்திலேயே மூழ்கிக் கிடைத்தார்கள். ஆனாலும் அந்த இறைமனிதர் தான் அறிவித்ததை நிறுத்தாமல், தொடர்ந்து அறிவித்து வந்தார். ஒருநாள் அவரைத் தடுத்து நிறுத்திய அந்த நகரைச் சார்ந்த ஒருவர், “நீங்கள் அறிவிப்பதைக் கேட்டு யாரும் மனம்மாறாமல், மீண்டும் மீண்டும் பாவம்தானே செய்து வருகின்றார்கள். பிறகு எதற்கு நீங்கள் இச்செய்தியைத் தொடர்ந்து அறிவித்து வருகிறீர்கள்?” என்றார். அதற்கு அந்த இறைமனிதர், “நான் அறிவிக்கும் செய்தியைக் கேட்டு மக்கள் மாறவில்லை என்பதற்காக நான் அறிவிப்பதை நிறுத்திக்கொண்டால், மக்கள் என்னுடைய மனத்தை மாற்றி, என்னையும் அவர்களைப் போன்று பாவம் செய்ய வைத்துவிடுவார்கள். அதனால்தான் நான் மக்கள் மனம்மாறவேண்டும் என்று தொடர்ந்து அறிவித்து வருகின்றேன்” என்றார்.
ஆம், சோதோம் நகரில் இருந்த எல்லாரும் தங்கள் உடலைப் பாவத்திற்கு ஒப்படைத்து வாழ்ந்தபோது, ஒரே ஒரு மனிதர் மட்டும் தன் உடலைக் கடவுளிடம் ஒப்படைத்துப் பாவம் செய்யாமல் வாழ்ந்தது, நாம் ஒவ்வொருவரும் நமது உடலைப் பாவத்திடம் அல்ல, கடவுளிடம் ஒப்படைத்து வாழவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. இன்றைய இறைவார்த்தையும் இதே செய்தியைத்தான் நமக்குத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
கடவுள் ஒவ்வொருவருக்கும் மிக அருமையான உடலைக் கொடுத்திருக்கின்றார். இந்த உடலைக் கொண்டு நாம் கடவுளை மாட்சிப்படுத்தவும் முடியும், பாவத்தில் விழுந்து கிடக்கவும் முடியும். பாவம் நம்முடைய உடலின்மீது ஆட்சி செலுத்தவிடாமல், அதைக் கடவுளிடம் ஒப்படைத்து வாழுங்கள் என்ற மேலான அழைப்பினை இன்றைய முதல் வாசகத்தில் தருகின்றார் பவுல்.
ஒருவர் தம் உடலின்மீது பாவம் ஆட்சி செலுத்தவிடாமல், அதைக் கடவுளிடம் ஒப்படைத்து வாழும்போது என்ன நடக்கும் என்பதை நற்செய்தியில் ஆண்டவர் இயேசு மிக அழகாக எடுத்துக்கூறுகின்றார். ஒருவர் தம் உடலைக் கடவுளிடம் ஒப்படைத்து வாழும்போது, அவர் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் நம்பிக்கைக்குரியவராகவும் விழிப்பாகவும் இருப்பார். அப்படிப்பட்டவர் கடவுளிடமிருந்து அதற்குரிய ஆசியைப் பெறுவார்.
ஆகையால், நம்முடைய உடலை ஆண்டவரிடம் ஒப்படைத்து, அவரது தரும் ஆசிகளைப் பெறுவோம்.
இறைவாக்கு:
உங்கள் உடல் நீங்கள் கடவுளிடமிருந்து பெற்றுக்கொண்ட தூய ஆவி தங்கும் கோயில் (1 கொரி 6:19)
உங்கள் உடலால் கடவுளுக்குப் பெருமை சேருங்கள் (1 கொரி 6:20)
தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள் (கலா 5:16)
சிந்தனைக்கு:
‘….ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்து கொள்வோமா’ (உரோ 13:12) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அழகிய உடலில் ஒளியின் ஆட்சிக்குரிய படைக்கலங்களை அணிந்துகொண்டு, ஆண்டவருக்குப் பெருமை சேர்த்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed