திருஅவையில் ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்தல் என்ற தலைப்பில், 2023ம் ஆண்டு அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களில், உலக அளவில் அனைத்து இறைமக்களும் ஈடுபடுத்தப்படவேண்டும் என்ற நோக்கத்தில் அவற்றின் முதல்நிலை பணிகள், அக்டோபர் 17, இஞ்ஞாயிறன்று உலகின் அனைத்து மறைமாவட்டங்களிலும் துவக்கப்பட்டுள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், ‘அன்பின் மகிழ்வு’ திருத்தூது அறிவுரை மடலின் 8ம் பிரிவின், 297ம் பத்தியில், இறைமக்கள் அனைவரும், திருஅவையின் வாழ்வில் சரியான முறையில் பங்குகொள்வது பற்றிய எண்ணங்களை எடுத்துரைத்துள்ளார்.
இறைமக்கள் ஒவ்வொருவரும், திருஅவைக் குழுமத்தில் பங்குகொள்வதற்கு தங்களுக்கே உரிய சரியான வழியைக் கண்டுகொள்ள, அவர்களுக்கு உதவிகள் தேவைப்படுகின்றன. இதனால் அவர்கள், தகுதி பாராது, வரையறையின்றி, கைம்மாறு கருதாமல் வழங்கப்படும் கடவுளின் அருளால் தொடப்படுவதை அனுபவிப்பார்கள். மணமுறிவு பெற்றுள்ளோர் மற்றும், மறுதிருமணம் செய்து வாழ்வோர் மட்டுமல்ல, யாராய் இருந்தாலும், அவர்கள் எந்தச் சூழலில் வாழ்ந்தாலும், அவர்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பது, நற்செய்தியின் வழி சிந்திப்பது அல்ல. யாராவது ஒருவர், நன்னெறிக்குப் புறம்பான ஒரு செயலை வெளிப்படுத்தினாலோ அல்லது, திருஅவை விரும்புவதற்கு மாறாக ஏதாவது ஒன்றைப் புகுத்த விரும்பினாலோ, அவர், மற்றவருக்கு கற்றுக்கொடுக்கவோ அல்லது போதிக்கவோ முடியாது. இது கிறிஸ்தவ குழுமத்திலிருந்து பிரித்துவைப்பதற்கு வழியமைக்கும் (காண்க.மத்.18:17). இத்தகைய மனிதர், நற்செய்திக்கும், அது விடுக்கும் அழைப்புக்கும் மீண்டும் செவிமடுக்கவேண்டும். ஆயினும், இத்தகையவரும்கூட, கிறிஸ்தவக் குழும வாழ்வில் ஏதாவது ஒருவகையில் பங்கெடுக்கலாம். அதாவது சமுதாயநலப் பணியிலோ, இறைவேண்டல் கூட்டங்களிலோ, அல்லது பங்குத்தந்தையோடு தெளிந்துதேர்ந்து, தானாக ஏதாவது ஒன்றைச் செய்வதாலோ பங்கெடுக்குமாறு பரிந்துரைக்கப்படலாம். திருமண அருளடையாளத்தைப் பெறாமல் கூடிவாழும் தம்பதியர், மணமுறிவு பெற்று, மறுதிருமணம் செய்துவாழ்வோர் போன்ற நிலைகளில் வாழ்வோருக்கு மேய்ப்புப்பணிகள் ஆற்றுவது பற்றி மாமன்றத் தந்தையர் ஒருமித்த ஒரு கருத்தை இவ்வாறு வெளியிட்டுள்ளனர். “அத்தகையோர் தங்கள் வாழ்வில் இறையருள் செயல்படும் முறையைப் புரிந்துகொள்வதற்கும், அவர்களுக்காக கடவுள் வகுத்துள்ள திட்டத்தை முழுமையாக அடைவதற்கும், உதவிகள் செய்வது திருஅவையின் கடமையாகும். இது எப்போதும் தூய ஆவியாரின் வல்லமையால் இயலக்கூடியதே”