பொதுக்காலம் பதினேழாம் வாரம் வெள்ளிக்கிழமை
I லேவியர் 23: 1, 4-11, 14-16, 27, 34b-38
II மத்தேயு 13: 54-58
“அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால்…”
நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்கும் உள்ள வேறுபாடு:
மிசிசிப்பி ஆற்றின்மேல் பாலம் கட்டப்படாத காலம் அது.
ஒருவர் மிசிசிப்பி ஆற்றைக் கடந்து மறுபக்கம் போக வேண்டியிருந்தது. ஆற்றின்மேல் பாலம் இல்லாததால், அதை எப்படிக் கடப்பது என்று யோசித்துக் கொண்ருகையிலேயே, ஆறானது உறைந்து போயிருப்பதைக் கண்டார் அவர். ஆதலால் உறைந்து போயிருக்கும் ஆற்றில் மெல்ல நடந்தால், எளிதாக மறுகரையை அடையலாம் என்ற முடிவுக்கு வந்தார் அவர். இதைத் தொடர்ந்து அவர் ஆற்றின் மேல் நடந்தார். அவர் இவ்வாறு நடக்கையில் உள்ளுக்குள், ‘உறைந்து போயிருக்கும் ஆறு உருகிவிடுமோ?’ என்ற அச்சம் தொற்றிக்கொண்டது. இதனால் அவர் தவழ்ந்து தவழ்ந்து சென்றார்.
இந்த நேரத்தில் பின்னால் ஏதோ சத்தம் கேட்டு அவர் திரும்பிப் பார்த்தார். அங்கு ஒருவர் தலையில் ஒரு பெரிய சுமையுடன், பாடல் பாடிக்கொண்டு வேகமாக வந்து கொண்டிருந்தார். அந்த மனிதரைக் கண்டதும், உறைந்துபோயிந்த ஆற்றில் தவழ்ந்து போயிருந்த இவருக்குப் பெருத்த அவமானமாகப் போய்விட்டது.
ஆம், நம்பிக்கையோடு இருக்கும்போது, உறைந்திருக்கும் ஆற்றிலும் உறுதியாக நடக்கலாம். அதே வேளையில், நம்பிக்கை இல்லாதபொழுது, உறைந்திருக்கும் ஆற்றில் தவழ்ந்துதான் போகவேண்டியிருக்கும்! இன்றைய நற்செய்தியில் இயேசு, தன் சொந்த ஊர் மக்களுக்குத் தன்மேல் நம்பிக்கை இல்லாததால், அவர் அங்கே பல வல்ல செயல்களைச் செய்யவில்லை என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘நாம் பார்க்க வளர்ந்தவர் இவர்…! இவருடைய தாயையும், சகோதரர் சகோதரிகளையும் நமக்கு நன்கு தெரியும்! அப்படியிருக்கையில், இவர் என்ன அவ்வளவு பெரிய ஆளா, இவர் என்ன அப்படிப் பெரிதாகச் செய்துவிட்டார்?’ என்றுதான் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளாமல், புறக்கணித்திருக்க வேண்டும்.
நாசரேத்தைச் சார்ந்தவர்களுக்கு இயேசு, மரியாவின் மகன் என்பது வேண்டுமானால் தெரிந்திருக்கலாம்; ஆனால், அவர் கடவுளின் ஒரே மகன்! அது அவர்களுக்குத் தெரியவில்லை. இப்படி இயேசுவின் புறத்தோற்றத்தை மட்டுமே பார்த்து, அவரைப் புறக்கணித்தவர்கள் அல்லது அவர்மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் இழந்தது ஏராளம்! ஒருவேளை இயேசுவின் சொந்த ஊர் மக்கள் மட்டும் அவர்மீது நம்பிக்கைகொண்டிருந்தால், அவர் அவர்கள் நடுவில் பல வல்ல செயல்களைச் செய்திருப்பார். அவர்கள் அவர்மீது நம்பிக்கை கொள்ளாததாலேயே, அவர் அங்கே பல வல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை. ஆதலால், எல்லா நலன்களுக்கும் ஊற்றான ஆண்டவரிடம் நாம் நம்பிக்கை கொண்டு, அவருக்கு உகந்த வழியில் நடப்போம்.
சிந்தனைக்கு:
கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல் (யோவா 6: 29)
நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும் (மாற் 9: 23).
ஒருவரது வாழ்வும் தாழ்வும் அவர் கடவுள்மீது கொண்டிருக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே!
இறைவாக்கு:
‘அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளைகள் ஆகும் உரிமையை அளித்தார்’ (யோவா 1: 12) என்பார் யோவான் நற்செய்தியாளர். ஆகையால், நாம் இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து, கடவுளின் பிள்ளைகளாகும் பேற்றினைப் பெற்று, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed