பொதுக்காலம் ஒன்பதாவது வாரம் திங்கட்கிழமை
தோபித்து 1: 1ad, 2a, 3, 17: 2: 1-8
மாற்கு 12: 1-2
“இறந்தோரை அடக்கம் செய்த தோபித்து”
இறந்தோரை நல்லடக்கம் செய்துவரும் ஆலங்குடி கணேசன்:
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியைச் சார்ந்தவர் திருவாளர் கணேசன். ஒரு காலத்தில் இரும்புக் கம்பிகள் மற்றும் பொருள்களை வாங்கி விற்று வந்தவரான இவர், நாற்பத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இவர் கண்ட காட்சி இவருடைய வாழ்வை முற்றிலுமாக மாற்றியது. இவர் கண்ட காட்சி இதுதான்: ஆலங்குடி அரசு மருத்துவமனையில் இறந்த தன் கணவரின் உடலை ஊர்தியில் கொண்டு செல்ல வழியில்லாமல், பெண் ஒருவர் கை வண்டியில் கொண்டுசென்றார். இந்த அவலத்தைக் கண்ட கணேசனுக்கு, ‘நாம் ஏன் இறந்தவர்களை மரியாதையாக ஊர்தியில் கொண்டு சென்று, நல்லடக்கம் செய்யக்கூடாது?’ என்ற எண்ணமானது ஏற்பட்டது. அதனடிப்படையில் இவர் தன்னிடம் இருந்த பதினேழாயிரம் உரூபாயைக் கொண்டு, ஒரு நான்கு சக்கர ஊர்தியை வாங்கினார். அந்த வண்டியின் எண்தான் 515. பின்னாளில் அந்த எண்ணாலேயே இவர் ‘515 கணேசன்’ என்று அறியப்பட்டார்.
நான்கு சக்கர ஊர்தி வாங்கிய இவர் ஆதரவற்ற நிலையில் இறந்து கிடந்த உடல்களை நல்லடக்கம் செய்தார். அப்படி இவர் இதுவரைக்கும் நல்லடக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை ஐயாயிரத்திற்கும் மேல். இவர் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களை இலவசமாக தன் ஊர்தியில் ஏற்றிச்சென்றதும் குறிப்படத்தக்கது.
இப்படி ஆதரவற்ற நிலையில் இறந்தது கிடப்போரைக் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நல்லடக்கம் செய்து வரும் ‘515 கணேசன்’ இன்றைய முதல் வாசகத்தில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்த தோபித்தை நமக்கு நினைவுபடுத்துகின்றார். தோபித்தும் இன்றும் நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகமும் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
அசீரியர்களின் தலைநகர் நினிவே நகருக்கு நாடுகடத்தப்பட்டவர்களுள் ஒருவர்தான் தோபித்து. இவர் ஆண்டவரைத் தன் சிந்தையில் இருத்தி வாழ்ந்ததாலும், தன் இனத்தாருக்குத் தர்மங்கள் செய்து வந்ததாலும், இறந்தவர்களை நல்லடக்கம் செய்து வந்ததாலும் ஒருவர் எப்படி வாழவேண்டும் என்பதற்குச் சான்றாக இருக்கின்றார்.
இன்றைய முதல்வாசகத்தில் தோபித்து சாப்பிட அமரும்பொழுது, தன் மகன் தோபியாவிடம், தன்னோடு உணவுஉண்ண ஏழை ஒருவரை அழைத்து வரச் சொல்கின்றார். அவர் வெளியே சென்று பார்க்கும்பொழுது, தன் இனத்தாருள் ஒருவர் கொல்லப்பட்டுக் கிடப்பதைக் காண்கிறார். இச்செய்தியை தோபியா தன் தந்தை தோபித்திடம் சொன்னபொது, அவர் உடனே வெளியே இறந்து கிடந்தவரை நல்லடக்கம் செய்கின்றார். இத்தனைக்கும் அவர் இறந்தோரை அடக்கம் செய்ததற்கு முன்பு சனகெரிபு மன்னனால் தேடப்பட்டவர். ஆனாலும் தோபித்து தன் உயிரை ஒரு பொருட்டாக எண்ணாமல், இறந்தவரை நல்லடக்கம் செய்து, ஒரு மனிதர் எப்படி வாழவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். நற்செய்தியிலோ ஒரு மனிதர் எப்படி வாழக்கூடாது என்பதற்குச் சான்றாக கொடிய குத்தகைக்காரர்கள் விளங்குகின்றார்கள். ஆகவே, நாம் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்வைப் பயனுள்ள விதமாய் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
மனிதர் செய்யும் தருமங்கள் அவருக்குக் கணையாழிபோல் திகழ்கின்றன (சீஞா 17: 22).
நீங்கள் மிகுந்த தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது (யோவா 15: .
ஒருவரின் மகிழ்ச்சியில் கலந்துகொள்வதை விடவும், ஒருவரின் துக்கத்தில் பங்கேற்பது சிறந்தது.
இறைவாக்கு:
‘உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க! அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு, உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழ்வார்கள்’ (மத் 5: 16) என்பார் இயேசு. எனவே, நாம் நமது நற்செயல்களால் உலகிற்கு ஒளியாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed