பொதுக்காலம் எட்டாம் வாரம்
சனிக்கிழமை
I சீராக்கின் ஞானம் 51: 12-20b
II மாற்கு 11: 27-33
“ஞானத்தைத் தேடுவோர் யாவரும் கண்டுகொள்வர்”
ஞானத்தோடு செயல்பட்ட துறவி:
மன்னன் ஒருவன் இருந்தான். இவனுக்குச் சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமே கிடையாது என்ற எண்ணமானது இருந்தது. அதனால் இவன் தன்னிடம் வருவோரிடம், “சதுரங்க விளையாட்டு விளையாடலாமா?” என்று கேட்டு, அவர்களைப் போட்டியில் வெற்றிக்கொண்டு, சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமே இல்லை என்ற மிதப்பில் இருந்தான். ஒருநாள் இவனைச் சந்திக்கத் துறவி ஒருவர் வந்தார். அவரையும் இவன் விட்டு வைக்கவில்லை. அவர் இவனிடம், “எனக்குச் சதுரங்க விளையாட்டைப் பற்றி எதுவும் தெரியாது” என்று சொல்லியும், இவன் அவரிடம், “போட்டியில் வென்றால், நீங்கள் எது கேட்டாலும் தருகின்றேன்” என்று சொல்லி, வலுக்கட்டாயமாக அவரை விளையாட வைத்தான். போட்டியில் துறவி மன்னனை மிக எளிதாக வெற்றிகொண்டார்.
பின்னர் அவன் துறவியிடம், “நீங்கள் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள். தருகின்றேன்” என்றான். அப்பொழுது துறவி அவனிடம், “எனக்கு வேறு எதுவும் வேண்டாம், இந்தச் சதுரங்கக் கட்டத்தில், முதல் கட்டத்தில் ஒரு நெல் மணி, இரண்டாவது கட்டத்தில் இரண்டு நெல் மணி, மூன்றாவது கட்டத்தில் நான்கு நெல்மணி, நான்காவது கட்டத்தில் எட்டு நெல் மணி என்ற விகிதம் இந்தச் சதுரங்கக் கட்டத்தில் உள்ள எல்லாக் கட்டங்களுக்கும் நெல்மணி தா” என்றார். “இவ்வளவு தானா?” என்று நினைத்துக்கொண்டு இவன், அவர் சொன்னது போன்று கட்டத்தில் நெல்மணிகளை வைத்து வந்தான். இருபத்து ஒன்றாம் கட்டம் வந்ததும், பத்து இலட்சத்திற்கு மேல் நெல் மணிகள் வந்தன. முப்பத்து ஒன்றாம் கட்டம் வந்ததும் நூறு கோடி நெல் மணிகளுக்கு மேல் நெல்மணிகள் தர வேண்டி வந்தது. இதைக்கண்டு அதிர்ந்து போன இவன், துறவியின் காலில் விழுந்து, “ஐயா! என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். இது என்னுடைய ஆணவத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய தண்டனை” என்றான். துறவி அவனை மன்னித்து, தனக்கு எதுவுமே வேண்டாம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.
ஆம், இந்நிகழ்வில் வரும் துறவி தன்னுடைய ஞானத்தால், சதுரங்க விளையாட்டில் தன்னை வெல்ல யாருமில்லை என்று நினைத்த மன்னனை வெற்றிகொண்டார். நற்செய்தியில் இயேசு, மறைநூல் அறிஞர்கள் கேட்ட கேள்விக்கு ஞானம் நிறைந்த பேச்சால் பதிலளித்து, அவர்களை பேசவிடாமல் செய்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதும், “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்?” என்று தலைமைக் குருக்களும், அவர்களைச் சார்ந்தவர்களும் கேள்வி கேட்கின்றபொழுது, இயேசு அவர்களிடம், “திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மண்ணகத்திலிருந்து வந்ததா?” எனப் பதில் கேள்வி கேட்டு, அவர்கள் பேசமுடியாதவாறு செய்கின்றார். இயேசு தன்னிடம் கேள்வி கேட்டவர்களிடம் இவ்வாறு பதிலளித்தார் எனில், அவர் ஞானத்தின் ஊற்றாய் இருந்தார். இன்றைய முதல் வாசகம், “ஞானத்தில்பால் என் உள்ளத்தைச் செலுத்தினேன்; தூய்மையில் அதைக் கண்டுகொண்டேன்” என்கிறது. எனவே, இயேசுவைப் போன்று ஞானத்தோடு பேச, அதை நாம் முதன்மையாகத் தேடுவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 1: 7).
விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் இயேசுவுக்கு அருளப்பட்டிருக்கிறது (மத் 28: 18).
நாம் ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழியில் நடந்தால், எவ்வளவு பெரிய பிரச்சனையையும் நம்மால் எதிர்கொள்ள முடியும்
இறைவாக்கு:
‘ஞானம் ஒளிமிக்கது; மங்காது; அதன்பால் அன்புகூர்வோர் அதை எளிதில் கண்டுகொள்வர்’ (சாஞா 6: 12) என்கிறது சாலமோனின் ஞான நூல். எனவே, ஞானத்தின் ஊற்றாம் ஆண்டவரில் நம்பிக்கை கொண்டு, அவர் அளிக்கும் ஞானத்தால் வாழ்வில் வரும் சவால்களைத் துணிவோடு எதிர்கொண்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed