நற்செய்தி பறைசாற்றும் பிறரன்பிற்கு, நடைமுறை வாழ்வில் சான்று பகர, குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று காலத்தில், இந்த சான்றினை இன்னும் அதிகமாக மெய்ப்பிக்க நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பீன்ஸ் ஆயர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு செய்தியில் கூறியுள்ளார்.
சனவரி 26, இச்செவ்வாயன்று, பிலிப்பீன்ஸ் ஆயர்கள், தங்கள் 121வது நிறையமர்வுக் கூட்டத்தை, வலைத்தளம் வழியே துவங்கியதையொட்டி, திருத்தந்தை அனுப்பிய இச்செய்தியை, பிலிப்பீன்ஸ் நாட்டின் திருப்பீடத் தூதராகப் பணியாற்றும் பேராயர் Charles Brown அவர்கள் வாசித்தார்.
இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்குத் தேவையான படைப்பாற்றல் மிக்க தீர்வுகளை, நடைபெறும் ஆயர்களின் சந்திப்பு காணும் என்பதையும், துன்புறும் அனைத்து மனிதர்களும் மாண்புநிறைந்த வாழ்வைப் பெறுவதற்கு பிலிப்பீன்ஸ் தலத்திருவை சிறந்த வழிகளை அமைக்கும் என்பதையும், தான் நம்புவதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.
பிலிப்பீன்ஸ் ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Romulo Valles அவர்கள் தலைமையேற்று நடத்திய இந்தக் கூட்டத்தில், கோவிட் பெருந்தொற்றையொட்டி மேற்கொள்ளவேண்டிய முயற்சிகள், மற்றும் 2020ம் ஆண்டில் பிலிப்பீன்ஸ் நாட்டைத் தாக்கியுள்ள புயல்களினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆற்றும் பணிகள் ஆகியவை விவாதிக்கப்பட்டன என்று ஆயர் பேரவையின் அறிக்கை கூறுகிறது.
பிலிப்பீன்ஸ் நாட்டில் கிறிஸ்தவம் தோன்றியதன் 500ம் ஆண்டு நிறைவு விழா 2021ம் ஆண்டில் கொண்டாடப்படும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, இந்த விழா 2022ம் ஆண்டு கொண்டாடப்படும் என்பதும், அதன் தொடர்பாக இன்னும் சில முடிவுகளும், இந்த அமர்வில் மீண்டும் விவாதிக்கப்பட்டன.