கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் வழங்கும் நடவடிக்கையை, அரசியலாக்கக் கூடாது, மாறாக, அவற்றை, அனைவரும் பெறுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று, திருப்பீடத் துறை ஒன்று அழைப்பு விடுத்துள்ளது.
உலகின் பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுவருவதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, திருப்பீட வாழ்வுக் கழகம், கோவிட்-19 பெருந்தொற்றை ஒழிப்பதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளில், எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசிகள் தயாரிப்பு, மற்றும் அவை விநியோக்கிக்கப்படுவது தொடர்பாக, மிகக் கடுமையான பிரச்சனைகள் நிலவும்வேளை, இந்நடவடிக்கையில், வெளிப்படையான தன்மை மற்றும், ஒத்துழைப்பு அவசியம் என்று, திருப்பீட வாழ்வுக் கழகம் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.
திருப்பீட வாழ்வுக் கழகத்தின் தலைவரான பேராயர் வின்சென்சோ பாலியா அவர்களும், அக்கழகத்தின் சான்சிலர் அருள்திரு ரென்சோ பெகோராரோ அவர்களும் கையெழுத்திட்டு சனவரி 22, இவ்வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளில் போட்டிமனப்பான்மையைத் தவிர்த்து, நாடுகளிடையே ஒத்துழைப்பு நிலவவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கள் நாடுகளின் மக்களுக்குத் தேவையான தடுப்பூசிகளைப் பெறுவதற்கென, நாடுகளுக்கு இடையே போட்டிகள் இடம்பெறுவதைக் குறிப்பிட்டுள்ள இந்த அறிக்கை, இவ்விவகாரத்தில், தடுப்பூசிகள், அனைத்து மக்களுக்கும் கிடைப்பதற்கு உதவியாக, உலக அளவில் ஒப்பந்தங்கள் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும் கூறியுள்ளது.
இவ்விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் வர்த்தக குறுக்குவழிகள் தவிர்க்கப்படவேண்டும் என்றும், வருங்காலத்தில், தடுப்பூசிகளின் விலை, கட்டுப்படுத்தப்பட்டதாக அமையவேண்டும் என்றும், திருப்பீட வாழ்வு கழகம் கூறியுள்ளது.