மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘வந்து பாருங்கள்’, என இயேசு கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து பேசினார்.
தன் நூலக அறையிலிருந்து வழங்கிய நண்பகல் மூவேளை செபவுரையில், வந்து பாருங்கள் என இயேசு தன் முதல் சீடர்களிடம் கூறியது, வெறும் அழைப்பு அல்ல, மாறாக, ஆழ்ந்த சந்திப்பிற்கான ஓர் அழைப்பு என்று, எடுத்துரைத்த திருத்தந்தை, இரு சீடர்களுடன் நடந்து சென்ற திருமுழுக்கு யோவான், இயேசுவைப் பார்த்து, இதோ, கடவுளின் ஆட்டுக்குட்டி, எனக் கூறிய வார்த்தைகளையும் சுட்டிக்காட்டினார்.
திருமுழுக்கு யோவான் சுட்டிக்காட்டிய இயேசுவைப் பின்பற்றிய அந்திரேயா, அவரோடு உரையாடியபின் திரும்பி, தன் சகோதரராகிய சீமோன் பேதுருவிடம், நாங்கள் மெசியாவைக் கண்டோம்’ என கூறுகின்றார் என்பதையும் எடுத்துரைத்த திருத்தந்தை, இயேசுவோடு உரையாடிய இந்த இரு சீடர்களின் உள்ளங்களும், மகிழ்வாலும், புது ஒளியாலும், கொழுந்துவிட்டு எரிந்ததைக் காணமுடிகிறது என்றார்.
கிறிஸ்துவை சந்திக்கும் அனுபவத்தைக் குறித்து சிறிது நேரம் நின்று நிதானமாக சிந்திப்போம், ஏனெனில், அவரோடு இணைந்திருக்க இயேசுவால் நமக்கு விடப்படும் அழைப்பு, அவர் அன்பின் துவக்க நிலையாகும் எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வாழ்வுக்கு, விசுவாசத்திற்கு, குறிப்பிட்ட ஒரு வாழ்வு நிலைக்கு, என வெவ்வேறு அழைப்புக்களை வெவ்வேறு காலங்களில் விடும் இறைவன், முதலில், வாழ்வுக்கான அழைப்பின் வழியாக நம்மை முழு மனிதராக்குவதுடன், விசுவாசத்திற்கான அழைப்புடன் நம்மை இறைக் குடும்பத்தின் குழந்தைகளாக மாற்றுகிறார், மற்றும், இறுதியாக, நம் வாழ்வு நிலையை தேர்ந்தெடுக்க, அதாவது, திருமணத்திற்கோ, துறவு எனும் அர்ப்பண வாழ்வுக்கோ நம்மை அழைக்கிறார் என மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆயிரம் வழிகளில் வரும் கடவுளின் அழைப்பைக் கண்டு அஞ்சி விலகவோ, அவற்றை மறுக்கவோ செய்யாமல், அன்பால் விடப்படும் அந்த அழைப்புகளுக்கு அன்பாலே பதில் வழங்குவோம் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளுக்கும் உடன் மனிதர்களுக்கும் பணியாற்றுவதாக நம் பதில்மொழி இருப்பதுடன், இறைவனைக் கண்டுகொண்டதை மற்றவர்களுக்கு எடுத்துரைப்பதாகவும் அது இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்
Source: New feed