பொதுக்காலம் முதல் வாரம்
புதன்கிழமை
I எபிரேயர் 2: 14-18
II மாற்கு 1: 29-39
இரக்கமுள்ள மருத்துவரும் தலைமைக்குருவுமான இயேசு
இரக்கத்தோடு மருத்துவச் சேவை செய்யும் தம்பதி:
மகாராஸ்டிரா மாநிலம், கத்சிரோலி மாவட்டம், ஹெமல்கசா (Hemalkasa) என்றொரு குக்குராமத்தில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மருத்துவச் சேவை செய்து வருபவர்கள் பிரகாஸ் முரளிதர் – மன்டகினி தம்பதி.
1973 ஆம் ஆண்டு, பிரகாஷ் முரளிதர் பழங்குடி மக்கள் வாழும் இக்கிராமத்திற்குச் சென்றபொழுது, அங்கிருந்தவர்கள் போதிய வசதியில்லாமலும் வேலைவாய்ப்பு இன்றியும், சரியான ஊட்டச் சத்து இல்லாமலும் இருப்பதைக் கண்டார். உடனே இவர் தான் பணிசெய்வதற்கு இதுவே சரியான இடம் என முடிவுசெய்து கொண்டு, தன் மனைவி மன்டகினியோடு வந்து அங்குப் பணிசெய்யத் தொடங்கினார். எந்தவொரு வசதியில்லாது இருந்த அந்தக் கிராமத்தில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கும், பிற சிகிச்சை செய்வதற்கும் சவாலாக இருந்தாலும், இரக்கத்தோடும் தன்னலமின்றியும் மருத்துவச் சேவை செய்தார் இவர், மட்டுமல்லாமல், அக்கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து, பலருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கச் செய்தார். இன்றைக்கு ஹெமல்கசா கிராமமே பிரகாஷ் முரளிதரின் தன்னலமற்ற மருத்துவச் சேவையினால் மிகவும் உயர்ந்து இருக்கின்றது.
மருத்துவர் பிரகாஷ் இரக்கமுள்ள மருத்துவரான இருந்து, மக்கள் நடுவில் தன்னலமின்றி மருத்துவச் சேவை செய்தார். இன்றைய இறைவார்த்தை இயேசுவை இரக்கமுள்ள மருத்துவராக எடுத்துக்கூறுகின்றது.
திருவிவிலியப் பின்னணி
நற்செய்தியில் இயேசு, சீமோன் பேதுருவின் மாமியாருக்கு நலமளிக்கின்றார். இன்னும் பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களுக்கு நலமளிக்கின்றார். இவ்வாறு இயேசு உடல், உள்ள நோயினால் வருந்திய மக்களுக்கு நலமளித்து, நலமளிக்கும் மருத்துவராக விளங்கினார். இயேசு கிறிஸ்து இப்படிப் பல்வேறு பிணிகளால் வருந்தியவர்களுக்கு நலமளிக்கக் காரணம், அவர் இரக்கமுள்ளவராக இருந்தார் என்பதாலேயே ஆகும். இது குறித்து இன்றைய முதல் வாசகத்தில் எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் கூறும்பொழுது, “கடவுள் பணியில் இயேசு இரக்கமும் நம்பிக்கையும் உள்ள தலைமைக்குருவாய் இருந்தார்…” என்கிறார். இயேசு இரக்கமுள்ளவராய் இருந்துபோல், நாமும் இரக்கமுள்ளவர்களாக இருப்பது இன்றிமையாதது.
சிந்தனைக்கு:
இயேசுவிடமிருந்து நலம்பெறும் நாம் சீமோன் பேதுருவின் மாமியாரைப் போன்று மற்றவருக்குப் பணிசெய்கின்றோமா?
இயேசுவைப் போன்று நோயாளர்களிடம் இரக்கம் காட்டுகின்றோமா?
இரக்கம் காட்டாதோருக்கு இரக்கமற்ற தீர்ப்புதான் கிடைக்கும் (யாக் 2: 13)
இறைவாக்கு:
‘உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பதுபோல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்’ (லூக் 6: 36) என்பார் இயேசு. எனவே, நாம் தந்தைக் கடவுளைப் போன்று, அவர் மகனும் நல்ல மருத்துவரும், தலைமைக் குருவுமான இயேசுவைப் போன்று இரக்கமுள்ளவர்களாய் இருந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed