மணமகனின் தோழர் அவர் சொல்வதைக் கேட்டு பெருமகிழ்வடைகிறார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 3: 22-30
அக்காலத்தில்
இயேசுவும் அவர்தம் சீடரும் யூதேயப் பகுதிக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களோடு தங்கித் திருமுழுக்குக் கொடுத்து வந்தார். யோவானும் சலீம் என்னும் இடத்துக்கு அருகில் உள்ள அயினோனில் திருமுழுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஏனெனில் அங்குத் தண்ணீர் நிறைய இருந்தது. மக்கள் அங்கு சென்று திருமுழுக்குப் பெற்று வந்தார்கள். யோவான் சிறையில் அடைக்கப்படுமுன் இவ்வாறு நிகழ்ந்தது.
ஒரு நாள் யோவானின் சீடர் சிலருக்கும் யூதர் ஒருவருக்கும் இடையே தூய்மைச் சடங்குபற்றி விவாதம் எழுந்தது. அவர்கள் யோவானிடம் போய், “ரபி, யோர்தான் ஆற்றின் அக்கரைப் பகுதியில் உம்மோடு ஒருவர் இருந்தாரே! நீரும் அவரைக் குறித்துச் சான்று பகர்ந்தீரே! இப்போது அவரும் திருமுழுக்குக் கொடுக்கிறார். எல்லாரும் அவரிடம் செல்கின்றனர்” என்றார்கள்.
யோவான் அவர்களைப் பார்த்து, “விண்ணிலிருந்து அருளப்படா விட்டால் எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது. ‘நான் மெசியா அல்ல; மாறாக அவருக்கு முன்னோடியாக அனுப்பப்பட்டவன்’ என்று நான் கூறியதற்கு நீங்களே சாட்சிகள். மணமகள் மணமகனுக்கே உரியவர். மணமகனின் தோழரோ அருகில் நின்று அவர் சொல்வதைக் கேட்கிறார்; அதில் அவர் பெருமகிழ்ச்சி அடைகிறார். என் மகிழ்ச்சியும் இது போன்றது. இம்மகிழ்ச்சி என்னுள் நிறைந்துள்ளது. அவரது செல்வாக்குப் பெருக வேண்டும்; எனது செல்வாக்குக் குறைய வேண்டும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
I 1 யோவான் 5: 14-21
II யோவான் 3: 22-30
“நாம் வேண்டுவதற்குச் செவிசாய்க்கும் இறைவன்”
குருமட அதிபரின் வேண்டுதலைக் கேட்ட இறைவன்
முன்பொருமுறை அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லஸ் குருமடத்தைத் தொடர்ந்து நடத்த முடியாதவாறு நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் குருமடத்தின் அதிபர், அடுத்து என்ன செய்வது என்று தெரியாது திகைத்தார். அப்பொழுது அதே குருமடத்தில் பணியாற்றி வந்த அருள்பணியாளர் ஒருவர் அவரிடம், “இறைவனிடம் நமது குருமடத்தின் தேவையைச் சொல்லி, மன்றாடுவோம். நிச்சயம் அவர் நம்முடைய வேண்டுதலுக்குச் செவிசாய்ப்பார்” என்று உறுதியளித்தார்.
இதையடுத்து குருமடத்தில் பணியாற்றிய எல்லா அருள்பணியாளர்களும் கூடிவர, குருமட அதிபர் இறைவனிடம் இவ்வாறு வேண்டினார்: “இறைவா! உமது படைப்பாகிய இப்பூவுலகில் உள்ள மலைகளில் மேய்ந்து வரும் ஆயிரக்கணக்கான கால்நடைகளில் நீர் ஒருசில கால்நடைகளை விற்று, பத்தாயிரம் டாலர் மட்டும் எங்களுக்கு அனுப்பி வையும்.” குருமட அதிபர் இவ்வாறு வேண்டிக்கொண்ட சில நாள்கள் கழித்து, ஒருவர் குருமடத்திற்கு வந்தார். அவர் குருமட அதிபரிடம் பத்தாயிரம் டாலரைக் கொடுத்து, “இந்தப் பத்தாயிரம் டாலரும் என்னிடம் மிகுதியாக இருந்த கால்நடைகளை விற்றதிலிருந்து வந்தது” என்றார். இதைக் கேட்டு குருமட அதிபர் இறைவனைப் போற்றிப் புகழ்ந்தார்.
குருமட அதிபரின் இறைவேண்டல் கடவுளின் திருவுளத்திற்கேற்ப அமைந்திருந்தால், அவருடைய இறைவேண்டல் கேட்கப்பட்டது. இன்றைய இறைவார்த்தை நமது வேண்டுதல் எப்பொழுது கடவுளால் கேட்கப்படும் என்ற கேள்விக்குப் பதில் தருகின்றது.
திருவிவிலியப் பின்னணி:
கடவுளிடம் நாம் நம்முடைய வேண்டுதலை எடுத்து வைக்கும்பொழுது, பல நேரங்களில் அதற்குப் பதில் கிடைக்கலாம்; சில நேரங்களில் அதற்குப் பதில் கிடைக்காமலேயே போகலாம். இன்றைய முதல் வாசகத்தில் திருத்தூதர் புனித யோவான், “நாம் கேட்பது கடவுளுடைய திருவுளத்திற்கேற்ப அமைந்திருப்பின், அவர் நமக்குச் செவிசாய்க்கின்றார்” என்கிறார். இதே கருத்தினைத்தான் இன்றைய நற்செய்தியில் இயேசு, “விண்ணகத்திலிருந்து அருளப்படாவிட்டால், எவரும் எதையும் பெற்றுக்கொள்ள முடியாது” என்கிறார். ஆகவே, நாம் இறைவனிடம் வேண்டும்பொழுது, அவரது திருவுளத்திற்கேற்ப வேண்டுவோம். ஒருவேளை நம்முடைய இறைவேண்டல் கேட்கப்படவில்லை எனில், அதை இறைத்திருவுளமாகக் கொள்வோம்.
சிந்தனைக்கு:
நமது இறைவேண்டல் கேட்கப்படாமைக்கு, புனித யாக்கோபு சொல்வது போல் நம்முடைய தீய எண்ணமும் காரணமா? (யாக் 4: 3)
கடவுளின் திருவுளத்திற்குப் பணிந்து நடக்கத் தயாரா?
இறைவேண்டலை கடவுளோடு உரையாடப் பயன்படுத்தாமல், அவரிடம் நம்முடைய தேவைகளைக் கேட்பதற்கு மட்டும் பயன்படுத்துகிறவர்களா நாம்?
ஆன்றோர் வாக்கு:
‘சாத்தான். இறைவனிடம் நாம் வேண்டாதவாறு பார்த்துக் கொள்கிறது. அதே நேரத்தில் எப்பொழுது நாம் இறைவனிடம் வேண்டுகின்றோமோ அப்பொழுது அது நடுங்கத் தொடங்குகின்றது’ என்பர் சாமுவேல் சாத்வித். எனவே, வல்லமை மிக்க இறைவேண்டலை இறைவனின் திருவுளத்திற்கேற்ப எழுப்பி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed