திருவருகைக் காலம்
(டிசம்பர் 22)
லூக்கா 1: 46-56
“உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகிறார்”
நிகழ்வு
நகரத்தில் இருந்த பையன்கள் இருவர் கோடை விடுமுறைக்காகக் கிராமத்தில் இருந்த தங்களது தாத்தாவின் வீட்டிற்கு வந்திருந்தார்கள். தாத்தாவும் அவர்களை நல்ல விதமாய்க் கவனித்துக்கொண்டு, கிராமத்தில் இருந்த பல இடங்களைச் சுற்றிக்காட்டினார்.
ஒருநாள் தாத்தா பேரன்கள் இருவரையும் தன்னுடைய வயலுக்கு கூட்டிக்கொண்டு போனார். அங்கு அவர்கள் இருவரையும் அருகில் இருந்த ஒரு மாமரத்தின் நிழலில் அமர வைத்துவிட்டு, வயலில் இறங்கி வேலை பார்க்கத் தொடங்கினார். அப்பொழுது இரண்டு பேரன்களில் ஒருவன் மற்றவனிடம், “இந்த வயலைப் பார்த்தாயா..! இதில் இரண்டு வகையான கதிர்கள் இருக்கின்றன. நேராகவும் உறுதியாகவும் இருக்கின்ற கதிர்கள் ஒருவகை. தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு, குடிகாரன் போல் தள்ளாடிக் கொண்டிருக்கும் கதிர்கள் இன்னொரு வகை” என்றான்.
“ஆமாம். நீ சொல்வது சரிதான். ஒருவேளை நான் மட்டும் இந்த வயலின் உரிமையாளராக இருந்தால், தலையை நேராக வைத்துக்கொண்டு, உறுதியாக இருக்கும் கதிர்களை எல்லாம் விட்டுவிட்டு, தலையைக் கீழே தொங்கப் போட்டுக்கொண்டு, குடிகாரன் போல் தள்ளாடிக்கொண்டிருக்கும் கதிர்களை எல்லாம் வெட்டி வீசிவிடுவேன்” என்றான் இன்னொரு பேரன்.
இதை வயலில் வேலை செய்துகொண்டிருந்தவாறு கேட்டுக்கொண்டிருந்த தாத்தா, “தம்பிகளா! நீங்கள் சொல்வதுபோல் தலையை நிமிர்த்தி நேராக இருக்கும் கதிர்களை எல்லாம் அப்படியே விட்டுவிட்டு, தலை குனிந்துவாறு தள்ளாடிக் கொண்டிருக்கும் கதிர்களை வெட்டி வீசிவிட முடியாது. ஏனென்றால், தலையை நிமிர்த்தி நேராக இருக்கும் கதிர்கள் எல்லாம் கதிர்களே அல்ல, அவை களைகள். அதனால் அவைதான் வெட்டி வீசியெறியப்படவேண்டும். தலை குனிந்தவாறு இருக்கும் கதிர்களோ முற்றிய கதிர்கள். அவை களஞ்சியத்தில் சேர்த்து வைக்கப்பட வேண்டும்… மனிதர்களிலும்கூட ஒருசிலர் இப்படித்தான் தாங்கள் பெரியவர்கள், உயர்த்தவர்கள் என்று நெஞ்சை நிமிர்த்தி வலம்வருவார்கள். இவர்கள் எல்லாம் களைகளைப் போன்று ஒரு நாள் வெட்டி வீசப்படுவார்கள்; ஆனால், தாழ்ச்சி மிகுந்த உள்ளத்தோடு இருப்பவர்களோ ஒருநாள் உ(ய)ரிய வெகுமதியைப் பெறுவார்கள்.”
ஆம், உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போர் சிதறடிக்கப்படுவர்; தாழ்நிலையில் இருப்பவர் அல்லது தாழ்சியுள்ளவர் உயர்த்தப்பபடுவர். அதைத்தான் மேலே உள்ள நிகழ்வும் இன்றைய நற்செய்தி வாசகமும் எடுத்துக்கூறுகின்றன. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
சிதறடிக்கப்படும் செருக்குற்றோர்!
இன்றைய நற்செய்தி வாசகம், நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது. நேற்றைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் எலிசபெத் மரியாவை, “ஆண்டவர் உமக்குச் சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்” என்று வாழ்த்தியிருப்பார். இதனால் மரியா ஆண்டவரைப் போற்றிப் புகழத் தொடங்குவார். மரியா ஆண்டவரைப் போற்றிப் புகழும் பாடல் 1 சாமு 2: 1-10 இல் வருகின்ற அன்னாவின் பாடலை ஒத்திருந்தாலும், மரியாவின் பாடல் பல காரணங்களால் தனித்துவமாக இருக்கின்றது.
மரியா தன்னுடைய பாடலில், “ஆண்டவர் உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரைச் சிதறடித்து வருகின்றார்” என்கின்றார். உலக வரலாற்றிலும் சரி, மீட்பின் வரலாற்றிலும் சரி மரியாவின் இந்தப் பாடல் வரிகள் அப்படியே அரங்கேறி இருக்கின்றன. இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் இருப்பதுதான் “மனிதர்களின் ஆணவம் அடக்கப்படும்; அவர் தம் செருக்கு அகற்றப்படும்” (எசா 2: 17) என்கிற இறைவாக்கினர் எசாயாவின் வரிகள்.
உயர்த்தப்படும் தாழ்ச்சியுள்ளோர் அல்லது தாழ்நிலையில் இருப்போர்
‘செருக்குடன் சிந்திப்போரை ஆண்டவர் சிதறடிக்கின்றார்” என்று பாடிய மரியா, தொடர்ந்து, “தாழ்நிலையில் இருப்போரை உயர்த்துகின்றார்” என்று பாடுகின்றார். மரியா பாடிய இந்தப் பாடல் வரிகளுக்கு அவரே சான்றாக இருக்கின்றார். ஆம், நாசரேத்து என்ற சாதாரண கிராமத்தில் பிறந்த மரியா, ஆண்டவரின் தூதரிடம் மிகுந்த தாழ்ச்சியோடு, “நான் ஆண்டவரின் அடிமை” (லூக் 1: 38) என்றார். அதனால் அவர் எல்லாத் தலைமுறையினரும் பேறுபெற்றவர் என்று அழைக்கும் சிறப்புப் பெற்றார். நாமும் இறைவனுக்கு முன்பாகத் தாழ்ச்சியோடு நடக்கையில் அவரால் மிகவும் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.
எனவே, நாம் மரியாவைப் போன்று தாழ்ச்சியோடு வாழக் கற்றுக்கொள்வோம்.
சிந்தனை
‘நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், தாழ்ச்சியோடு நடந்துகொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்’ (மீக் 6:8) என்பார் இறைவாக்கினர் மீக்கா. ஆகையால், நாம் நம்முடைய அன்றாட வாழ்வில் ஆணவத்தோடு அல்ல, நேர்மையோடும் இரக்கத்தோடும் எல்லாவற்றிற்கும் மேலாக தாழ்ச்சியோடும் நடந்து கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed