![](https://www.addaikalanayaki.com/wp-content/uploads/2020/12/dhdh.jpg)
I எசாயா 61: 1-2a, 10-11
II 1தெசலோனிக்கர் 5: 16-24
III யோவான் 1: 6-8, 19-28
“ஆண்டவரில் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்”
நிகழ்வு
இரஷ்யாவை ஆண்டுவந்த வந்த மன்னன் ஒருவனுடைய அரசபையில் பெண்ணொருவர் பணிபுரிந்து வந்தார். ஒருநாள் இவர் ஒரு மறைப்பணியாளர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டார். மட்டுமல்லாமல் இவரும் கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கத் தொடங்கினார்.
இச்செய்தி மன்னனுடைய செவிகளை எட்டியது. இதனால் அவன் வெகுண்டெழுந்து, அந்தப் பெண்மணியைப் பிடித்துச் சிறையில் அடைத்துவைத்து, இருபத்து நான்கு மணிநேரங்களுக்குக் கடுமையாகச் சித்திரவதை செய்யச் சொன்னான். சிறையதிகாரியும் மன்னன் இட்ட ஆணைக்கு இணங்க, அந்தப் பெண்மணியைக் கடுமையாகச் சித்திரவதை செய்தார்.
இருபத்து நான்கு மணிநேரங்கள் முடிந்த பின் மன்னன், சிறையதிகாரியிடம் அந்தப் பெண்மணியை தன் முன்னே அழைத்து வரச்சொன்னான். அவரும் அவ்வாறு செய்தார். அப்பொழுது மன்னன் அந்தப் பெண்மணியிடம், “கிறிஸ்துவின்மீது நீ வைத்திருக்கும் நம்பிக்கையைத் துறந்துவிட்டு, என்னுடைய அரசபையில் இணைந்து மகிழ்ந்திருக்கத் தயாரா?” என்றான். அதற்கு அந்தப் பெண்மணி, “இத்தனை ஆண்டுகளும் நான் உங்களுடைய அரசபையில் இருந்து மகிழ்ந்ததை விடவும், ஒரு நாள் என் ஆண்டவர் இயேசுவோடு ஒன்றித்திருந்ததால் கிடைத்த மகிழ்ச்சி மிகுதி. அதை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது” என்றார்.
ஆம், நாம் ஆண்டவரில் நிலைத்திருக்கும்பொழுது அல்லது ஆண்டவரோடு ஒன்றித்திருக்கும்பொழுது கிடைக்கும் மகிழ்ச்சியை வார்த்தையால் விவரித்துச் சொல்ல முடியாது. ‘மகிழ்ச்சியின் ஞாயிறு’ என்று அழைக்கப்படும், திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, அவரது அன்பில் நிலைத்திருப்பதால் ஒருவருக்குக் கிடைக்கும் மகிழ்ச்சி எத்தகையது என்பதைப் பற்றி எடுத்துச் சொல்கின்றது. அதைப் பற்றி இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்கப் பவுல் விடுக்கும் அழைப்பு
திருவருகைக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு என்றாலே, ஆண்டவர் தரும் மகிழ்ச்சியைப் பறைசாற்றக் கூடியதாக இருக்கும். இன்றைய இறைவார்த்தையும் அதற்கு விதிவிலக்கல்ல. இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல், “எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்றார். புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் இவ்வாறு கூறுவதற்குக் காரணம், அவர்கள் புனித பவுல் அறிவித்த நற்செய்தியை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் திறந்த மனத்தோடும் ஏற்றுக்கொண்டார்கள் என்பதாலேயே ஆகும். அதனாலேயே புனித பவுல் தெசலோனிக்க மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டு இத்தகைய வார்த்தைகளைக் கூறுகின்றார்.
“எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருங்கள்” என்று தெசலோனிக்க மக்களிடம் கூறுகின்ற புனித பவுல், எவ்வாறு மகிழ்ச்சியாக இருப்பது என்பதற்கான வழிமுறையையும் எடுத்துச் சொல்கின்றார். இன்றைக்குப் பலர் மகிழ்ச்சியைத் தவறான வழிகளில் சென்று, எதிலெல்லாமோ தேடிக்கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் புனித பவுல், அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து, நல்லதைப் பற்றிக்கொண்டு, அதன்மூலம் மகிழ்ச்சியாக இருங்கள் என்கின்றார். இவ்வுலகில் நல்லது அல்லது நல்லவர் என்றால், அது ஆண்டவர் ஒருவரே (மத் 19: 17). ஆகவே, நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு மகிழ்ந்திருக்க வேண்டும் என்று புனித பவுல் அறைகூவல் விடுக்கின்றார். இன்றைய நற்செய்தியில் நல்லவராம் கடவுளைப் பற்றிக்கொண்டு, அவருக்குச் சான்று பகர்ந்த திருமுழுக்கு யோவானைக் குறித்து வாசிக்கின்றோம். அவர் எப்படி ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார் என்பதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
ஆண்டவருக்குச் சான்று பகர்வதில் மகிழ்ந்திருந்த திருமுழுக்கு யோவான்
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், எருசலேமிலிருந்து யூதர்கள் அனுப்பி வைத்த குருக்களும் லேவியர்களும் திருமுழுக்கு யோவானிடம் வந்து, நீர் யார், நீர் ஏன் திருமுழுக்குக் கொடுக்கின்றீர் என்று கேட்கின்றபொழுது, அவர் அவர்களிடம், நான் மெசியா அல்ல, இறைவாக்கினரும் அல்ல என்று சொல்லிவிட்டு, “ஆண்டவருக்காக வழியைச் செம்மையாக்குங்கள் என பாலைநிலத்தில் குரல் ஒன்று கேட்கின்றது என்று இறைவாக்கினர் எசாயா உரைத்தது என்னைப் பற்றியே” என்று கூறுகின்றார் (எசா 40: 3). தொடர்ந்து அவர் அவர்களிடம், “நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன்… அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” என்கின்றார்.
திருமுழுக்கு யோவான் தான் யார் என்பதை நன்றாக உணர்ந்திருந்தார். அதனால்தான் அவர் மிகுந்த தாழ்சியோடும் மகிழ்ச்சியோடும் ஆண்டவருக்குச் சான்று பகர்ந்தார். திருமுழுக்கு யோவான் நினைத்திருந்தால், நானே மெசியா என்று சொல்லியிருக்கலாம். மக்களும் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்வதற்கு ஆயத்தமாகவே இருந்தார்கள். அதற்குக் காரணம் நான்கு நூற்றாண்டுகளாக இறைவனிடமிருந்து எந்தவொரு காட்சியும் அவர்களுக்கு வெளிப்படுத்தப்படவில்லை. இத்தகைய சூழ்நிலையில் திருமுழுக்குக் யோவான் தன்னுடைய போதனையாலும் தோற்றத்தாலும் மற்றவர்களை விட மாறுபட்டு இருந்ததால், அவர் மெசியாவாக இருக்கக்கூடும் என்று மக்கள் நினைத்தார்கள்; ஆனால் திருமுழுக்கு யோவான் தனக்குக் கிடைத்த இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தாமல், தான் யார் என்பதை மக்களுக்கு உணர்த்திவிட்டு, ஆண்டவரில் உறுதியாக இருந்து, மகிழ்ச்சியோடு அவருக்குச் சான்று பகர்கின்றார்.
ஆண்டவரில் நிலைத்திருப்பதால் கிடைக்கும் மகிழ்ச்சி
நல்லவராம் ஆண்டவரைப் பற்றிக்கொள்வதாலும், அவரைப் பற்றி மக்களுக்குச் சான்று பகர்வதாலும் கிடைக்கும் மகிழ்ச்சி எத்தகையது என்று இதுவரை நாம் பார்த்தோம். இப்பொழுது ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சி எத்தகைய பேறுபலன்களை உள்ளடக்கியிருக்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், பாபிலோனியர்களால் நாடுகடத்தப்பட்ட தென்னாட்டினர், அதாவது யூதேயா நாட்டினர் அன்னிய மண்ணில் அறுபது ஆண்டுகால அடிமை வாழ்வு வாழ்ந்த பிறகு, தங்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்றபொழுது, ஆண்டவர் அவர்களை எத்தகைய ஆசிகளால் நிரப்புவார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. “நிலம் முளைகளைத் துளிர்க்கச் செய்வது போன்றும், தோட்டம் விதைகளை முளைக்கச் செய்வது போன்றும், ஆண்டவராகிய என் தலைவர் பிற இனத்தார் பார்வையில் நேர்மையும் புகழ்ச்சியும் துளிர்த்தெழச் செய்வார்” என்று கூறும் இறைவாக்கினர் எசாயா, “ஆண்டவரில் நாம் பெரு மகிழ்ச்சி அடைவேன்” என்கின்றார்.
இறைவாக்கினர் எசாயா கூறுகின்ற இந்த வார்த்தைகள் அடிமை வாழ்வுக்குப் பின் சொந்த நாட்டிற்குத் திரும்பிய யூதேயா நாட்டினருக்கு ஆறுதலின் செய்தியை அளிப்பாக இருந்தாலும், மெசியாவின் வருகையின்பொழுது அவரில் நிலைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும் ஆசிகளாகவே இருக்கின்றது. எனவேதான் இயேசு, “நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவேற்றிற்று” (லூக் 4: 21) என்கின்றார்.
ஆகவே, நாம் புனித பவுல் கூறுவது போன்று நல்லவராம் ஆண்டவரைப் பற்றிக்கொண்டு, திருமுழுக்கு யோவானைப் போன்று ஆண்டவருக்குச் சான்று பகர்ந்து, அதன்மூலம் ஆண்டவர் தருகின்ற மகிழ்ச்சியில் திளைத்திருப்போம்.
சிந்தனை
நாம் மகிழ்ச்சியாய் இருக்கின்றோம் என்பதே நாம் இறையன்பில் நிலைத்திருக்கின்றோம் என்பதற்குச் சான்றாக இருக்கின்றது. ஆகவே, நாம் நம்முடைய வாழ்வாலும் வார்த்தையாலும் ஆண்டவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக மகிழ்ச்சியை, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed