குவாதலூப்பே அன்னை மரியாவுக்கு முடிசூட்டப்பட்ட நாளின், 125வது ஆண்டு நிறைவு கொண்டாடப்படும் வேளையில், இந்த அன்னையின் விழாவைச் சிறப்பிக்கும் அனைவருக்கும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைபேறு பலன்களை வழங்குவதாகக் கூறியுள்ளார்.
திருத்தந்தை வழங்கியுள்ள நிறைபேறு பலன்களைக் குறித்து அறிக்கை வெளியிட்ட, திருப்பீட பாவமன்னிப்பு சலுகைத் துறை, இந்த திருநாளை, இல்லத்தில் இருந்தவண்ணம் கொண்டாடும் அனைவரும் இப்பலன்களைப் பெறமுடியும் என்று கூறியுள்ளது.
கோவிட்-19 கொள்ளைநோய் உருவாக்கியுள்ள நெருக்கடி நிலையால், இவ்வாண்டு, குவாதலூப்பே திருத்தலத்தில் மக்கள் பங்கேற்பு ஏதுமின்றி நடைபெறும் பக்தி முயற்சிகள் மற்றும் திருப்பலி ஆகியவற்றில், தங்கள் இல்லங்களில் இருந்தவண்ணம் பங்கேற்கும் விசுவாசிகள் அனைவரும் இந்தப் நிறைபேறு பலன்களைப் பெறமுடியும் என்று திருத்தந்தை கூறியுள்ளார்.
விசுவாசிகள் தங்கள் இல்லங்களில், குவாதலூப்பே அன்னை மரியாவின் திரு உருவம் கொண்ட படத்துடன் பீடம் அமைப்பது, மெக்சிகோவில் அமைந்துள்ள குவாதலூப்பே திருத்தலத்தில் சிறப்பிக்கப்படும் திருப்பலியை, நேரடி ஒளிபரப்பில் காண்பது, பாவமற்ற அருள் நிலையில், ஆன்மீகத் திருவிருந்தில் பங்கேற்று, திருத்தந்தையின் கருத்துக்களுக்காக மன்றாடுவது ஆகியவை, இந்தப் பலன்களைப் பெறுவதற்கு விதிக்கப்பட்டுள்ள வரைமுறைகள்.
மெக்சிகோ, அமெரிக்க ஐக்கிய நாடு, கனடா, பிலிப்பீன்ஸ் ஆகிய நாடுகளில் குவாதலூப்பே அன்னை மரியாவின் பக்தி பெரிதும் வளர்ந்துள்ளது என்றாலும், இந்நாடுகளின் எல்லைகளைத் தாண்டி, உலகெங்கும் உள்ள மக்கள், இந்த விழாவில் பங்கேற்று, நிறைபேறு பலன்களைப் பெறுவதற்கு, மெக்சிகோ கர்தினால் Carlos Aguiar Retes அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
நோயுற்று, காயமுற்று கிடைக்கும் இவ்வுலகிலும், நம் இல்லங்களிலும், குவாதலூப்பே அன்னை மரியா வருகை தருவதற்குத் தேவையான ஏற்பாடுகளை, அனைவரும் செய்வோம் என்று, கர்தினால் Aguiar Retes அவர்கள் கூறியுள்ளார்.
குவாதலூப்பே அன்னை மரியாவின் திருநாளான டிசம்பர் 12ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில், குறைவான மக்களின் பங்கேற்போடு நடைபெறும் திருப்பலியை நிறைவேற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Source: New feed