கோவிட்-19 கொள்ளைநோயின் காரணமாக விதிக்கப்பட்ட பல தடைகளின் மத்தியில், ஆர்ஜென்டீனா நாட்டு மக்கள், அன்னை மரியாவின் ஆண்டை சிறப்புடன் கடைப்பிடித்தது குறித்து தான் மகிழ்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பிய ஒரு காணொளிச் செய்தியில் கூறியுள்ளார்.
திருத்தந்தையின் காணொளிச் செய்தி
2019ம் ஆண்டு, டிசம்பர் 8ம் தேதி துவங்கி, இவ்வாண்டு டிசம்பர் 8, இச்செவ்வாயன்று நிறைவு பெற்ற மரியன்னை ஆண்டு கொண்டாட்டங்களின் இறுதி நாளையொட்டி, திருத்தந்தை, ஒரு குறுகிய காணொளிச் செய்தி வழியே அந்நாட்டு பக்தர்களை வாழ்த்தியுள்ளார்.
மரியா, இயேசுவின் அன்னையாக மட்டுமல்ல, மாறாக, தலைசிறந்த ஒரு சீடராகவும் விளங்கினார் என்பதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இயேசுவை இவ்வுலகிற்குக் கொணர்ந்த ஒரு வாயிலாக விளங்கிய மரியா, தன் மகனை மிகவும் பிரமாணிக்கமாகப் பின்பற்றிய ஒரு சீடராகவும் விளங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ஜென்டீனாவில் 400 மற்றும் 500 ஆண்டு நிறைவகள்
ஆர்ஜென்டீனா நாட்டின் பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவர், ஒரு பாறையின் இடுக்கில் 400 ஆண்டுகளுக்கு முன், அன்னை மரியாவின் திரு உருவம் ஒன்றைக் கண்டுபிடித்ததன் நினைவாக, 2019ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி முதல், மரியன்னை ஆண்டினை, அந்நாட்டின் தலத்திருஅவை சிறப்பித்தது.
‘பள்ளத்தாக்கின் நமதன்னை’ என்ற பெயரில் வணங்கப்படும் இவ்வன்னையின் திரு உருவம் கண்டுபிடிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு நிறைவையொட்டி, நாடெங்கும், 400 இடங்களில் அன்னை மரியாவுக்கு கெபிகள் அமைப்பதற்கு தலத்திருஅவை தீர்மானித்துள்ளது.
மேலும், ஆர்ஜென்டீனா நாட்டில் முதல்முறையாக திருப்பலி கொண்டாடப்பட்டதன் 500ம் ஆண்டு நிறைவும், 2020ம் ஆண்டு அந்நாட்டில் சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: New feed