மக்கள் கூட்டத்தைக் கண்டு, இயேசு அவர்கள் மேல் பரிவு கொண்டார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 35- 10: 1, 6-8
அக்காலத்தில்
இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்.
திரண்டிருந்த மக்களை அவர் கண்டபோது அவர்கள் மேல் பரிவு கொண்டார்; அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார்கள். அப்பொழுது அவர் தம் சீடரை நோக்கி, “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
இயேசு தம் சீடர் பன்னிருவரையும் தம்மிடம் வரவழைத்தார். தீய ஆவிகளை ஓட்டவும், நோய் நொடிகளைக் குணமாக்கவும் அவர்களுக்கு அதிகாரம் அளித்தார்.
இயேசு பன்னிருவருக்கும் அறிவுரையாகக் கூறியது: “வழி தவறிப்போன ஆடுகளான இஸ்ரயேல் மக்களிடமே செல்லுங்கள். அப்படிச் செல்லும்போது ‘விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது’ எனப் பறைசாற்றுங்கள். நலம் குன்றியவர்களைக் குணமாக்குங்கள்; இறந்தோரை உயிர் பெற்றெழச் செய்யுங்கள்; தொழுநோயாளரை நலமாக்குங்கள்; பேய்களை ஓட்டுங்கள்; கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
“நலம் குன்றியவர்களாய் நலமாக்குங்கள்”
நிகழ்வு
இலவசமாக இதய அறுவைச் சிகிச்சைகளைச் செய்து வரும் மருத்துவரை உங்களுக்குத் தெரியுமா? சொல்கின்றேன் கேளுங்கள்.
சேலத்திற்கு அருகில் உள்ள ஒரு சிற்றூரைச் சார்ந்தவர் கோபி நல்லையன். தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் மருத்துவப் படிப்புப் படித்த இவர், எப்படியோ மருத்துவரானார். மருத்துவரான பின்புதான் தெரிந்தது, மருத்துவம் என்பது பணம் ஈட்டும் தொழிலல்ல, அது ஒரு சேவை என்பது ஆகவே, அச்சேவை எல்லாருக்கும் பயனுள்ள விதமாய்ச் செய்யவேண்டும் என்றால், அதற்கு நிறைய படிக்க வேண்டும் என்று முடிவுசெய்தார்.
உடனே இவர் தான் செய்து வந்த வேலையை விட்டுவிட்டு, எம்.எஸ்., எம்.சி.ஹச் போன்ற உயர்படிப்புகளைப் படிக்கத் தொடங்கினார். இதற்காக இவருக்கு எடுத்துக்கொண்ட ஆண்டுகள் மொத்தம் பதினொன்று. மருத்துவப் படிப்பிற்குப் பிறகு இவருக்குச் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூரில் வேலை கிடைத்தது. அங்கு இவர் தன்னுடைய வாழ்க்கைத் துணையான ஹேமாவோடு மருத்துவப் பணிகளைச் செய்யத் தொடங்கினார். இந்நிலையில்தான் இவர் தான் இருந்த பகுதியில், போதிய மருத்துவ விழிப்புணர்வு இன்றியும், தொழில்நுட்ப வசதியின்றியும், பணமின்றியும் குழந்தைகள் இதய நோயால் இறப்பதைக் கண்டார். இது குறித்து இவர் தன் மனைவியிடம் பேசியபொழுது, அவர் இவரிடம், “இவர்களுக்கு ஏதாவது செய்வோம்” என்று உறுதியளித்தார்.
இதையடுத்து இவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் மதுரைக்கு வந்து, அங்கு ‘Little Moppet Heart Foundation’ என்றோர் அமைப்பைத் தொடங்கி, தேனி, திண்டுக்கல், மதுரை, தூத்துக்குடி, இராமநாதபுரம் பரமக்குடி ஆகிய பகுதிகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தி, அதன்மூலம் கண்டறியப்படும் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக இதய அறுவைச் சிகிச்சை அளித்து, அவர்களுடைய உயிரைக் காப்பாற்றி வருகின்றார். இப்படி இவர் இதுவரைக்கும் நடத்திய இலவச இதய அறுவைச் சிகிச்சைகள் மொத்தம் முப்பத்து ஐந்து.
தான் படித்த மருத்துவத்தைக் கொண்டு பணம் ஈட்ட முயற்சி செய்யாமல், அதை இலவசமாகச் செய்து இதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு நலம் தரும், அவர்களுடைய உயிரைக் காப்பாற்றி வரும் மருத்துவர் கோபி நல்லையன் நம்முடைய கவனத்திற்கு உரியவராக இருக்கின்றார். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “நலம் குன்றியவர்களை நலமாக்குங்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகள் நமக்கு என்ன செய்தியை உணர்த்துகின்றன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நலம் குன்றியவர்களை நலமாக்கிய இயேசு
இன்றைய நற்செய்தி வாசகத்தை, இரண்டு பகுதிகளாக; ஏன், மூன்று பகுதிகளாகக்கூட எடுத்துக்கொள்ளலாம். முதற்பகுதியில் ஆண்டவர் இயேசு நகர்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்து, அங்கு விண்ணரசைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, அவர்கள் நடுவில் இருந்த நலம் குன்றியவர்களை நலப்படுத்துகின்றார். இயேசு மக்கள் நடுவில் செய்யும் வல்ல செயல்கள் யாவும், விண்ணரசு மக்கள் நடுவில் வந்துவிட்டது என்பதைப் பறைசாற்றுபவையாக இருக்கின்றன.
இயேசு மக்கள் நடுவில் விண்ணரசைப் பற்றிய நற்செய்தி அறிவித்து, நலம் குன்றியவர்களை நலப்படுத்திய பின்பு, தனக்குப் பின் தன்னுடைய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று விரும்புகின்றார். அதனால் அவர் அறுவடைக்காக ஆள்களை, சீடர்களைத் தேர்ந்துதெடுக்கின்றார். இதைப் பற்றி இன்றைய நற்செய்தியின் இரண்டாவது பகுதியில் வாசிக்கின்றோம்.
நலம் குன்றியவர்களை நலமாக்கச் சீடர்களுக்கு அழைப்பு
இயேசு, தன்னுடைய பணி தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதற்காகச் சீடர்களைத் தேர்ந்தெடுத்த பின்பு, அவர்களுக்கு அதிகாரம் அளித்து, பல்வேறு அறிவுரைகளைச் சொல்கின்றார். அவற்றில் ஓர் அறிவுரைதான், “நலம் குன்றியவர்களை நலமாக்குங்கள்” என்பதாகும். சீடர்கள் இயேசு தங்களுக்குக் கொடுத்த அதிகாரத்தைக் கொண்டு நலம்குன்றியவர்களை நலமாக்கினார்கள். நாமும் அத்தகைய அதிகாரத்தைப் பெற்றிருக்கின்றோம் என்பதால், நலம் குன்றியவர்களை நம்முடைய ஆறுதலளிக்கும் வார்த்தைகளாலும், அன்புச் செயல்களாலும் நலமளிக்க வேண்டும். இதற்கு நாம் தயாராக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘தளர்ந்து போன கைகளைத் திடப்படுத்துங்கள்; தள்ளாடும் முழங்கால்களை உறுதிப்படுத்துங்கள்’ (எசா 35: 3)’ என்பார் எசாயா இறைவாக்கினர். ஆகையால், நாம் இயேசு நமக்குத் தந்திருக்கும் அதிகாரத்தினாலும், அவருடைய ஆறுதலளிக்கும் வார்த்தைகளாலும் நலம் குன்றியவர்களுக்கு நலமளிப்போம்; தளர்ந்து போனவர்களைத் திடப்படுத்தி, வாழ்க்கையில் தள்ளாடுபவர்களை உறுதிப்படுத்துவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed