மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய முதல் வாசகத்தில்,
“ஆண்டவரே நீரே எங்கள் தந்தை; நாங்கள் களிமண், நீர் எங்கள் குயவன்; நாங்கள் அனைவரும் உம் கைவேலைப்பாடுகளே.” என இறைவாக்கினர் எசாயா நூலில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றுமேயில்லாத களிமண் குயவனின் விருப்பத்திற்கு ஏற்ற பாத்திரமாக மாறுவது போல் ஒன்றுமேயில்லாத நாம் ஆண்டவரிடம் நம்மை முழுமையாகஅவரது கையில் ஒப்படைத்து அவரது திட்டத்திற்கு ஏற்ப நல்ல பாத்திரமாக மாற இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் பல்லவி ” கடவுளே, எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்.” என தி.பாடல் 80:3 -ல் கூறப்பட்டுள்ளது. முடிய இருக்கும் இந்த 2020 ஆண்டு பெரும்பாலான மக்களுக்கு உடல் நலம் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் பின்னடைவை தந்துள்ளது. ஆண்டவர் தமது முக ஒளியை காட்டி நமது வாழ்வில் எல்லாவற்றிலும் மேன்மையை அருள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தியில், “விழிப்பாயிருங்கள்: வீட்டுத் தலைவர் எப்போது வருவார் என உங்களுக்குத் தெரியாது.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். ஒவ்வொரு நாள் புலரும் போதும் இன்று ஆண்டவரின் இரண்டாம் வருகையுள்ளது என்று எண்ணுவோமானால் அன்றைய நாளில் அலகைக்கு இடம் கொடுக்காது ஆண்டவருக்கு உகந்த காரியங்களை மட்டும் செய்திருப்போம். நாம் விழிப்பாயிருந்து ஆண்டவரை தகுந்த முறையில் எதிர் கொள்ள இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இன்று ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க இயலாமல் தொற்று நோயின் நிமித்தம் தனிமைப்படுத்தப்பட்டும் மற்றும் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் எண்ணற்ற இறைமக்களின் மனக்குறையை இறைவன் கண்ணுற்று அவர்கள் ஆண்டவரின் திருவுடலை விரைவில் பெறும் பாக்கியம் கிடைத்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
ஊரடங்கு உத்தரவினால் பல மாதங்களாக ஒப்புரவு அருட்சாதனங்கள் இல்லாமல் தவிக்கும் அனைத்து கத்தோலிக்கர்களுக்கும் கூடிய விரைவில் ஒப்புரவு அருட்சாதனம் கிடைத்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Source: New feed