பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வியாழக்கிழமை
லூக்கா 21: 20-28
“தலை நிமிர்ந்து நில்லுங்கள்”
நிகழ்வு
கிரிக்கெட் இரசிகர்களால் ‘Cool Captain’ என அன்போடு அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனியிடம் செய்தியாளர் ஒருவர், “கிரிக்கெட் விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் நிறைந்த சூழல்களை நீங்கள் எப்படி எதிர்கொள்வீர்கள்?” என்று கேட்டபொழுது, தோனி அவரிடம் இவ்வாறு பதிலளித்தார்:
“விளையாட்டில் அழுத்தமும் பதற்றமும் ஏற்படுகின்றபொழுது, நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன். அது எனக்குக் கூடுதல் பொறுப்பு என்று பார்த்தால், கை கால்கள் உதறும்; சவாலான, பதற்றமான சூழல்கள் என்பவை, என் விளையாட்டு அணிக்கும், என் நாட்டிற்கும் முன்னால் நான் கதாநாயகனாக உயர்வதற்கு எனக்குத் தரப்படும் வாய்ப்புகள். அதனால் நான் அவற்றை ஆர்வமுடன் எதிர்கொள்வேன்.”
தோனியின் இவ்வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்தால், அவரை ஏன் எல்லாரும் ‘Cool Captain’ என்று சொல்கின்றார்கள் என்பது நமக்குப் புரிந்துவிடும். ஆம், கிரிக்கெட்டிலும் சரி, வாழ்க்கையிலும் சரி, சவால்களும் பிரச்சனைகளும் நமக்கு வருகின்றபொழுது, அவற்றைக் கண்டு பதற்றமடையக்கூடாது; மாறாக நாம் அவற்றைத் துணிவோடு எதிர்கொள்ளவேண்டும். நாம் நமக்கு வருகின்ற துன்பங்களையும் சவால்களையும் துணிவோடு எதிர்கொண்டால், நம்மால் ஒருநாள் சாதனையாளர்களாக, கதாநாயகர்களாக உயர முடியும் என்பது உறுதி.
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “இவை நிகழத் தொடங்கும்போது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள். ஏனெனில், உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எருசலேமிற்கு நிகழவிருந்தது முன்னறிவிக்கப்படல்
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, எருசலேமிற்கு நிகழவிருந்த அழிவைக் குறித்தும், அந்த அழிவின்பொழுது என்னவெல்லாம் நடக்கும் என்பதைக் குறித்தும் பேசுகின்றார். எருசலேம் என்றால் அமைதி; ஆனால், அந்த நகர் அமைதிக்கான வழிகளை அறியவில்லை. மாறாக, அந்த நகரில் இருந்தவர்கள் அமைதியை ஏற்படுத்த வந்த இறைவாக்கினர்களையும், இறுதியில் இயேசுவையும் கொன்றுபோட்டார்கள். இதனால் அந்த நகரின்மீது படையெடுப்பு ஏற்பட்டு, மக்கள் சிதறடிக்கப்படுவார்கள் என்கின்றார் இயேசு.
இயேசு இவ்வாறு சொன்னது கி.பி. 70 ஆண்டு, உரோமையை ஆண்டு வந்த டைட்டஸ் என்ற மன்னால் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்; எருசலேம் நகர் ஒன்றுமில்லாமல் ஆக்கப்பட்டது. இயேசு இன்றைய நற்செய்தி சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்குச் சற்று அச்சமூட்டுபவையாக இருந்தாலும், இவை பழைய ஏற்பாட்டில் இடம்பெறும் வார்த்தைகளை பிரதிபலிக்கக்கூடியவையாக இருக்கின்றன (எசா 63: 4; எரே 5: 29; ஒசே 9:7; தானி 9:27) மேலும், இவை முதலில் நிகழவேண்டிய தேவை இருக்கின்றது (லூக் 21: 9). இவற்றிற்காக நாம் கலங்கிடத் தேவையில்லை. ஏனெனில், இதையடுத்து இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள் நமக்கு நம்பிக்கையை ஊட்டுபவையாக இருக்கின்றன.
தலைநிமிர்ந்து நிற்போம்
‘புயலுக்குப் பின்னே அமைதி’ என்று சொல்வார்களே! அதுபோன்று உலகில் ஏற்படும் பல்வேறு இயற்கைப் பேரிடர்கள், மாற்றங்களுக்குப் பிறகு, மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிட மகன் மேகங்கள் மீது வருவார் என்கின்றார் இயேசு. மேலும் அவர், “இவை நிகழத் தொடங்கும்பொது, நீங்கள் தலை நிமிர்ந்து நில்லுங்கள்; ஏனெனில் உங்கள் மீட்பு நெருங்கி வருகின்றது” என்கின்றார்.
வழக்கமாக நம்முடைய வாழ்வில் பிரச்சனைகளும் சவால்களும் வருகின்றபொழுது பதற்றமடைந்து, அறிவுக்கு ஒவ்வாத எதையாது நாம் செய்துவிடுவதுண்டு. ஆனால், ஆண்டவர் இயேசு இன்றைய நற்செய்தியின் வழியாக, உலகில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா…! அச்சுறுத்தும் சூழ்நிலைகள் ஏற்படுகின்றனவா…! அவற்றைக் கண்டு நீங்கள் அஞ்சத் தேவையில்லை. ஏனெனில், அவையெல்லாம் மீட்பு நெருங்கி வருவதற்கான அறிகுறிகள். அதனால் நீங்கள் தலைநிமிர்ந்து நில்லுங்கள் என்கின்றார்.
இங்கு நாம் இன்னொரு செய்தியையும் நம்முடைய கருத்தில் கொள்ளவேண்டும். அது என்னவெனில், உலகில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பிறகு மானிட மகன் மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் வருகின்றார் என்றால், அவரை எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கவேண்டும். அதற்கு நாம் ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழவேண்டும். நாம் மானிட மகனை எதிர்கொள்ளும் வகையில் அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நம்பிக்கை கொண்டோன் பதற்றமடையான்’ (எசா 28: 16) என்கிறது இறைவார்த்தை. ஆகையால், நாம் ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, எல்லா அச்ச உணர்வுகளிலிருந்தும் விடுதலை அடைந்து, மானிட மகனைத் தகுந்த விதமாய் எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed