நீங்கள் என் இல்லத்தைக் கள்வர் குகையாக்கினீர்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 45-48
அக்காலத்தில்
இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார். அவர்களிடம், “ ‘என் இல்லம் இறைவேண்டலின் வீடு’ என்று மறைநூலில் எழுதியுள்ளதே; ஆனால் நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று கூறினார்.
இயேசு ஒவ்வொரு நாளும் கோவிலில் கற்பித்து வந்தார். தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் மக்களின் தலைவர்களும் அவரை ஒழித்துவிட வழி தேடினார்கள். ஆனால் என்ன செய்வது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏனென்றால் மக்கள் அனைவரும் அவர் போதனையைக் கேட்டு அவரையே பற்றிக்கொண்டிருந்தனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
இறைவேண்டலின் வீடு கள்வர் குகையாகுதல்
நிகழ்வு
சந்தியாகு என்றொரு பெரியவர் இருந்தார். இவர் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் சென்று திருப்பலி கண்டு வந்தார்.
ஒருநாள் காலையில் இவர் கோயிலுக்கு வேகவேகமாகச் சென்றுகொண்டிருக்கும்பொழுது, இளைஞன் ஒருவன் இவரைத் தடுத்து நிறுத்தினான். “ஐயா! பெரியவரே! கொஞ்சம் நில்லுங்கள்! ஒவ்வொருநாள் காலையிலும் நான் உங்களைக் கவனித்துக்கொண்டுதான் வருகின்றன்…! நீங்கள் ஒருநாள் கூடத் தவறாமல் கோயிலுக்குச் செல்கின்றீர்களே…! கோயிலில் அப்படி என்ன திதாகக் கண்டுவிட்டீர்கள்! அதே அருள்பணியாளர், அதே பாடகர் குழு, அதே பாடல்! அதே மக்கள்! அதே இறைவேண்டல்! இப்படி எல்லாமே பழையதாக இருக்கின்றபொழுது, புதிதாக என்ன கண்டுவிட்டீர்கள் என்று, நீங்கள் ஒவ்வொரு நாளும் கோயிலுக்குச் செல்கிறீர்கள்…?” என்றான்.
இதற்கு அந்தப் பெரியவர் அவனிடம், “தம்பி! நீ என்ன வேலை செய்துகொண்டிருக்கின்றாய்?” என்றார். “அடிப்படையில் நான் மீனவன். கடலில் மீன்பிடிப்பன்” என்று அந்த இளைஞன் சொன்னதும், பெரியவர் அவனிடம், “கடலில் மீன்பிடிப்பவன் என்று சொல்கின்றாய்… அதே கடல், அதே இடம் என்றாலும், முந்தைய நாளில் பிடித்த மீன்களைப் பிடிக்காமல், புது புது மீன்களைத்தானே நீ பிடிக்கின்றாய்?” என்றார். அவன், “ஆமாம்” என்றதும், பெரியவர் தொடர்ந்து பேசினார்: “அதே அருள்பணியாளர், அதே இறைவேண்டல்கள், அதே பாடல், அதே மனிதர்கள் என்றாலும், ஒவ்வொரு நாளும் நான் திருப்பலியில் கலந்துகொள்ளும்போது புதுவகையான உணர்வு ஏற்படுகின்றது. அது என்னுடைய உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலையும் மகிழ்ச்சியையும் தருகின்றது. மேலும் கோயிலில் கிடைக்கின்ற அமைதி, ஒருவிதமான பரவச உணர்வு வேறு எங்கும் கிடைப்பதில்லை.”
பெரியவர் இவ்வாறு விளக்கம் தந்ததும், இளைஞன் எதுவும் பேசாமல் அமைதியானான்.
ஆம், கோயில் என்பது சாதாரண ஓர் இடம் கிடையாது. அது அரசர்களுக்கெல்லாம் அரசராம் கடவுள் குடிகொண்டிருக்கின்ற ஓர் இல்லம். அது உள்ளத்த்திற்கு அமைதியையும் ஆறுதலையும் பெருமகிழ்ச்சியையும் தருகின்ற ஓர் இல்லம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதத்தைக் காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, எல்லா மக்களுக்கும் இறைவேண்டலின் வீடாக இருந்த எருசலேம் திருக்கோயில் கள்வர் குகையாக மாறிப் போனதைக் கண்டு, அது அவ்வாறு ஆனதற்குக் காரணமாக இருந்தவர்களை அங்கிருந்து விரட்டியடிக்கின்றார் இயேசு. அது குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பிற இனத்தாரின் வழிபாட்டு இடம் அபகரிக்கப்படல்
எருசலேம் திருக்கோயில் யூதர்களின் ஓர் அடையாளமாக இருந்தது. மட்டுமல்லாமல், அது யூதர்கள் மட்டுமல்லாமல், எல்லா மக்களும் வழிபடக்கூடிய இறைவேண்டலின் வீடாக இருந்தது (மாற் 11; 17). அப்படிப்பட்ட நிலையில் எருசலேம் திருக்கோயிலை நிர்வாகம் அல்லது மேலாண்மை செய்து வந்த தலைமைக் குருக்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் பிற இனத்தார் வழிபாடு செய்யக்கூடிய இடத்தை அபகரித்துக் கொண்டு, அதில் வணிகம் செய்ய அனுமதித்து, பிற இனத்தார் வழிபாடு செய்யும் உரிமையைப் பிடுங்கிக் கொண்டனர். இதனால் இயேசு அங்கு விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடிக்கின்றார்.
வணிகத்தலமாக மாறிப்போன எருசலேம் திருக்கோயில்
இயேசு, எருசலேம் திருக்கோயிலில் விற்பனை செய்துகொண்டிருந்தவர்களை விரட்டியடித்தற்கு, பிற இனத்தாரின் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது அல்லது அவர்கள் வழிபடுகின்ற இடம் அபகரிக்கப்பட்டது ஒரு காரணமென்றால், எருசலேம் திருக்கோயில் வழிபாட்டுத் தலமாக இல்லாமல், வணிகத்தலமாக மாறியது இன்னொரு காரணமாகச் சொல்லலாம்.
எருசலேம் திருக்கோயிலில் வழிபட வருகின்றவர்கள் ஆடு மாடுகளைப் பலியிடுவதற்காக வாங்குவதுண்டு. அவற்றை கோயிலுக்கு வெளியே வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்வோரிடம் வாங்கவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருந்தது. மக்கள் கோயிலுக்கு வெளியே விற்பனை செய்யப்பட்ட ஆடு மாடுகளை வாங்காமல், கோயிலுக்கு உள்ளே விற்பனை செய்யப்பட்ட ஆடுமாடுகளை வாங்கியதால், கோயிலை நிர்வாகம் செய்து வந்த தலைமைக் குருக்கள் பெருத்த இலாபம் அடைந்தார்கள். மேலும் கோயிலிலில் காணிக்கை செலுத்தும்பொழுது புழக்கத்தில் இருந்த உரோமையர்களின் நாணயத்தைக் கொண்டு காணிக்க செலுத்தாமல், செக்கேல் (Shekel) என்ற யூதர்கள் பயன்படுத்திய நாணயத்தில் காணிக்கை செலுத்தவேண்டும் என்ற நிலை இருந்தது. இவ்வாறு நடைபெற்ற நாணய மாற்றுதலில் கோயில் நிர்வாகத்தினர் மிகுந்த இலாபம் அடைந்தனர்.
இவற்றையெல்லாம் கண்டுதான் இயேசு, “என் இல்லம் இறைவேண்டலின் வீடு; ஆனால் நீங்கள் கள்வர் குகையாக்கினீர்கள்” என்று சொல்லி, கோயிலில் விற்பனை செய்தவர்களை விரட்டியடிக்கின்றார். ஆம், கோயில் என்பது இறைவேண்டலின் வீடு; இறைவன் தங்கும் இல்லிடம். அப்படிப்பட்ட ஓர் இல்லத்தின் புனிதம் பேணப்படாமல் இருக்கின்றபொழுது, அது ஆண்டவருக்குச் சினத்தை வரவழைக்கத்தான் செய்யும். ஆகையால், நாம் கோயிலின் புனிதத்தைப் பேணி, உயிருள்ள கோயிலாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘பயமூட்டும் இவ்வுலகில் அபயம் தரக் கோயில்கள் தேவை’ என்பார் சி.எஸ். லெவிஸ் என்ற எழுத்தாளர். ஆகையால், நமக்கு அபயம் தரும் கோயில்களின் புனிதத்தைப் பேணிக் காப்போம். உயிருள்ள கோயில்களா நாம் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed