அனைத்து மதங்களின் அங்கத்தினர்களும், தங்களின் சுயநலன்களை கைவிட்டு, தங்கள் மதங்களின் படிப்பினைகளுக்கு இயைந்தவகையில் வாழ்வை நடத்திச் செல்லவில்லையெனில், உலகம் அழிந்துபோகும் காலம் வெகுதொலைவில் இல்லை என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கை கர்தினால் மால்கம் இரஞ்சித்.
மக்களை பெருமெண்ணிக்கையில் கொலைசெய்யும் நோக்கத்தில் நுண்ணுயிர் உயிர்க்கொல்லி ஆயுதங்களை, பல சக்திவாய்ந்த நிறுவனங்கள் ஆய்வுசெய்து தயாரித்து வருகின்றன எனவும், அதே ஆய்வு நிறுவனங்கள், அதற்கான மருந்துகளைத் தயாரித்து இலாபம் சம்பாதித்துவருகின்றன எனவும், கர்தினால் இரஞ்சித் அவர்கள், கவலையுடன் கூறினார்.
கோவிட்-19 நோய்க்கிருமிகள் யாரால் இவ்வுலகிற்கு வந்தன, இந்நோய்க்கான புதிய மருந்துக் கண்டுபிடிப்புக்கள் உண்மையில் பலன்தருமா போன்ற சந்தேகக் கேள்விகள் ஒவ்வொருவர் மனதிலும் எழுகின்றபோதிலும், இன்றைய துயர நிலைகளுக்கு காரணம் மனிதரின் சுயநலப்போக்குகளே என்பது மட்டும் சந்தேகமின்றி தெளிவாக உள்ளது என தெரிவித்தார் கர்தினால் இரஞ்சித்.
சுயநலப்போக்குகளால் மாசடைந்துள்ள இப்பூமியில், அனைத்து மத நம்பிக்கையாளர்களும், தங்கள் மதப்படிப்பினைகளுக்கு இயைந்த வகையில் வாழ்வை நடத்தி, தன்னலமறுப்புக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்தார், கொழும்பு பேராயர், கர்தினால் இரஞ்சித்.
முதலாளித்துவக் கொள்கைகளைப் பின்பற்றும் நாடுகளில், இன்று, மதங்கள் முற்றிலுமாக மறக்கப்பட்டு, ஆன்மீகம் ஒதுக்கப்பட்டு வருவதாக, கர்தினால் இரஞ்சித் அவர்கள், தன் கவலையை வெளியிட்டார்.
Source: New feed