மக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும்பொருட்டு, இந்த கொரோனா தொற்றுநோய் பரவல் காலத்தில், தன் நூலக அறையிலிருந்து கணனி வலைத்தொடர்பு வழியாக புதன் மறைக்கல்வி உரைகளை வழங்கி வருகிறார் திருத்தந்தை பிரான்சிஸ். இம்மாதம் நான்காம் தேதி புதன்கிழமையிலிருந்து, நேரடி காணொளித் தொடர்பு வழியாக தன் சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை, இறைவேண்டல் குறித்த மறைக்கல்வியுரையின் தொடர்ச்சியாக, நவம்பர் 11, இப்புதனன்று, இயேசுவின் மூன்று உவமைகளை மையப்படுத்தி தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டார்.
அன்பு சகோதரர்ரே, சகோதரிகளே, இறைவேண்டல் குறித்த நம் மறைக்கல்விப் போதனையில் நாம், இயேசு எவ்வாறு தன் தந்தையிடம் விடாமுயற்சியுடன் செபித்தார் என்பதைக் கண்டோம். லூக்கா நற்செய்தியில் நாம் காணும், இயேசுவின் மூன்று உவமைகள், நம் இறைவேண்டலில் எவ்வாறு உறுதியான மனநிலையுடன் நிலைத்திருக்க வேண்டும் என்பதை காண்பிக்கின்றன. இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்த வேளையில், இயேசு, விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்த நண்பர் குறித்த உவமையை (லூக்.11,5-8) எடுத்துரைத்து, நடுநிசி வேளையில் தொந்தரவு செய்த அவர், தான் கேட்டது கிடைக்கும்வரையில் விடவில்லை என்பதுபோல், நாமும் விடாப்பிடியுடன் தொடர்ந்து இறைவேண்டலில் ஈடுபடவேண்டும் என நமக்குச் சொல்லித் தருகிறார். இரண்டாவது நாம் எடுத்திருக்கும், ‘நேர்மையற்ற நடுவரும் கைம்பெண்ணும்’ பற்றிய உவமையில் (லூக். 18,1-8), நேர்மையற்ற நடுவரிடம் நீதிக்காகப் போராடும் அந்த கைம்பெண், தொடர்ந்து பொறுமையுடன் கேட்டு தொல்லை கொடுத்துக்கொண்டேயிருந்ததால் அவர் கேட்டது கிடைத்ததைக் காண்கிறோம். இது, இறைவேண்டலில் பொறுமையின் முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்துகின்றது. பரிசேயரும் வரிதண்டுபவரும் கோவிலில் இறைவேண்டல் மேற்கொண்டது பற்றிய உவமையில் (லூக்.18,9-14), தாழ்ச்சியுடன் இறைவேண்டல் செய்பவர்களுக்கு இறைவன் பதிலளிக்கின்றார் என்பதைக் காட்டுகிறார் இயேசு. விடாமுயற்சி, பொறுமை, பணிவு ஆகிய இந்த மூன்று பண்புகளை நாம், புனிதர்கள் மேற்கொண்ட இறைவேண்டலில் காண்கிறோம். இறைவன் பதில் வழங்காமல் அமைதி காப்பதாகவும், அவரின் பிரசன்னம் அங்கு இல்லாததுபோலவும் தோன்றிய வேளைகளில்கூட, அதாவது, இருளின் வேளைகளில்கூட, புனிதர்கள் தங்கள் இறைவேண்டலில் இந்த மூன்று பண்புகளுடன் நிலைத்திருந்ததை அறிவோம். நாம் ஒருபோதும் நம் இறைவேண்டலில் தனியாக இல்லை என்பதை உணர்ந்தவர்களாக, இறைவேண்டலில் உறுதியுடன் நிலையாயிருப்போம். ஆம், நாம் தனியாக இல்லை, இயேசுவுடன், தூய ஆவியாரின் வல்லமையில் இறைவேண்டல் செய்கிறோம். புனித அகுஸ்தினார் மிகச் சுருக்கமாக எடுத்துரைப்பதுபோல், ‘இயேசு நம் தலைமைக் குருவாக நமக்காக இறைவேண்டல் செய்கிறார், நம் தலைவராக நமக்குள் இறைவேண்டல் செய்கிறார், நம் கடவுள் என்ற முறையில் நாம் அவரிடம் இறைவேண்டல் செய்கிறோம்’.
இவ்வாறு, தன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாலியல் குற்றம் புரிந்ததால் அருள்பணித்துவப் பணிகளிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் கர்தினால் Theodore McCarrick பற்றிய விசாரணை விவரங்கள், இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிடப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார். முன்னாள் கர்தினாலின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களுடன் தன் அருகாமையை தெரிவிப்பதாகவும் திருத்தந்தை கூறினார்.
இப்புதனன்று திருஅவையில், Tours நகர் ஆயர் புனித மார்ட்டினின் விழா சிறப்பிக்கப்படுவதை நினைவூட்டி, ஏழைகள், மற்றும், சமுதாயத்தில் கடைநிலையில் இருந்தோருக்கு பிறரன்புச் சேவைகளை ஆற்றிய இப்புனிதரின் எடுத்துக்காட்டை நாமும் பின்பற்றுவோம் என கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இறந்த அனைத்து நம்பிக்கையாளர்களுக்காக, இறந்துபோன நம் உறவினர், மற்றும், நண்பர்களுக்காக இந்த நவம்பர் மாதத்தில் சிறப்பான விதத்தில் இறைவேண்டல் செய்ய மறவாதிருப்போம் எனவும் விண்ணப்பித்து, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
Source: New feed