சிலே நாட்டில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டையொட்டி, அதே இடத்தில், நவம்பர் 8, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட சிறப்புத் திருப்பலிக்கு தன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
500 ஆண்டுகளுக்கு முன்னர் 1520ம் ஆண்டு நவம்பர் மாதம் 11ம் தேதி சிலே நாட்டின் Punta Arenas எனுமிடத்தில் முதல் திருப்பலி நிறைவேற்றப்பட்டது, அம்மறைமாவட்டத்திற்கு மட்டுமல்ல, சிலே நாடு முழுமைக்கும் முக்கியமான நாள் என தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை, Magallan மாவட்டத்தின் விசுவாசிகள் அனைவரும், இணையதள தொடர்புகள் வழியாக, இந்த நினைவுவிழாத் திருப்பலியில் கலந்துகொண்டது குறித்து தன் மகிழ்ச்சியையும் வெளியிட்டுள்ளார்.
இணையதளம் வழியாக அம்மறைமாவட்டம், இஞ்ஞாயிறன்று ஒளிபரப்பு செய்த சிறப்புத் திருப்பலியில், Punta Arenas மறைமாவட்ட ஆயர் Bernardo Bastres அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தி, முதலில் வாசிக்கப்பட்டது.
அனைத்திற்கும் மேலாக, திருப்பலியிலிருந்தே இறையருள் வழிந்தோடி வருகிறது என இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் எடுத்துரைத்ததுபோல், தற்போது கடந்த 500 ஆண்டுகளில் சிலே நாடு முழுவதும் இறையருள் பரவி ஓடியுள்ளதைக் காணமுடிகிறது என தன் செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மிகப்பெரும் திருவிழாக்கொண்டாட்டங்களை இந்த கோவிட் கொள்ளை நோய் காலம் அனுமதிக்கவில்லையெனினும், நம் மனங்களில் எழும் நன்றியுணர்வை எவரும் தடை செய்ய இயலாது எனக்கூறும் திருத்தந்தையின் செய்தி, இறைவன் சிலே மக்களின் இவ்வுலகத் திருப்பயணத்தில் என்றும் துணை நிற்பார் என்ற வாழ்த்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
இதற்கிடையே, தன் மறைமாவட்ட பகுதியில் மூடப்படும் நிலையிலிருந்த, புனித இரண்டாம் யோவான் பவுல் முதியோர் இல்லம், சிலே நாட்டில் திருப்பலி நிறைவேற்றப்பட்டதன் 500ம் ஆண்டை முன்னிட்டு, இம்மறைமாவட்டத்தின் நேரடி பொறுப்பில் எடுக்கப்பட்டு, புத்துயிர் பெறும் என்ற அறிவிப்பை இத்திருப்பலியின்போது விடுத்தார், ஆயர் Bastres
Source: New feed