மாலையில், வத்திக்கானின் Teutonic கல்லறைத் தோட்டத்தில் அமைந்துள்ள இரக்கமுள்ள அன்னை மரியா ஆலயத்தில், கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு, விசுவாசிகளின் பங்கேற்பின்றி திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்த நம்பிக்கையாளர் அனைவருக்காகவும் இறைவேண்டல் செய்தார்.
யாரும் நினையாத ஏழைகள், சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டோர், பெயர்கள் அறியப்படாதோர், குரல் இழந்தோர் போன்ற, இறந்த அனைவருக்கும், விண்ணகப்பேற்றை கடவுள் அருளுமாறும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திருப்பலியில் செபித்தார்.
கிறிஸ்தவ நம்பிக்கை
கிறிஸ்தவ நம்பிக்கை குறித்து, இத்திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, நம்பிக்கை நம்மை ஏமாற்றாது என்று, புனித பவுலடிகளார் நமக்குச் சொல்கிறார் என்றும், நம்பிக்கை, நம்மைக் கவர்ந்திழுக்கின்றது மற்றும், வாழ்வுக்கு அர்த்தம் கொடுக்கிறது என்றும் கூறினார்.
நம்பிக்கை, கடவுளின் கொடை என்றும், இது வாழ்வு நோக்கி, நித்திய மகிழ்வை நோக்கி நம்மை இட்டுச்செல்கின்றது என்றும், இது, இவ்வுலக வாழ்வின் அடுத்த பக்கத்தில் நாம் கொண்டிருக்கும் நங்கூரம் என்றும், திருத்தந்தை கூறினார்.
ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மறையுரையை வழங்காமல், அந்த நேரத்தில் எழுந்த தன் சிந்தனைகளை மறையுரையில் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவிடம் செல்வதே, இந்த நம்பிக்கையின் இலக்கு என்றும் கூறினார்.
ஆண்டவர் தானமாக வழங்கும் கிறிஸ்தவ நம்பிக்கை என்ற கொடையை நாம் ஒவ்வொருவரும் அவரிடம் கேட்போம் என்று மறையுரையில் கூறியத் திருத்தந்தை, இறந்த நம் சகோதரர் சகோதரிகள் அனைவரையும் இன்று நினைக்கின்றோம், கல்லறைகளைப் பார்ப்பது, நமக்கு நன்னைபயக்கும் என்று கூறினார்.
நம் மீட்பர் வாழ்கிறார் என்பதை நான் அறிவேன், இந்த சக்தியே, கடவுளின் இலவசக் கொடையாகிய நம்பிக்கையை நமக்குத் தருகின்றது, இதனை ஆண்டவர் நம் அனைவருக்கும் அளிப்பாராக என்று, தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திருப்பலிக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் கீழ்தளத்தில் அமைந்துள்ள கல்லறைப் பகுதிக்குச் சென்று இறைவேண்டல் செய்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, உரோம் நகரின் பிரிசில்லா அடிநிலக்கல்லறைகளில் திருப்பலி நிறைவேற்றினார். 2018ம் ஆண்டில், உரோம் Laurentino பகுதியில் அமைந்துள்ள, வானதூதர்களின் தோட்டம் என்று அழைக்கப்படும் கல்லறைத் தோட்டத்தில், திருப்பலி நிறைவேற்றி, இறந்த சிறார் மற்றும், கருவிலே கொல்லப்பட்ட குழந்தைகளுக்காகச் செபித்தார்.
Source: New feed