ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்கள், தண்டனையின்றி செல்வதை முடிவுக்குக் கொணரும் உலக நாள், நவம்பர் 02, இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டதையொட்டி, சிறப்புச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது, ஐ.நா. நிறுவனம்.
ஊடகவியலாளர் பாதுகாக்கப்படவில்லையெனில், சமுதாயம் முழுவதும் அதன் விளைவுகளை எதிர்கொள்ளும் ஆபத்தில் உள்ளது என்று, தன் செய்தியை வழங்கியுள்ள ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பே, நமக்கு தகவல் அறிவதற்கான உரிமையையும், போதிய சான்றுகளுடன்கூடிய முடிவுகளை எடுப்பதற்கான திறனையும் உறுதி செய்கின்றது என்றுரைத்துள்ளார்.
2017ம் ஆண்டு ஊடகவியலாளர்களுக்கு எதிரான தாக்குதல்கள் 21 என்றிருக்க, இந்த ஆண்டின் முதல் பாதியில் மட்டுமே, 21 தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக உரைத்த கூட்டேரஸ் அவர்கள், அமைதி, நீதி, ஒன்றிணைந்த வளர்ச்சி, மனித உரிமைகள் ஆகிய துறைகளில் சுதந்திரமுடன் செயல்பட சமூகத்தொடர்புத் துறை அனுமதிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
மேலும், இந்நாளையொட்டி செய்தி வெளியிட்டுள்ள யுனெஸ்கோ அமைப்பின் தலைவர் Audrey Azoulay அவர்கள் உரைக்கையில், உண்மையை வெளிச்சத்திற்கு கொணரும் பணியில் ஈடுபட்டுள்ள ஊடகவியலாளர்கள் பலர், அதற்கென பெரிய விலையைக் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது என்றார்.
.Azoulay அவர்களின் கூற்றுப்படி, 2010ம் ஆண்டுக்கும், 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், ஏறக்குறைய 900 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்
Source: New feed