எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 14: 15-24
அக்காலத்தில்
இயேசுவோடு பந்தியில் அமர்ந்தவர்களுள் ஒருவர் இயேசுவிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்றார்.
இயேசு அவரிடம் கூறியது: “ஒருவர் பெரிய விருந்து ஒன்றை ஏற்பாடு செய்து பலரை அழைத்தார். விருந்து நேரம் வரவே அவர் அழைப்புப் பெற்றவர்களிடம் தம் பணியாளரை அனுப்பி, ‘வாருங்கள், எல்லாம் ஏற்கெனவே ஏற்பாடு செய்தாகிவிட்டது’ என்று சொன்னார். அவர்கள் எல்லாரும் ஒருவர் பின் ஒருவராய்ச் சாக்குப்போக்குச் சொல்லத் தொடங்கினர். முதலில் ஒருவர், ‘வயல் ஒன்று வாங்கியிருக்கிறேன்; அதை நான் கட்டாயம் போய்ப் பார்க்க வேண்டும். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார். ‘நான் ஐந்து ஏர் மாடுகள் வாங்கியிருக்கிறேன்; அவற்றை ஓட்டிப்பார்க்கப் போகிறேன். என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்றார் வேறொருவர். ‘எனக்கு இப்போதுதான் திருமணம் ஆயிற்று; ஆகையால் என்னால் வர முடியாது’ என்றார் மற்றொருவர்.
பணியாளர் திரும்பி வந்து இவற்றைத் தம் தலைவருக்கு அறிவித்தார். வீட்டு உரிமையாளர் சினமுற்றுத் தம் பணியாளரிடம், ‘நீர் நகரின் வீதிகளுக்கும் சந்துகளுக்கும் விரைந்து சென்று ஏழையர், உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர் ஆகியோரை இங்கே கூட்டி வாரும்’ என்றார். பின்பு பணியாளர், ‘தலைவரே, நீர் பணித்தபடி செய்தாயிற்று; இன்னும் இடமிருக்கிறது’ என்றார். தலைவர் தம் பணியாளரை நோக்கி, ‘நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும்.
அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குச் சொல்கிறேன்’ “ என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
பொதுக்காலம் முப்பத்து ஒன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 14: 15-24
உலகமா? கடவுளா?
நிகழ்வு
தன்னுடைய குடும்பத்தோடு இந்தியாவிற்கு வந்து நற்செய்தி அறிவித்தவர் வில்லியம் காரே (William Carey 1761-1834). இவருக்கு பெலிக்ஸ் என்றொரு மகன் இருந்தான். அவன் சிறுவயது முதலே, “நான் வளர்ந்து பெரியவனான பிறகு என் தந்தையைப் போன்று, ஆண்டவரின் நற்செய்தியை அறிவிப்பேன்” என்று சொல்லி வந்தான். இதைக் கேட்டு வில்லியம் காரே பெரிதும் மகிழ்ந்தார்.
பெலிக்ஸ் வளர்ந்து பெரியவனானான். ‘என் மகன் என்னைப் போன்று ஆண்டவரின் நற்செய்தியை மக்களுக்கு அறிவிக்கப் போகிறான்’ என்று வில்லியம் காரே பெரிதும் நம்பிக்கைக் கொண்டிருந்த வேளையில், பெலிக்சிற்குப் பர்மாவின் தூதராக இருக்க அழைப்பு வந்தது. உடனே அவன் அதற்கு மறுப்பேதும் சொல்லாமல், பர்மாவின் தூதரானான்.
இதையறிந்த வில்லியம் காரே, “பெலிக்ஸ்! நீ இந்த உலகிற்கே தலைவராக இருக்கும் ஆண்டவரின் தூதராய் இருப்பாய் என்றல்லவா நினைத்திருந்தேன்! இப்படியொரு ஒரு சாதாரண நாட்டின் தூதராய் மாறி நிற்கின்றாயே!” என்று சொல்லி மிகவும் வேதனைப்பட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற வில்லியம் காரேயின் மகனான பெலிக்சைப் போன்றுதான் இன்று பலர் கடவுள் விடுக்கும் அழைப்பைப் புறக்கணித்துவிட்டு, உலகப் போக்கிலான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள். இன்றைய நற்செய்தி வாசகம் கடவுளின் அழைப்பைப் புறக்கணித்தவர்கள் யார் என்பதையும், கடவுளின் அழைப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதையும் குறித்து எடுத்துச் சொல்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கடவுளின் அழைப்பைப் புறக்கணித்த யூதர்கள்
யூதர்களுக்கு எப்பொழுதும் தாங்கள் மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் உண்டு. அதனாலேயே, ‘மீட்புப் பெறுவது சிலர் மட்டும்தானா?” (லூக் 13: 23) என்று ஒருவர் இயேசுவிடம் கேட்பார். இது குறித்து நாம் கடந்த வாரத்தில் வாசித்துத் தியானித்திருப்போம். இன்றைய நற்செய்தியில் ஒருவர் இயேசுவிடம், “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்கின்றார். அந்த மனிதர் இயேசுவிடம் இவ்வாறு சொல்லக் காரணம், யூதர்களுக்கு இறையாட்சி விருந்தில் கலந்துகொள்வதற்கு இடமுண்டு. காரணம் அவர்கள் ஆபிரகாமின் மக்கள் என்பதால்தான். அதனால் அவர்கள் பேறுபெற்றோர் என்று சொல்லாமல் சொல்கின்றார் அந்த மனிதரர். அப்பொழுதுதான் இயேசு விருந்து பற்றிய உவமையைச் சொல்கின்றார்.
இயேசு சொல்லும் விருந்து பற்றிய உவமையில் வருகின்ற, விருந்துக்கு வருவதாக ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்த மனிதர்கள், விருந்து ஏற்பாடு செய்திருந்த மனிதர் தன்னுடைய பணியாளர் மூலமாக, விருந்து தயாராகிவிட்டது. அதனால் விருந்து வாருங்கள் என்று சொன்னபொழுது, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான சாக்குப் போக்குச் சொல்லி விருந்துக்கு வராமல் போகின்றார்கள். இங்கு, விருந்துக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, விருந்துக்கு வராமல் போனவர்கள் யூதர்களே ஆவர். அவர்கள்தான் கடவுளிடமிருந்து வந்த சிறப்பான அழைப்பை உதறித் தள்ளிவிட்டு பிற தெய்வத்தை வழிபட்டார்கள். இவ்வாறு அவர்கள் கடவுளிடமிருந்து சிறப்பானதொரு அழைப்பைப் பெற்றிருந்தும், அந்த அழைப்பைப் புறக்கணித்ததால், இறையாட்சி என்னும் விருந்தில் பங்குபெற முடியாமல் போனார்கள்.
கடவுளின் அழைப்பை ஏற்றுக்கொண்ட பிற இனத்து மக்கள்
விருந்து உவமையில் வருகின்ற, விருந்துக்கு வருவதாக ஏற்கெனவே அழைப்புப் பெற்றிருந்த மனிதர்கள், அதாவது யூதர்கள் விருந்துக்குப் போகாததால், அந்த அழைப்பு ஏழையர், உடல் ஊனமுற்றோர். பார்வையோற்றோர் ஆகியோருக்குத் தரப் படுகின்றது இவர்கள் வேறு யாருமல்ல, பிற இனத்து மக்களும், பாவிகளுமே ஆவர். ஆம், இவர்கள்தான் ஆண்டவர் இயேசு போதித்தபொழுது அவருடைய போதனையைக் கேட்க அவரை நெருங்கி வந்தனர் (லூக் 15: 1); அவருடைய அழைப்பினை ஏற்றனர். அதனாலேயே அவர்கள் இறையாட்சி என்னும் விருந்தில் கலந்து கொள்ளும் பேற்றினைப் பெற்றனர்.
இப்பொழுது, தொடக்கத்தில் “இறையாட்சி விருந்தில் பங்கு பெறுவோர் பேறுபெற்றோர்” என்று சொன்னவரின் வார்த்தைகளுக்கு வருவோம். இறையாட்சி விருந்தில் தங்களுக்குக் கட்டாயம் இடமுண்டு என்று நினைத்திருந்த யூதர்களோ, கடவுளின் அழைப்பைப் புறக்கணித்ததால், அந்த விருந்தில் கலந்து கொள்ள முடியாமல் போனார்கள். ஆனால், பிற இனத்து மக்களும், பாவிகளும் ஆண்டவரின் அழைப்பை ஏற்று, அதன்படி நடந்ததால் அவர்கள் இறையாட்சி விருந்தில் பங்கு பெறும் பேற்றினைப் பெற்றார்கள். அப்படியானால், ஒருவர் ஆண்டவரின் அழைப்பை ஏற்று, அதன்படி வாழ்கின்றபொழுது மட்டுமே அவரால் இறையாட்சி விருந்தும் பங்கு பெற முடியும் என்பது தெளிவாகின்றது.
நாம் கடவுள் தரும் அழைப்பினை ஏற்று, அதன்படி வாழ்ந்து, அதன்மூலம் இறையாட்சி விருந்தில் பங்கு பெறத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
“இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டிருக்கின்றேன் யாராவது எனது குரலைக் கேட்டுக் கதவைத் திறந்தால் நான் உள்ளே சென்று அவர்களோடு உணவு அருந்துவேன். அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள்” (திவெ 3: 20) என்பார் இயேசு. ஆகையால், நாம் கடவுள் விடுக்கும் அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவருடைய அழைப்பிற்கு ஏற்றாற்போல் வாழ்வோம்.
Source: New feed