இறந்த நம்பிக்கையாளர் அனைவரின் நினைவு நாளான நவம்பர் 02, இத்திங்களன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறந்த நம்பிக்கையாளர்களுக்காக, குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமிக்குப் பலியானவர்களுக்காகச் செபிப்போம் என்று, தன் டுவிட்டர் செய்தி வழியாக அழைப்பு விடுத்துள்ளார்.
“இறந்த நம்பிக்கையாளர் அனைவருக்காகவும், குறிப்பாக, கொரோனா தொற்றுக்கிருமிக்குப் பலியாகி, தங்களின் அன்புறவுகள் அருகில் இல்லாமல், தனிமையாய் இறந்தவர்கள், இந்த நோயாளிகளுக்கென தங்கள் வாழ்வை அர்ப்பணித்துப் பணியாற்றுகையில் இறந்தவர்கள் ஆகிய அனைவருக்காகவும், இன்று நாம் இறைவேண்டல் செய்வோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
Teutonic கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி
மேலும், நவம்பர் 01, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு மூவேளை செப உரையாற்றியபின், நம்பிக்கையாளர் அனைவர் நினைவு நாளான இத்திங்களன்று, கோவிட்’19 விதிமுறைகளைப் பின்பற்றி, வத்திக்கானிலுள்ள Teutonic கல்லறைத் தோட்டத்தில், விசுவாசிகளின் பங்கேற்பின்றி, தான் திருப்பலி நிறைவேற்ற உள்ளதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார்.
தங்கள் உறவினர்களின் கல்லறையில் செபிக்கும் அனைத்து விசுவாசிகளுடன் தான் ஆன்மிக முறையில் இணைந்திருப்பதாகவும், திருத்தந்தை கூறினார்.
நிலநடுக்கத்தில் உயிரிழந்தோருக்கு செபம்
மேலும், நவம்பர் 01, இஞ்ஞாயிறு நண்பகலில் வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு, மூவேளை செப உரையாற்றியபின், ஏஜியன் (Aegean) கடல் பகுதியிலுள்ள துருக்கி மற்றும், கிரேக்க கடற்கரைகளில் இடம்பெற்ற நில நடுக்கத்தால் உயிரிழந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோருக்காகச் செபிக்குமாறு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்தார்.
அக்டோபர் 30, கடந்த வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற இந்த இயற்கைப் பேரிடரில், குறைந்தபட்சம் 27 பேர் உயிரிழந்துள்ளது, மற்றும், 800 பேர் காயமடைந்துள்ளது குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் திருத்தந்தை வெளியிட்டார்.
Source: New feed