மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-12a
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தைக் கண்டு மலைமீது ஏறி அமர, அவருடைய சீடர் அவர் அருகே வந்தனர். அவர் திருவாய் மலர்ந்து கற்பித்தவை:
“ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது. துயருறுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர். கனிவுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர். நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர். இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் இரக்கம் பெறுவர். தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர். அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.
என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறுபெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————
புனிதர் அனைவர்
I திருவெளிப்பாடு 7: 2-4, 9-14
II 1 யோவான் 3: 1-3
III மத்தேயு 5: 1-12a
“இறைவனைப் பிரதிபலிப்பவர்களாவோம்”
நிகழ்வு
எப்பொழுதும் ஏதாவது ஒரு கேள்வியைத் தன் தந்தையிடம் கேட்டுக்கொண்டிருக்கும் சிறுவன் ஒருவன், ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலையில் தந்தையுடன் திருப்பலிக்குச் செல்லும்பொழுது, “அப்பா! புனிதர்கள் என்றால் யார்?” என்றான். தன் மகன் கேட்ட கேள்விக்குத் தந்தை உடனடியாகப் பதிலளிக்கவில்லை. பங்குக்கோயிலை அடைந்ததும், மகனைக் கூட்டிக்கொண்டு உள்ளே நுழைந்த தந்தை, கண்ணாடி சன்னல்களில் வரையப்பட்டிருந்த புனிதர்களின் திருவுருவங்களைக் காட்டி, இவர்கள்தான் புனிதர்கள்” என்றார்.
அவர் இவ்வாறு சொன்னபொழுது, காலைக் கதிரவன் கண்ணாடி சன்னல்களில் பட்டு கோயில் எங்கும் பிரதிபலித்துக்கொண்டிருந்தது. அதைப் பார்த்துவிட்டு மகன் தன் தந்தையிடம், “புனிதர்கள் என்றால் யார் என்று எனக்கு இப்பொழுது நன்றாகப் புரிகின்றது… கடவுளைத் தங்கள் வழியாகப் பிரதிபலிக்கின்றவர்களே புனிதர்கள்” என்றான். தன் மகன் இப்படி அறிவுப்பூர்வமாகப் பேசிவதைக் கேட்டுப் பெரிதும் மகிழ்ந்த தந்தை அவனை உச்சி முகர்ந்து முத்தமிட்டார்.
‘இறைவனைப் பிரதிபலிக்கின்ற யாவருமே புனிதர்கள்’ என்று அந்தச் சிறுவன் தன் தந்தையிடம் சொன்ன பதில், புனிதர்கள் என்றால் யார் என்பதற்கு சொல்லப்பட்ட மிகத் தெளிவான விளக்கம் என்றே சொல்லலாம். இன்று தாயாம் திருஅவை புனிதர் அனைவரின் விழாவைக் கொண்டாடி மகிழ்கின்றது. இந்த நல்ல நாளில், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு என்ன செய்தியைச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.
புனிதர்கள் – கடவுளின் மக்கள்
‘புனிதர்களின் உறவு ஒன்றிப்பை நம்புகிறேன்’ என்று அறிக்கையிடுகின்ற நாம், திருத்தந்தை நான்காம் கிரகோரி கி.பி. 837 ஆம் ஆண்டு, ‘புனிதர் அனைவர்’ விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்த நாளிலிருந்தே இவ்விழாவைக் கொண்டாடி வாழ்கின்றோம்.
திருஅவை ஒவ்வொரு நாளுக்கும் ஒரு புனிதரை நினைவுகூர்ந்து கொண்டாடுகின்றபொழுது, புனிதர் அனைவருக்கும் என தனியாக ஒரு நாளை ஒதுக்கி, அவர்களுக்கு விழாக் கொண்டாடுவது பொருத்தமானதா? என்ற கேள்வி எழலாம். இதற்கு இரண்டு பதில்கள் இருக்கின்றன. ஒன்று, ஓர் ஆண்டில் வருகின்ற 365 அல்லது 366 புனிதர்கள் போக எத்தனையோ பேர் கடவுளைத் தங்களுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் பிரதிபலித்திருக்கின்றார்கள் (திவெ 8: 9). அவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதற்காக இந்தப் புனிதர் அனைவர் விழா கொண்டாடப்படுகின்றது. இரண்டு, புனிதர்கள் அனைவரும் விண்ணகத்தில் இறைவனின் திருமுன் நமக்காகப் பரிந்து பேசிக்கொண்டிருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களை நன்றியோடு நினைவுகூர்வதற்காகவும், அவர்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி நாம் நடப்பதற்காகவும் இவ்விழா கொண்டாடப்படுகின்றது.
திருஅவையால் புனிதர்கள் என அங்கீகரிக்கப்பட்ட, கடவுளைத் தங்கள் வாழ்வாலும் வார்த்தையாலும் பிரதிபலித்தும் திருஅவையால் புனிதர்கள் என அங்கீகரிக்கப்படாமல் இருக்கின்ற யாவரும் கடவுளின் மக்களாக இருக்கின்றார்கள் என்று இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித யோவான் எடுத்துக் கூறுகின்றார். புனித யோவான் கூறக்கூடிய கடவுளின் மக்களாவது எல்லாராலும் சாத்தியப்படுமா…? அந்த நிலையை அடைய ஒருவர் என்ன செய்யவேண்டும்…? என்பன குறித்து தொடர்ந்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
எல்லாராலும் கடவுளின் மக்களாக, புனிதராக முடியும்
கடவுளின் மக்களாவது அல்லது புனிதராவது ஒருசிலரால்தான் முடியுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிடலாம். ஏனென்றால், திருவெளிபாடு நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில், எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் சார்ந்த, யாராலும் எண்ணிக்கையிட முடியாதவர்கள் அரியணைக்கும் ஆட்டுக்குட்டிக்கும் முன்பாக நின்றுகொண்டிருந்ததை தான் கண்டதாக யோவான் கூறுகின்றார். எல்லா நாட்டையும் குலத்தையும் மக்களினத்தையும் சார்ந்தவர்கள் விண்ணகத்தில் இருந்தார்கள் எனில், எல்லாராலும் மக்களின் மக்களாக, புனிதர்களாக முடியும் என்பதுதான் உண்மை.
இன்னும் சொல்லப்போனால், மண்ணகத்தில்தான் பாகுபாடும் வேற்றுமையும் இருக்குமே ஒழிய, விண்ணகத்தில் பாகுபாடு இருக்காது. அதனால் எல்லாரும் கடவுளின் மக்களாக, புனிதர்களாக முடியும். இதையே புனித அகுஸ்தின், “கிறிஸ்துவைப் பின்பற்றித் தூய்மையாக எத்தனையோ ஆண்களும் பெண்களும் வாழ்ந்திருக்க, நான் ஏன் வாழக்கூடாது” என்பார். அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் கடவுளின் மக்களாக, புனிதர்களாக மாறமுடியும். இந்த நிலையை நாம் அடைவதற்கு உதவியாக இருப்பவைதான் நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய எட்டுவிதமான பேறுகள்.
புனிதர்கள் விண்ணுலகில் மிகுந்த கைம்மாறு பெறுவார்கள்
மத்தேயு நற்செய்தியிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய நற்செய்தி வாசகத்தில், ஆண்டவர் இயேசு, ஏழையரின் உள்ளம், துயருறுதல், கனிவு, நீதியை நிலைநாட்டும் வேட்கை, இரக்கம், தூய்மையான உள்ளம், அமைதி, நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படல் ஆகிய எட்டுவிதமான பேறுகளைச் சுட்டிக்காட்டுகின்றார். இதற்கு விளக்கம் அளிக்கின்றபொழுது முன்னாள் திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், மலைப்பொழிவில் இடம்பெறுகின்ற எட்டுவிதமான பேறுகளும் இயேசுவிடத்தில் இருப்பவை. அதனால் அது தன்னிலை விளக்கமே என்று கூறுவார். அவ்வாறெனில், நாம் இயேசுவைப் போன்று அல்லது மலைப்பொழிவில் இடம்பெறுகின்ற எட்டுவிதமான பேறுகளின்படி நாம் நடக்கின்றபொழுது, நாம் கடவுளின் மக்களாகவும், புனிதர்களாகவும் ஆகின்றோம் என்பது உண்மையாகின்றது. இத்தகைய வாழ்க்கையை நாம் வாழ்கின்றபொழுது, இன்றைய நற்செய்தியின் இறுதியில் இயேசு சொல்வது போல், நமக்கு விண்ணுலகில் மிகுந்த கைம்மாறு கிடைக்கும் என்பதும் உறுதி.
ஆதலால், நாம் எத்தனையோ பேர் தங்களுடைய வாழ்வாலும் வார்த்தையாலும் கடவுளைப் பிரதிபலித்துப் புனிதர்களாகியிருக்கும்பொழுது, நம்மால் புனிதர்களாக முடியும் என்ற நம்பிக்கையோடு இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி கடவுளின் மக்களாக, புனிதர்களாக வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘கடவுளின் பார்வையில் எதுவும் சிறியதும் அல்ல, யாரும் சிறியவரும் அல்லர். எல்லாருமே விலையேறப்பெற்றவர்கள்! அதனால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றையும் அன்போடு செய்வோம்’ என்பார் குழந்தை இயேசுவின் புனித தெரேசா. ஆகையால், நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலையும் அன்போடு செய்து, கடவுளின் பார்வையில் விலையேறப்பெற்றவர்கள், புனிதர்களாய் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed