இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35
அக்காலத்தில்
பரிசேயர் சிலர் இயேசுவிடம் வந்து, “இங்கிருந்து போய்விடும்; ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்ல வேண்டும் என்றிருக்கிறான்” என்று கூறினர். அதற்கு அவர் கூறியது: “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவேன்; மூன்றாம் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள். இன்றும் நாளையும் அதற்கடுத்த நாளும் நான் தொடர்ந்து சென்றாக வேண்டும். ஏனெனில், இறைவாக்கினர் ஒருவர் எருசலேமுக்கு வெளியே மடிவது என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதே!
எருசலேமே, எருசலேமே, இறைவாக்கினரைக் கொல்லும் நகரே! உன்னிடம் அனுப்பப்பட்டோரைக் கல்லால் எறிகிறாயே! கோழி தன் குஞ்சுகளைத் தன் இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பது போல நானும் உன் மக்களை அரவணைத்துக்கொள்ள எத்தனையோ முறை விரும்பினேன்; உனக்கு விருப்பமில்லையே!
இதோ, உங்கள் இறை இல்லம் கைவிடப்படும். ‘ஆண்டவரின் பெயரால் வருபவர் ஆசி பெற்றவர்’ என நீங்கள் கூறும் நாள் வரும்வரை என்னைக் காணமாட்டீர்கள் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————————
சாவைக் கண்டு அஞ்சாத இயேசு
நிகழ்வு
ஜப்பானியச் சிறுவன் ஒருவன் குங் ஃபூ என்ற தர்கார்புக் கலையை, ஒரு பிரபல குங் ஃபூ ஆசிரியரிடமிருந்து கற்றுக்கொள்ள விரும்பினான். அதற்காக அவன் குறிப்பிட்ட அந்தக் குங் ஃபூ ஆசிரியரிடம் சென்றான்.
“வழக்கமாக என்னிடம் குங் ஃபூ கற்றுக்கொள்ள வருபவர்களை இங்கிருக்கும் ஒரு மிகச் சிறந்த குங் ஃபூ வீரனோடு மோதவிடுவது உண்டு. போட்டியில் நீ அந்த வீரனைத் தாக்குப் பிடித்தால், உனக்குக் நான் குங் ஃபூ கலையைக் கற்றுத் தருகின்றேன். இல்லையென்றால், உனக்கு என்னால் குங் ஃபூ கலையைக் கற்றுத் தரமுடியாது. இதற்குச் சம்மதமா?” என்று வந்திருந்த சிறுவனைப் பார்த்துக் கேட்டார் குங் ஃபூ ஆசிரியர். சிறுவனும், “சம்மதம்” என்று சொல்ல, போட்டி தொடங்கியது.
குங் ஃபூ கலையில் மிகச் சிறந்த வீரன், குங் ஃபூ கலையைக் கற்றுக்கொள்ள வந்திருந்த சிறுவனை நோக்கி ஓங்கி ஓங்கிக் குத்தினான்; ஆனால், ஒரு குத்துகூட தன்மேல் விழாமல் பார்த்துக் கொண்டான் அந்தச் சிறுவன். இது அவனைப் பார்த்துக் கொண்டிருந்த குங் ஃபூ ஆசிரியருக்கு மிகுந்த வியப்பைத் தந்தது.
போட்டி முடிந்ததும், சிறுவனைத் தன்னருகே அழைத்த குங் ஃபூ ஆசிரியர், “தம்பி! இதற்கு முன்பாக யாரிடமாவது குங் ஃபூ கலையைக் கற்றாயா” என்றார். அவன், “இல்லை” என்றதும், “அப்படியானால், எப்படி உன்னால் குங் ஃபூ கலையில் மிகச் சிறந்த வீரனை எதிர்கொள்ள முடிந்தது?” என்றார் குங் ஃபூ ஆசிரியர். அதற்கு அந்தச் சிறுவன் உறுதியான குரலில் பதில் சொன்னான்: “எனக்குச் சாவைப் பற்றியே அச்சம் கிடையாது.”
சிறுவனிடமிருந்து இப்படியோர் உறுதியான பதில் வரும் என்பதை எதிர்பார்த்திராத அந்தக் குங் ஃபூ ஆசிரியர், “தம்பி உனக்கு நான் குங் ஃபூ கற்றுத் தருவதற்குத் தயார்” என்று சொல்லி அவனுக்குக் குங் ஃபூ கலையைக் கற்றுக்கொடுக்கத் தொடங்கினார்..
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுவன் சாவைப் பற்றி அச்சமில்லாமல் இருந்தான். அதனாலேயே அவனால் மிகச் சிறந்த குங் ஃபூ வீரனையும் போட்டியில் மிக எளிதாக எதிர்கொள்ள முடிந்தது. இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சாவுக்கு அஞ்சாதவராய், “…..நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்கின்றார். இயேசு இத்தகைய வார்த்தைகளை எத்தகைய சூழ்நிலையில் கூறினார், இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
அஞ்சாமல் ஆண்டவரின் பணியைச் செய்த இயேசு
ஆண்டவர் இயேசு எருசலேம் நோக்கிச் சென்றுக்கொண்டிருக்கின்றார். அப்பொழுது அவரிடம் வருகின்ற சில பரிசேயர்கள், “இங்கிருந்து போய்விடும்: ஏனெனில் ஏரோது உம்மைக் கொல்லவேண்டும் என்றிருக்கின்றான்” என்கின்றார்கள்.
‘பரிசேயர்கள் எப்பொழுதும் இயேசுவுக்கு எதிராகச் சூழ்ச்சிதானே செய்வார்கள்; ஆனால், இன்றைய நற்செய்தியில் வருகின்ற பரிசேயர்கள், இயேசுவிடம் ஏரோதுவிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்வதற்கு வழிசொல்கின்றார்களே!’ என்ற குழப்பம் நமக்கு ஏற்படலாம். பரிசேயர்களில் எல்லாரும் தீயவர்கள் கிடையாது; நிக்கதேம் போன்ற நல்லவர்களும் இருந்தார்கள் அப்படிப்பட்டவர்கள்தான் இயேசுவிடம் ஏரோதின் திட்டத்தை எடுத்துக் கூறுகின்றார்கள். பரிசேயர்கள் இப்படியொரு செய்தியைச் சொன்னதும் இயேசு உயிருக்கு அஞ்சவில்லை. மாறாக, “இன்றும் நாளையும் பேய்களை ஓட்டுவேன்; பிணிகளைப் போக்குவன்; மூன்றால் நாளில் என் பணி நிறைவுபெறும் என நீங்கள் போய் அந்த நரியிடம் கூறுங்கள்” என்று மிகத் துணிச்சலாகக் கூறுகின்றார்.
ஆண்டவரின் உடனிருப்பை உணர்ந்து பணிசெய்த இயேசு
இயேசு மக்கள் நடுவில் இறையாட்சிப் பணியைச் செய்தபொழுது, அவருக்கு ஆட்சியாளர்களிடமிருந்தும் அதிகார வர்க்கத்திடமிருந்தும் பல்வேறு விதமான எதிர்ப்புகள் வந்தன. இவ்வளவு எதிர்ப்புகளுக்கு நடுவிலும் அவரால் மிகச் சிறப்பாக இறையாட்சிப் பணியைச் செய்ய முடிந்தது என்றால், அதற்கு ஒரே காரணம், அவர் தந்தைக் கடவுள் தன்னோடு எப்பொழுதும் உடனிருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்ந்ததால்தான். இதைத்தான் அவர் யோவான் நற்செய்தியில், “…..ஆயினும் நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கின்றார்” (யோவா 16: 32) என்கின்றார்.
கையால், நாம் இயேசுவைப் போன்று தந்தைக் கடவுள் நம்மோடு எப்பொழுதும் உடனிருக்கின்றார் என்பதை உணர்ந்து வாழ்ந்தோமெனில், நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.
சிந்தனை
‘அஞ்சாதே, ஏனெனில் நான் உன்னோடு இருக்கின்றேன்’ (எசா 43: 5) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவர் நம்மோடு உடனிருக்கின்றார் என்பதை உணர்ந்து, அவருடைய பணியை யாருக்கும் அஞ்சாமல் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed