பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா, எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி தொடர்ச்சி
இவ்வுலக வாழ்வில் பிரமாணிக்கமாய் நடக்கும் தமது மக்களுக்கு, மோட்சத்தில் எல்லையில்லா இன்பமும், சந்தோஷமும், சமாதானமும் அளித்து, பொன் மகுடம் சூட்டி மகிழ்விக்க ஆவலோடு காத்திருக்கிறார் நமது பரலோகப் பிதா. இம்முடிவிலா இன்பத்தைச் சுகித்தனுபவிக்கவே நம்மை சர்வேசுரன் உண்டாக்கினார். வான்வீடு அடைவதே நமது வாழ்க்கையின் ஏக குறிக்கோள்.
இங்கு ஒரு கேள்வி எழலாம். “சர்வேசுரன் மோட்சத்தில் மட்டும்தானா இருக்கிறார்? அவர்தான் எங்கும் நிறைந்திருக்கிறாரே; ஆதலால் நாம் ஏன் மோட்சத்திற்குப் போக ஆசிக்க வேண்டும்?” உண்மைதான்; சர்வேசுரன் எங்கும் வியாபித்திருக்கிறார்; பரலோகத்திலும், பூலோகத்திலும், நரகத்திலும், இருளிலும், ஒளியிலும் எங்குமிருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை.
தங்குதடையின்றி சூரிய வெளிச்சம் கண்ணாடியினுள் புகுவதுபோல நம் வாழ்க்கையிலும் சர்வேசுரன் நம்முடன் சேர்ந்து ஜீவிக்கிறார். ஏன்! நம்முள்ளத்திலேயே வாசம் செய்கிறார். இவ்விதமே கடவுள் எங்கும் வியாபித்திருக்க, ஏன் “பரமண்டலங்களிலே இருக்கிற எங்கள் பிதாவே” என்று ஜெபிக்க வேண்டும்?
காரணம், நித்திய ஜீவியமடைந்து சர்வேசுரனை முகமுகமாய்த் தரிசித்து சதா காலமும் சந்தோஷமாக ஜீவிப்பதற்கு நம்மில் ஒவ்வொருவருக்கும் அவர் ஒரு தனியிடம் தயாரித்திருப்பது மோட்சத்தில்தான்.
நமது துன்ப துரிதங்களை அகற்றி, வாழ்வின் இறுதியில் மோட்சானந்தத்தை அவர் நமக்கு அருளுவார்; ஆதலால் “முதன்முதலாக சர்வேசுரனுடைய இராச்சியத்தைத் தேடுங்கள்” என்ற ஆண்டவரின் அன்பழைப்புக்குச் செவிசாய்ப்போம். மோட்சம் போய்ச் சேர்வதில்தான் நமது இரட்சணியம் அடங்கியிருக்கின்றது. “எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி” என்று பன்முறை சொல்லும்போது, பரலோகத்தை அடைய நமக்கிருக்கும் தீரா ஆவலை வெளியிடுகிறோம் என்பதில் சந்தேகமில்லை.
பரலோக இராச்சியம் தனிப்பட்ட ஒருவனுக்கு மட்டுமே சொந்தமல்ல. உலக மாந்தர் அனைவருக்குமே சொந்தம் என்பதைக் குறித்தே “என்னை இரட்சியும்” என்று சொல்லாது, “எங்களை இரட்சியும்,” அதாவது, எங்கள் எல்லோரையும் காப்பாற்றும் என்று வேண்டுகிறோம்.
“ஓ! பரலோக பிதாவே! எங்கள் நேசத் தகப்பனே! உம்மை நோக்கி எமது கண்களை உயர்த்தும் இவ்வேளையில் எங்களுடைய ஆத்துமக் கண்களைத் திறந்தருளும். நிலையற்ற இவ்வுலக ஆடம்பரங்களிலும், ஆனந்த அக்களிப்பிலும், ஆசாபாசங்களிலும், எங்கள் கவனத்தைச் செலுத்தாது, வரவிருக்கும் நித்திய ஜீவியத்தில் எங்கள் முழுக் கவனத்தையும் செலுத்தக் கிருபை புரியும்.
உமது கற்பனைகளிலிருந்து ஒருபோதும் பிறழாது உத்தம கத்தோலிக்கராக ஜீவிக்க எங்களுக்கு உதவி செய்தருளும். உம்மையறியாது அஞ்ஞான இருளில் ஜீவிக்கும் மக்களை, எங்கள் போதனையாலும், சாதனையாலும் வசீகரித்து அவர்களும் எங்களோடு மோட்ச சம்பாவனையடையச் செய்ய எங்களுக்கு வேண்டிய திடனைத் தந்தருளும்.
“ஓ! எம் நேசத்தாயே! பிதாவாகிய சர்வேசுரனின் பிரிய குமாரத்தியே! நீர் இவ்வுலகில் இருக்கும்போது இடைவிடாது பக்திப் பற்றுதலுடன் பரம பிதாவிடம் வேண்டியது போலவே இப்போதும் பாவிகள் எங்களுக்காக பரலோகப் பிதாவிடம் மன்றாடுவீராக!”
பரமண்டலங்களிலேயிருக்கிற பிதாவாகிய சர்வேசுரா!
எங்களைத் தயை செய்து இரட்சியும் சுவாமி!.
Source: New feed