பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 12: 35-38
விழிப்பாய் இருப்போரும், அவர் பெறும் கைம்மாறும்
நிகழ்வு
ஹாலிவுட் நடிகரான ராபர்ட் ஹார்டி (Robert Hardy 1925-2017) ஒருநாள் ஒரு கனவு கண்டார். அந்தக் கனவில் வானதூதர் அவரிடம், “இன்னும் ஏழு நாள்கள்தான் உயிர் வாழப் போகிறாய்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.
‘இன்னும் ஏழு நாள்கள்தான் நான் உயிர் வாழப்போகிறேனா? அப்படியானால் இந்த ஏழு நாள்களையும் அர்த்தமுள்ள விதத்தில் வாழவேண்டும்’ என்று யோசித்தவாய், ஒரு குறிப்பேட்டையும் பேனாவையும் எடுத்துக்கொண்டு, ஏழு நாள்களில் எவற்றையெல்லாம் செய்யவேண்டும்… எப்படி வாழவேண்டும் என்று எழுதினார். பின்னர் தான் குறிப்பேட்டில் எழுதியது போன்றே ஒவ்வொரு நாளையும்; ஏன், ஒவ்வொரு வினாடியையும் மிகவும் பயனுள்ள வகையில் செலவழித்தார்.
ஏழாம் நாள் வந்தது. ‘இன்றோடு என்னுடைய வாழ்க்கை முடியப்போகிறது’ என்று நினைத்துக் கொண்டார். ஆனாலும்கூட அந்த நாளையும் அவர் மிகவும் பயனுள்ள வகையிலேயே வாழ்ந்தார். ஏழாம் நாள் முடிவில் முன்பு தோன்றிய வானதூதர், “ராபர்ட் ஹார்டி! நீ இன்று சாகமாட்டாய்; உயிரோடுதான் இருப்பாய்” என்று சொல்லிவிட்டு மறைந்துபோனார்.
வானதூதர் சொன்ன வார்த்தைகளைக் கேட்டு, கனவிலிருந்து விழித்தெழுந்த ராபர்ட் ஹார்டி, ‘இந்த ஏழாம் நாளில் சாவு வரவில்லை என்றால், இன்னொரு ஏழாம் நாளில் எப்படியும் சாவு வரத்தான் போகிறது. அதனால் இன்னும் ஏழு நாளில் சாகப் போகிறோம் என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு ஏழு நாளையும், ஒவ்வொரு வினாடியையும் பயனுள்ள விதமாய், எதற்கும் தயாராய் வாழ்வோம்’ என்று முடிவுசெய்துகொண்டு மிகவும் பயனுள்ள, எதற்கும் தயாரான வாழ்க்கை வாழத் தொடங்கினார்.
ஹாலிவுட் நடிகரான ராபர்ட் ஹார்டி எப்பொழுது ஆயத்தமாய், விழிப்பாய், தயாராய் இருந்தார். அதனாலேயே அவரால் மிகவும் பயனுள்ள வாழ்க்கை வாழ முடிந்தது; மக்களிடமிருந்து பெயரையும் புகழையும் பெற முடிந்தது. இன்றைய நற்செய்தி வாசகம், விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தையும், அவ்வாறு இருப்போர் பெறுகின்ற கைம்மாறையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. நாம் அவற்றைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
நாம் ஏன் விழிப்பாய் இருக்கவேண்டும்?
நம்முடைய அன்றாட வாழ்வில் விழிப்பாய் அல்லது ஆயத்தமாய் இருப்பது மிகவும் இன்றியமையாதது. அதுவும் ஆண்டவரின் வருகைக்காக நாம் நம்மையே தயார் செய்யவேண்டும் என்றால், நான் எந்தளவுக்கு விழிப்பாய் இருக்கவேண்டும் என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளலாம்.
பழங்காலத்தில் இன்றைக்கு இருப்பது போன்று போக்குவரத்து வசதிகளும் கிடையாது; தொலை தொடர்பு வசதிகளும் கிடையாது. ஆதலால், வீட்டைப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியூருக்குச் செல்லும் தலைவர் எந்த நேரத்திலும் வரலாம். அவர் எந்த நேரத்தில் வந்தாலும், வீட்டுப் பொறுப்பாளர் விழிப்பாய், ஆயத்தமாய் இருக்கவேண்டும். இல்லையென்றால் வீட்டுத் தலைவரால் வீட்டுப் பொறுப்பாளர் கடுமையாகத் தண்டிக்கப்படுவார். இந்த வாழ்வியல் உண்மையை எடுத்துக்கொண்டு ஆண்டவர் இயேசு, மானிட மகன் எந்த நேரத்திலும் வருவார், அதனால் அவருடைய வருகைக்காக ஒவ்வொருவரும் விழிப்பாய் இருங்கள் என்று அறிவுறுத்துகின்றார்.
விழிப்பாய் இருப்போர் பெறுகின்ற கைம்மாறு
விழிப்பாய் இருக்கவேண்டியதன் முக்கியத்துவத்தைக் குறித்துப் பேசிய இயேசு, விழிப்பாய் இருப்போர் பெறுகின்ற கைம்மாறினையும் குறித்துப் பேசுகின்றார். தன்னுடைய வீட்டை, வீட்டுப் பொறுப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே போகும் வீட்டுத் தலைவர், தான் திரும்பி வருகின்றபொழுது, வீட்டுப் பொறுப்பாளர் விழிப்பாய் இருக்கின்ற பட்சத்தில், அவரை அவர் பந்தியில் அமரச் செய்து, அவருக்குப் பணிவிடை செய்வார் என்கின்றார். வீட்டுத் தலைவரே பொறுப்பாளருக்குப் பணிவிடை செய்வார் என்பது வீட்டுப் பொறுப்பாளர் பெறுகின்ற மிகப்பெரிய பேறு. இது ஆண்டவர் இயேசு சொல்லக்கூடிய, “மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, தொண்டு ஆற்றவும் பலருடைய மீட்புக்கு ஈடாகத் தம் உயிரைக் கொடுப்பதற்கும் வந்தார்” (மத் 20: 28) என்பதை நினைவுபடுத்தாய் இருக்கின்றன.
அப்படியெனில், மானிட மகனுடைய வருகைக்காக விழிப்பாய் இருப்போருக்கு ஆண்டவரே பணிவிடை செய்வார் என்பது மிகப்பெரிய பேறல்லவா! ஆதலால், நாம் எப்பொழுதும் ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து விழிப்பாய் இருப்போம். அவர் தருகின்ற கைம்மாறைப் பெற்று மகிழ்வோம்.
சிந்தனை
‘எதற்கும் தயாராய் இருப்பதே, ஒருவருடைய வாழ்க்கையைத் தீர்மானிக்கின்றது’ என்பார் ஷேக்ஸ்பியர். ஆகையால், நாம் மானிட மகனுடைய வருகைக்காக எப்பொழுது தயாராய் இருப்போம்; இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Source: New feed