அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற தனது புதிய திருமடலையும், வறுமை ஒழிப்பு உலக நாளையும் மையப்படுத்தி, வறுமை (#Poverty), அனைவரும் உடன்பிறந்தோர், (#FratelliTutti) வறுமை ஒழிப்பு (#EndPoverty) ஆகிய மூன்று ‘ஹாஷ்டாக்’குகளுடன், அக்டோபர் 17, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
அக்டோபர் 17, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, வறுமை ஒழிப்பு உலக நாளையொட்டி திருத்தந்தை வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “நாம் அனைவரும் ஒன்றாக காப்பாற்றப்படுவோம் அல்லது, எவரும் காப்பாற்றப்படமாட்டோம் என்ற விழிப்புணர்வை வளர்த்துக்கொள்ளவேண்டியது, இந்நாள்களில் நமக்கு தேவைப்படுகின்றது. உலக வாழ்வின் ஒரு பகுதியாக இருக்கின்ற அழிவும், துன்பமும், பிரச்சனைகளைப் பெருக்கும் தளமாக அமைந்துள்ளன, இவை, பூமிக்கோளம் முழுவதையும் பாதிப்பதில் கொண்டுபோய் சேர்க்கும்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
அமைதிக்காக பல்சமய செப வழிபாடு
மேலும், அக்டோபர் 20, வருகிற செவ்வாயன்று, உரோம் நகரின் Campidoglioவில் “எவரும் தனியாகக் காப்பாற்றப்பட முடியாது, அமைதி மற்றும், உடன்பிறந்த உணர்வு” என்ற தலைப்பில் நடைபெறும், பல்சமய வழிபாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இறைவேண்டல் வழிபாட்டில், போர்கள் மற்றும், கோவிட்-19 கொள்ளைநோய்க்குப் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1986ம் ஆண்டில், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் தலைமையில், இத்தாலி நாட்டின் அசிசியில் நடைபெற்ற, பல்சமய அமைதி வழிபாட்டிற்குப்பின், உரோம் நகரை மையமாகக் கொண்டு இயங்கிவரும் சான் எஜிதியோ பிறரன்பு அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும், அமைதிக்காக, பல்சமய வழிபாடு ஒன்றை நடத்திவருகிறது.
அந்த அமைப்பு வருகிற செவ்வாயன்று நடத்தும் 34வது பல்சமய செபவழிபாட்டில் திருத்தந்தை கலந்துகொள்ளவிருக்கிறார். 2016ம் ஆண்டில், சான் எஜிதியோ அமைப்பு அசிசி நகரில் நடத்திய முப்பதாவது பல்சமய செபவழிபாட்டில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source: New feed