பரிசேயரே உங்களுக்குக் கேடு! ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு!
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 42-46
அக்காலத்தில் இயேசு கூறியது:
“ஐயோ! பரிசேயரே உங்களுக்குக் கேடு! நீங்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைக்கிறீர்கள். ஆனால் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்துவதில்லை. இவற்றைத்தான் கடைப்பிடித்திருக்க வேண்டும்; ஆனால் அவற்றையும் விட்டுவிடலாகாது.
ஐயோ! பரிசேயரே, உங்களுக்குக் கேடு! தொழுகைக்கூடங்களில் முதன்மையான இருக்கைகளையும் சந்தை வெளிகளில் மக்கள் வணக்கம் செலுத்துவதையும் விரும்புகிறீர்களே. ஐயோ! உங்களுக்குக் கேடு! ஏனெனில் நீங்கள் அடையாளம் தெரியாத கல்லறைகள் போல் இருக்கிறீர்கள். மக்களும் கல்லறைகள் எனத் தெரியாமல் அவற்றின் மீது நடந்து போகிறார்கள்.”
திருச்சட்ட அறிஞருள் ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே, இவற்றைச் சொல்லி எங்களை இழிவு படுத்துகிறீர்” என்றார்.
அதற்கு அவர், “ஐயோ! திருச்சட்ட அறிஞரே, உங்களுக்கும் கேடு! ஏனென்றால் நீங்கள் தாங்க முடியாத சுமைகளை மக்கள் மேல் சுமத்துகிறீர்கள்; நீங்களோ அந்தச் சுமைகளை ஒரு விரலால் கூடத் தொடமாட்டீர்கள்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
லூக்கா 11: 42-46
அடையாளம் தெரியாத கல்லறைகள்
நிகழ்வு
அந்தச் செல்வந்தருக்குத் திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் குழந்தையே இல்லை. அதனால் அவர் ஒரு பையனைத் தத்தெடுத்து, தன்னுடைய சொத்துக்கு அதிபதியாக்க நினைத்தார். இதையடுத்து அவர் ஒருநாள் மாலை வேளையில், நகரில் இருந்த அரசு பள்ளியின் முன்பாக நின்றுகொண்டு, ‘பள்ளியிலிருந்து எந்த மாணவர் மிகவும் அடக்க ஒடுக்கமாக வருகின்றாரோ, அவரை என் மகனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற முடிவோடு இருந்தார்.
வகுப்புகள் எல்லாம் முடிந்து, பள்ளிக்கூடம் விட்டதும், மாணவர்கள் அனைவரும் துள்ளிக் குதித்து வெளியே ஓடிவந்தார்கள். அவர்களையெல்லாம் பார்த்த செல்வந்தர், ‘இவர்களில் யாரும் என்னுடைய மகனாக இருப்பதற்குத் தகுதியில்லாதவர்கள்’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டார். எல்லாரும் பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, ஒரு மாணவன் மட்டும் குனிந்த தலை நிமிராமல், தரையைப் பார்த்த வண்ணம் நடந்துவந்தான். அவனை அவ்வாறு பார்த்த செல்வந்தர், ‘இவன்தான் நான் தேடிக்கொண்டிருந்தவன்; இவன்தான் என்னுடைய சொத்துக்கு அதிபதி’ என்று உறுதிசெய்துகொண்டு, நேராக அவனை நோக்கிச் சென்றார்.
“தம்பி! உன்னுடைய அடக்க ஒடுக்கம் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. அதனால் நீதான் என்னுடைய சொத்துக்கு அதிபதி” என்று சத்தமாகச் சொன்னார் செல்வந்தார். இதைக் கேட்டுக் குனிந்த தலை நிமிராமல் வந்துகொண்டிருந்த மாணவன் புளாகாங்கிதம் அடைந்தான்; ஆனால், இதைக் கேட்ட, பக்கத்திலிருந்த கடைக்காரர் ஒருவர், “ஐயா! இந்த மாணவன், குனிந்த தலை நிமிராமல் வருகிறான் என்பதற்காக இவன் அடக்கமான பையன் என நினைக்க வேண்டாம். சில நாள்களுக்கு முன்பாகக் கீழே ஒரு நூறு உரூபாயைக் கண்டெடுத்தான். அதனால்தான் இவன் இன்னமும் ஏதாவது கிடைக்குமா? என்று தரையையே பார்த்துக்கொண்டு நடக்கின்றான்” என்றார்.
கடைக்காரர் இவ்வாறு சொன்னதுபோதுதான் செல்வந்தருக்கு அறிவுக்கண் திறந்தது. ‘ஒருவருடைய வெளித்தோற்றத்தைப் பார்த்து அவர் நல்லவர் என முடிவுசெய்வது எவ்வளவு பெரிய தவறு! நல்லவேளை கடைக்காரர் புண்ணியத்தில் அந்தத் தவற்றைச் செய்யவில்லை” என்று செல்வந்தர் ஆறுதல் அடைந்தார்.
இந்த நிகழ்வில் வருகின்ற மாணவனைப் போன்றுதான் பலர் வெளிப்பார்வை நல்லவர்களாக இருக்கின்றார்கள். உண்மையில் அவர்கள் தீயவர்களாக இருக்கின்றார்கள். நற்செய்தியில் வருகின்ற பரிசேயர்களும் அப்படித்தான், வெளிப்பார்வைக்கு நல்லவர்களாகவும், உள்ளுக்குள் தீயவர்களாகவும் இருந்தார்கள். இதனாலேயே இயேசு அவர்களைச் சாடுகின்றார். பரிசேயர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது? நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும்? என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
நீதியையும் அன்பையும் காற்றில் பறக்கவிட்ட பரிசேயர்கள்
இயேசுவின் காலத்தில் வாழ்ந்துவந்த பரிசேயர்கள் மக்கள் தங்களைப் புகழவேண்டும், பாராட்ட என்பதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்தார்கள். அதற்காக அவர்கள் புதினா, கறியிலை மற்றும் கீரைச் செடிவகைகள் எல்லாவற்றிலும் பத்திலொரு பங்கைக் காணிக்கையாகப் படைத்தார்கள்; ஆனால், அவர்கள் நீதியையும் கடவுளின் அன்பையும் பொருட்படுத்தவே இல்லை. புதினா கறியிலை, கீரைச் செடிவகைகளில் பத்திலொரு பங்கைச் செலுத்துவது தேவையானதுதான். அதற்காக நீதியையும் கடவுளின் அன்பையும் பொருள்படுத்தாமல் வாழ்வது, இறைவனுக்கு உகந்த வாழ்வாக இருக்காது. அதனாலேயே இயேசு அவர்களைக் கடிந்துகொள்கின்றார்.
அடையாளம் தெரியாத கல்லறையைப் போன்று இருந்த பரிசேயர்கள்
இயேசு பரிசேயர்களின் வெளிவேடத்தைச் சாடுகின்றபொழுதே, அவர்களை அடையாளம் தெரியாத கல்லறைகள் அல்லது வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள் என்று சாடுகின்றார்.
ஆண்டுதோறும் நடக்கும் பாஸ்கா விழாவிற்குப் பல்வேறு இடங்களிலும் சிதறி வாழ்ந்த யூதர்கள் எருசலேமிற்கு வருவது வழக்கம். அப்பொழுது நகரின் வெளியே இருக்கும் கல்லறைகளைப் பார்ப்போர் முகம் சுழிக்கக்கூடாது என்பதற்காக கல்லறைகளில் வெள்ளையடித்துவிடுவது உண்டு. இதனால் கல்லறைகளைப் பார்ப்போர் முகம் சுழிப்பது கிடையாது. இந்த வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளோடு பரிசேயர்களை ஒப்பிடுகின்ற இயேசு, அவர்களுடைய வாழ்வும், மக்கள் பார்வைக்கு நல்லதாகவும், உள்ளுக்குள் தீமைகள் நிறைந்ததாகவும் இருக்கின்றது என்று சாடுகின்றார்.
அன்று பரிசேயர்கள் வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்து, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருந்தது போன்று, இன்றும் பலர் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளாக இருக்கின்றார்கள். இவர்கள் தங்களுடைய வாழ்வைத் தன்னாய்வுக்கு உட்படுத்திப் பார்த்து, கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வது நல்லது.
சிந்தனை
‘கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்’ (திபா 51: 10) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் தூயதோர் உள்ளத்தோர் படைத்தருள கடவுளிடம் வேண்டி, வெளிவேடம் இல்லாமல், தூயவர்களாய் வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed