மரண தண்டனைக்கு எதிரான உலக நாள், மன நல உலக நாள் ஆகியவற்றை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார்.
“மரண தண்டனை, எம்முறையில் நிறைவேற்றப்பட்டாலும், அது முற்றிலும் தடை செய்யப்படுவதற்கு மட்டுமல்லாமல், தங்களின் சுதந்திரம் மறுக்கப்படுகின்ற மனிதரின் மாண்பை மதிக்கும் விதமாக, சிறைகளின் தரங்கள் முன்னேற்றப்படுவதற்கும், அனைத்து கிறிஸ்தவர்களும், நன்மனம்கொண்ட எல்லாரும் உழைப்பதற்கு இன்று அழைக்கப்பட்டுள்ளனர்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் இடம்பெற்றிருந்தன.
மன நல உலக நாளை மையப்படுத்தி, “அனைவரும் உடன்பிறந்தோர்” (#FratelliTutti) என்ற ஹாஷ்டாக்குடன் திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “ஒவ்வொரு மனிதரும், அவர் எந்த குறைபாடுகளுடன் பிறந்திருந்தாலும், அல்லது வளர்ந்திருந்தாலும், அவர் மாண்புடன் வாழவும், தன்னை முழுமையாக முன்னேற்றவும் உரிமையைக் கொண்டுள்ளார், மனிதரின் அளவற்ற மாண்பு, சூழ்நிலைகளை வைத்து அல்ல, மாறாக, அவரது இருப்பின் அகநிலை மதிப்பை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றது” என்ற வார்த்தைகள் பதிவாகியிருந்தன.
மன நலம், ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் எவ்வளவு முக்கியமானது என்பது கற்றுக்கொடுக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி, 1992ம் ஆண்டு அக்டோபரில் மன நல உலக நாள், முதன்முறையாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பின்னர், 1994ம் ஆண்டில் இந்த உலக நாளுக்கென, ஒரு தலைப்பு பரிந்துரைக்கப்பட்டு, அது ஒரு குறிப்பிட்ட நாளில் சிறப்பிக்கப்படவேண்டும் என்று கூறப்பட்டது. அதன்படி, மன நல உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 10ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இச்சனிக்கிழமையன்று மனச்சோர்வு என்ற தலைப்பில், கோவிட்-19 கொள்ளைநோய் நெருக்கடிக்கு மத்தியில், மன நலம் உலக நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
Source: New feed