இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் அதிகம் பேறுபெற்றோர்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 27-28
அக்காலத்தில்
இயேசு மக்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்திலிருந்து பெண் ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்று குரலெழுப்பிக் கூறினார்.
அவரோ, “இறைவார்த்தையைக் கேட்டு அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் அதிகம் பேறுபெற்றோர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————-
“தத்தம் கருமமே கட்டளைக் கல்”
நிகழ்வு
இயேசு கிறிஸ்துவைப் பற்றி மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என நால்வர் எழுதிய நற்செய்தி நூல்களிலிருந்து நாம் வாசிக்கின்றோம். திருமுகங்களிலும் அவரைக் குறித்து நாம் வாசிக்கின்றோம்; ஆனால், யாருமே இயேசு கறுப்பா? சிகப்பா? உயரமா? குள்ளமா? என்று குறிப்பிடவில்லை.
இயேசு கிறிஸ்துவைப் பற்றி வரையப்பட்ட ஓவியங்களில் வெகுவாகப் பாராட்டப்படக் கூடிய ஓவியங்கள், அமெரிக்காவைச் சார்ந்த மிகப்பெரிய ஓவியரான வார்னர் சல்மானுடைய (Warner Sallman) ஓவியங்கள். இவர் இயேசுவைப் பற்றி வரைந்த ஓவியங்கள் இதுவரை ஐம்பது கோடிக்கும் மேல் விற்பனை ஆகியுள்ளன. இவர் இவ்வளவு புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த கதை மிகவும் வியப்புக்குரியது.
குறிப்பிட்ட ஒரு நிறுவனம் வார்னர் சல்மானிடம் இயேசுவின் ஓவியத்தை வரைந்து தருவதற்கு ஒரு காலக்கெடுவைக் கொடுத்து ஒப்பந்தம் செய்திருந்தது. நாள்கள் கடந்து போனதே ஒழிய, வார்னர் சல்மானால் இயேசுவின் ஓவியத்தை வரைய முடிய முடியவில்லை. இப்படி இருக்கையில் ஒருநாள் இரவு இவர் திடீரெனத் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து, தன் மனத்தில் தோன்றிய எண்ணங்களை ஓர் ஓவியமாக வரைந்தார். அந்த ஓவியம்தான் இயேசுவைப் பற்றி வரையப்பட்ட புகழ்பெற்ற ஓவியமாகும். இதிலுள்ள சிறப்பு என்னவெனில், இயேசு கறுப்பா? சிகப்பா? உயரமா? குள்ளமா? என எதுவமே தெரியாது.
நற்செய்தியாளர்களும், இயேசுவைப் பற்றி மிகச் சிறப்பான ஓவியம் வரைந்த வார்னர் சல்மானும், இயேசு கறுப்பா? சிகப்பா? உயரமா? குள்ளமா? என்பன குறித்த செய்திகளைச் சொல்லானது, நமக்கு ஒரு முக்கியமான செய்தியைச் சொல்கின்றது, அது என்னவெனில், ஒருவருக்குப் பெருமை சேர்ப்பது அவருடைய வெளித்தோற்றம் அல்ல, மாறாக, அவருடைய வாழ்க்கை, அதுவும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை ஆகும் என்பதுதான். ஆம், இயேசு தன் வாழ்நாள் முழுவதும் கடவுளின் வார்த்தையை கடைப்பிடித்து, அவருடைய திருவுளத்தின்படி வாழ்ந்தார். அதனால்தான் இன்றைக்கும் நாம் அவரை நினைவுகூர்ந்து பார்க்கின்றோம். இன்றைய நற்செய்தி வாசகம், எது உண்மையான பேறு என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கின்றது. அதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பெற்றெடுத்த மரியாவைப் பேறுபெற்றவர் என்ற பெண்
நேற்றைய நற்செய்தி வாசகத்தின் தொடர்ச்சியாக இருக்கின்றது இன்றைய நற்செய்தி வாசகம். நேற்றைய நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, தன்னைப் பேய்களின் தலைவனாகிய பெயல்செபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்று விமர்சித்த மனிதர்களுக்கு, அதாவது பரிசேயர்களுக்குத் தக்க பதில் கொடுத்திருப்பார். இதைப் பார்த்துவிட்டுக் கூட்டத்திலிருந்த பெண்மணி ஒருவர், “உம்மைக் கருத்தாங்கிப் பாலூட்டி வளர்த்த உம் தாய் பேறுபெற்றவர்” என்கின்றார்.
இயேசு, தன்னுடைய காலத்தில் வாழ்ந்து வந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று போதிக்கவில்லை; அவர் மிகவும் அதிகாரத்தோடு கற்பித்தார் (மத் 7:29). அதைப் பார்த்துவிட்டுத்தான் கூட்டத்திலிருந்த பெண்மணி, மரியாவைப் பேறுபெற்றவர் என்கின்றார். அதற்கு இயேசு அவரிடம், “இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர்” என்கின்றார். இதன் மூலம் இயேசு, தன்னுடைய தாய் மரியா தன்னைப் பெற்றெடுத்ததால் மட்டுமல்ல, இறைவார்த்தையின் நடப்பதாலும் பேறுபெற்றவர் என்கின்றார்.
பெயருக்குக் கிறிஸ்தவர்களாக இருப்பது எல்லாம் பெருமையே இல்லை
இறைவார்த்தையைக் கேட்டு, அதைக் கடைப்பிடிப்போர் இன்னும் மிகுதியாகப் பேறுபெற்றோர் என்று இயேசு சொல்வதன் மூலம், தாங்கள் ஆபிரகாமின் மக்கள் என்றும், தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட இனம் என்றும் சொல்லிக்கொண்டிருந்த யூதர்களை, அதிலும் குறிப்பாகப் பரிசேயர்களை நேரடியாகச் சாடுகின்றார். ஏனென்றால், பரிசேயர்கள் ஆபிரகாமின் மக்கள் என்று சொல்லிக் கொண்டு அலைந்தார்களே ஒழிய, ஆபிரகாமைப் போன்று ஆண்டவரில், இயேசுவில் நம்பிக்கை வைக்கவில்லை. மாறாக, அவருக்கு எதிராகச் செயல்பட்டார்கள். அப்படியானால், ஒருவருடைய வெளித்தோற்றமோ, அவர் சார்ந்திருக்கும் இனமோ, குலமோ அவருக்குப் பெருமை சேர்த்துவிடாது. அவருடைய வாழ்க்கைதான் அவருக்குப் பெருமை சேர்க்கும். மரியா ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு அதன்படி நடந்தார்; இயேசுவும் அப்படித்தான் வாழ்ந்தார். நாமும் இருக்கின்றபொழுதுதான் பேறுபெற்றவர்கள் ஆக முடியும்.
இன்றைக்கு ஒருசிலர் பெயருக்குக் கிறிஸ்தவர்களாக இருக்கின்றார்கள். அவர்களுடைய வாழ்வோ கிறிஸ்துவின் போதனைக்கு முற்றிலும் எதிரானதாக இருக்கின்றது. இத்தகையோர் தங்களைக் கிறிஸ்துவர்கள் என்று சொல்வதற்கு வெட்கப் படவேண்டும் அல்லது இயேசுவின் வார்த்தையின் படி நடந்து, உண்மையான கிறிஸ்தவர்களாக வாழவேண்டும்.
எனவே, நாம் பெயருக்குக் கிறிஸ்தவர்களாக வாழாமல், ஆண்டவர் வார்த்தையைக் கடைப்பிடித்து, பெயர் சொல்லும் கிறிஸ்தவர்களாக, கடவுளின் மக்களாக வாழ்வோம்.
சிந்தனை
‘பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமே கட்டளைக் கல்’ (505) என்பார் திருவள்ளுவர். ஒரு மனிதருடைய செயல்களே அவருக்குப் பெருமை சேர்க்கும் என்பதுதான் இந்தக் குரளின் பொருள். ஆகையால், நாம் வீண் பெருமைகளைப் பேசிக்கொண்டிருக்காமல், இறைவனின் வார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, அதன்மூலம் பேறுபெற்றவர்கள் ஆவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed