ஒளி நிறை மறையுண்மைகள்.
1. இயேசு யோர்தான் ஆற்றங்கரையில் திருமுழுக்குப் பெற்றதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில் “கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும்” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார். கேட்பதிலும், தேடுவதிலும், தட்டுவதிலும் பின்புலமாக ஆதாரமாக இருப்பது நம்பிக்கை என்னும் விசுவாசமே ஆகும். நம் விண்ணகத் தந்தையிடம் விசுவாசத்தோடு கூடிய விண்ணப்பங்களை வைக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கானாவூர் திருமணத்தில் தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியதைத் தியானித்து,
நற்செய்தியில், “பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா?” என இயேசு கேட்கிறார். இறைவன் நமக்கு அளிப்பதெல்லாம் நமக்கு உகந்த ஒன்றேயாகும் என்பதை உணர இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசு இறையாட்சியை அறிவித்ததைத் தியானித்து,
கத்தோலிக்க திருச்சபை அக்டோபர் மாதத்தை ஜெபமாலை மாதமாக அனுசரித்து வருகிறது. அக்டோபர் மாதம் ஜெபமாலை அன்னைக்குரிய மாதமாகும். அலகையை அகற்றிட அன்னை அளித்த செபமாலையை இந்த மாதம் முழுவதும் செபிப்போம். தினமும் குறைந்தது நான்கு செபமாலையாவது செபிக்க உறுதி கொண்டு இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு தாபோர் மலையில் உருமாற்றம் அடைந்ததைத் தியானித்து,
பாவ வாழ்க்கையினால் மனம் வருந்தி இறைவனிடம் அழுது மன்னிப்பினை நாடி ஆண்டவரின் பாதைக்குத் திரும்பிய பெலாஜியாவை புனிதர் நிலைக்கு உயர்த்திய இறைவன் நம் பாவங்களையும் மன்னித்து நமக்கு நித்திய பேரின்பத்தை அளித்திட வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு இராவுணவின் போது நற்கருணையை ஏற்படுத்தியதைத் தியானித்து,
இயேசுவின் திருவுடல் திரு இரத்தம் கொரோனா நோய்த் தொற்று கொண்டவர்களை முற்றிலும் குணமாக்கிட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Source: New feed