அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli Tutti)” என்ற தனது புதிய திருமடலை மையப்படுத்தி, அக்டோபர் 06 இச்செவ்வாயன்று, (#FratelliTutti) அனைவரும் உடன்பிறந்தோர் என்ற ‘ஹாஷ்டாக்’குடன் டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலக மக்கள் எல்லாரும் ஏங்கும் உடன்பிறந்த உணர்வு மறுபிறப்பு எடுக்கவேண்டும் என்ற தனது ஆவலை வெளியிட்டுள்ளார்.
“நாம் வாழும் இக்காலத்தில், ஒவ்வொரு மனிதரின் மாண்பு ஏற்கப்பட்டு, உலகளாவிய உடன்பிறந்த உணர்வுக்கு எழும்பியுள்ள ஏக்கம் மறுபிறப்படைய, நாம் உதவவேண்டும் என்பது எனது ஆவல்” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில் பதிவாகியிருந்தன.
திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியில், “ஒற்றை மனிதக் குடும்பமாக, ஒரே சதையைப் பகிர்ந்துகொள்ளும் உடன் பயணிகளாக, நம் பொதுவான இல்லமாகிய ஒரே பூமியின் பிள்ளைகளாக, அனைவரும் சகோதரர், சகோதரிகளாக வாழ, கனவு காண்போம்” என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.
அக்டோபர் 03, இச்சனிக்கிழமையன்று அசிசி நகர் புனித பிரான்சிசின் கல்லறையில் கையெழுத்திடப்பட்டு, அந்தப் புனிதரின் திருநாளாகிய அக்டோபர் 04, இஞ்ஞாயிறன்று, வெளியிடப்பட்ட “அனைவரும் உடன்பிறந்தோர்” என்ற புதிய திருமடல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தலைமைப் பணிக்காலத்தில் வெளியிட்டுள்ள மூன்றாவது திருமடலாகும்.
மூன்று திருமடல்கள்
இக்கால உலகிற்கு அதிகம் தேவைப்படுகின்ற, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாத்தல், மனித உடன்பிறந்தநிலை, மற்றும், சமுதாய நட்புறவு ஆகியவற்றை மையப்படுத்தி திருத்தந்தையின் இரு திருமடல்கள் வெளிவந்துள்ளன.
2020ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி திருத்தந்தை வெளியிட்ட, “Fratelli Tutti” அதாவது அனைவரும் உடன்பிறந்தோர் என்ற மூன்றாவது திருமடல், நாம் எல்லாரும் சகோதரர், சகோதரிகள் என்ற உணர்வில் வாழ்வதற்கு அழைப்பு விடுக்கிறது.
2015ம் ஆண்டு மே மாதம் 24ம் தேதி திருத்தந்தை வெளியிட்ட, Laudato si‘ அதாவது இறைவா உமக்கே புகழ் என்ற இரண்டாவது திருமடல், கடவுளின் படைப்பையும், இப்பூமிக்கோளத்தையும் அழிவினின்று பாதுகாக்கவேண்டிய நம் அனைவரின் கடமையை வலியுறுத்துகிறது.
2013ம் ஆண்டு ஜூன் மாதம் 29ம் தேதி தேதி திருத்தந்தை வெளியிட்ட, Lumen Fidei அதாவது நம்பிக்கையின் ஒளி என்ற முதல் திருமடல், நம்பிக்கை ஆண்டை முன்னிட்டு வெளியிடப்பட்டது. இந்த திருமடலை, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் எழுதத் தொடங்கினார். அதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவுசெய்து வெளியிட்டார்.
Source: New feed