நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 1-12
அக்காலத்தில்
இயேசு வேறு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்பினார்.
அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: “அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகையால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள்களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்புகிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம்.
நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், ‘இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!’ என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டிலேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே.
வீடு வீடாய்ச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொண்டால் உங்களுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறையாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள்.
நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ எனச் சொல்லுங்கள்.
அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————-
குழந்தை தெரசா (அக்டோபர் 01)
நிகழ்வு
தெரசா சிறுமியாக இருந்தபோது பிரான்சினி என்ற கொலை குற்றவாளி ஒருவன் இருந்தான். அவன் ஒரு குடும்பத்தில் இருந்த மூன்று பேரை கொலை செய்ததற்காக சிறையில் அடைக்கப்பட்டு, மரணதண்டனைக்காகக் காத்திருந்தான். அவனைக் குறித்து கேள்விப்பட்ட தெரசா அவன் மனம்மாறவேண்டும் என்று தொடர்ந்து ஜெபித்து வந்தார். தெரசாவின் இடைவிடாத ஜெபத்திற்கு பலன் கிடைத்தது. ஆம், பிரான்சினி என்ற அந்த கொலை குற்றவாளி தான் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன்பாக தன்னுடைய பாவத்தை உணர்ந்தான். அது மட்டுமல்லாமல் சிலுவையை தன்னுடைய கையில் ஏந்தி சிறைச்சாலைக்கு வந்த ஒரு பிராசிஸ்கன் துறவியிடம் தன்னுடைய பாவங்களை எல்லாம் அறிக்கையிட்டு, அவர் கொண்டுவந்த சிலுவையை முத்திசெய்தி, முற்றிலுமாக மனம்மாறினான்.
பிரான்சினி தன்னுடைய பாவங்களை உணர்ந்து மனம்மாறிய செய்தி அடுத்தநாள் பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வந்தது. இச்செய்தி மற்றவர்களுக்கு மகிழ்ச்சி அளித்ததோ இல்லையோ, தெரசாவிற்கு அதிகமான மகிழ்ச்சியைத் தந்தது. அன்றிலிருந்தே அவர் பாவிகளின் மனமாற்றத்திற்காக, ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக தொடர்ந்து ஜெபித்து வந்தார்.
வாழ்க்கை வரலாறு
தெரசா 1873 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் நாள், பிரான்சு நாட்டில் உள்ள ஆலேன்கோன் என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை லூயிஸ் மார்டின், தாய் செலி என்பவர் ஆவார். தெரசாவின் குடும்பத்தில் அவர்தான் கடைக்குட்டி, அவரோடு பிறந்தவர்கள் எட்டு சகோதரிகள், ஆனால் அதில் நான்கு சகோதரிகள் மட்டுமே உயிரோடு இருந்தார்கள். தெரசாவின் பெற்றோர் இருவருமே தங்களுடைய இளமைக் காலத்தில் துறவியாக போகவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார்கள். ஆனால் அது முடியாமல் போகவே, தங்களுடைய பிள்ளைகளை கடவுளுக்கு உகந்தவர்களாய் வளர்த்து அதன்மூலமாக அவர்களைத் துறவிகளாக மாற்றினார்கள்.
தெரசாவிற்கு நான்கு வயது நடந்துகொண்டிருந்தபோது அவருடைய தாய் அவரை விட்டுப் பிரிந்துபோனார். அவருடைய அன்னையின் இழப்பு அவரை மீளாத் துயரில் ஆழ்த்தியது. இந்த நேரத்தில் தெரசாவின் மூத்த சகோதரி பவுலின்தான் அவருக்கு ஒரு தாயைப் போன்று இருந்து, அவருக்கு உதவிகளையும் செய்து, அவரைச் சிறப்பாக வளர்த்தெடுத்தார். இந்த நேரத்தில் தெரசா அடிக்கடி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். ஒரு சமயம் அவர் இப்படி நோய் வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தபோது அவருடைய குடும்பத்தில் இருந்த எல்லாரும் இயேசுவிடமும் அன்னை மரியாவிடமும் ஜெபித்து வந்தார்கள். அப்போது அன்னை மரியா தெரசாவிற்குக் காட்சிகொடுத்து, அவரைப் பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றார். அடுத்த நாளிலே தெரசாவிடமிருந்த நோய் முற்றிலுமாக மறைந்தது. அதன்பிறகு அவர் நல்ல சுகத்தோடு வாழ்ந்து வந்தார்.
எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்தபோது தெரசாவின் மூத்த சகோதரி பவுலின் கார்மேல் கன்னியர் மடத்தில் துறவியாகச் சேர்ந்தார். இது தெரசாவிற்கு பேரிடியாக அமைந்தது. அவருடைய சகோதரியைப் போன்று, அவரும் கார்மேல் சபையில் துறவியாகச் சேர விரும்பினார். அப்போது அவருக்கு 9 வயது நடந்துகொண்டிருந்தது. அவருடைய வயதைக் காரணம் காட்டி, அவரை சபையில் சேர்க்க மறுத்தனர். இருந்தாலும் தெரசாவிற்கு துறவியாக மாறவேண்டும் என்ற எண்ணம் மட்டும் மாறவில்லை. தெரசாவிற்கு 15 வயது நடந்துகொண்டிருந்தபோது, அவருடைய தந்தையோடு சேர்ந்து அவர் உரோமை நகருக்குச் சென்றார். அப்போது திருந்தந்தையாக இருந்தவர் பதிமூன்றாம் சிங்கராயர். அவரிடத்தில் சென்ற தெரசா கார்மேல் மடத்தில் துறவியாகச் சேரவேண்டும் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தார். அதைக் கேட்ட திருந்தந்தை, “உமக்குத் துறவற மடத்தில் சேருவதற்கான வயது இல்லை. இருந்தாலும் இறைவனுக்கு விருப்பமானால் நீ சேர்ந்துகொள்” என்று சொல்லி, தெரசாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தார். இதனால் தெரசா தன்னுடைய பதினைந்தாம் வயதில் அதாவது 1888 ஆம் ஆண்டு ஏப்ரல் 9 ஆம் நாள் கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்தார்.
கார்மேல் சபையில் துறவியாகச் சேர்ந்த பிறகு தெரசா தூய வாழ்க்கை வாழத்தொடங்கினார்; அதிகமான நேரத்தை ஜெபத்திலும் தவத்திலும் கழித்தார். எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அதனை ஆன்மாக்களின் ஈடேற்றத்திற்காக செய்து வந்தார். ‘சிறிய வழி’ ‘The Little Way’ என்பதன் வழியாக சிறு சிறு காரியத்தைச் செய்வதன் வழியாகவும் ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டார். மறை பரப்பு பணிகளைச் செய்யும் குருக்களுக்காக எப்போதும் ஜெபிக்கவேண்டும் என்று சொல்லி வந்தார். அவர்களுக்காக ஜெபித்து வந்தார். தெரசாவின் வாழ்வைப் பார்த்த தலைவி, அவரை அவருடைய 22 ஆம் வயதில் நவ கன்னியர்களுக்கு பொறுப்பாளராக ஏற்படுத்தினார். அது மட்டுமல்லாமல் அவருடைய வாழ்வையே ஒரு புத்தகமாக எழுதச் சொன்னார். அதன்பேரில் தெரசா தன்னுடைய வாழ்வையே ‘ஓர் ஆன்மாவின் கதை’ என்ற பெயரில் புத்தகமாக வடித்தார்.
தெரசா ஆன்மீகத்தில் அதிகமாக வளர்ந்தாலும் அவருடைய உடல் நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. எலும்புருக்கி நோயினால் அவர் அதிகமாகப் பாதிக்கப்பட்டார். இதனால் அவர் 1896 ஆம் ஆண்டு, செப்டம்பர் 30 ஆம் நாள், தன்னுடைய இன்னுயிரைத் துறந்தார். அவர் இறக்கும்போது அவருடைய சபை அருட்சகோதரிகள் யாவரும் அவரைச் சூழ்ந்து நின்று ஜெபித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அவர் ‘இயேசுவே உம்மை நான் அன்பு செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு தன்னுடைய உயிரைத் துறந்தார். தூய வாழ்க்கை வாழ்ந்த தெரசாவிற்கு 1925 ஆம் ஆண்டு பதினோறாம் பத்திநாதரால் புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. 1997 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுலால் ‘மறைபரப்பு நாடுகளின் பாதுகாவலி’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டது.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
சிறுமலர் என அன்போடு அழைக்கப்படும் தூய குழந்தை தெரசாவின் விழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம் என சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
துன்பத்தை பொறுமையோடு ஏற்றுக்கொள்ளல்
குழந்தை தெரசா தனக்கு வந்த துன்பங்கள் யாவற்றையும் சாபமாகப் பார்க்காமல் வரமாகப் பார்த்தார். அவர் தனக்கு வந்த எலுப்புருக்கி நோயினைக்கூட, கடவுள் தன்மீது கொண்டிருக்கும் அன்பின் வெளிப்பாடாகவே பார்த்தார்.
தன்னோடு இருந்த அருட்சகோதரிகளின் விமர்சனத்தையும் தெரசா பொறுமையாகத்தான் ஏற்றுக்கொண்டார். தெரசாவோடு இருந்த அருட்சகோதரி ஒருவர் அவரை எப்போது பார்த்தாலும் சினத்தோடுதான் பார்த்தார். தெரசா பதிலுக்கு அவரை சினத்தோடு பார்க்கவில்லை. மாறாக, அவரைப் பார்த்து புன்னைகைத்தார். இதனால் அந்த சகோதரி விரைவிலேயே தன்னுடைய குற்றத்தை உணர்ந்துகொண்டார். தெரசாவோடு நல்லுறவோடு வாழத் தொடங்கினார். இன்னொரு சமயம் வேறொரு சகோதரி தெரசாவின் மீது தெரிந்தே அழுக்குத் தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தார். அவரைப் பார்த்து தெரசா சினம்கொள்ளவில்லை. மாறாக இயேசு தனக்கு வந்த சிலுவையை எப்படி பொறுமையோடு ஏற்றுக்கொண்டாரோ அதைப் போன்று அந்த சகோதரி செய்யும் தவற்றைப் பொறுத்துக்கொண்டார். இதனால் அவரும் தன்னுடைய தவற்றை உணர்ந்து தெரசாவிடம் மன்னிப்புக் கேட்டார். இபப்டியாக தெரசா தனக்கு வந்த துன்பம், சவால் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு அதன்வழியாக ஆன்மாக்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்து வந்தார்.
அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், நம்முடைய வாழ்வில் வரும் துன்பங்களைப் பொறுமையோடு ஏற்றுக்கொள்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும். துன்பமின்றி இன்பமில்லை. சோதனைகள் இன்றி சாதனைகள் இல்லை என்பது அறிஞர் பெருமக்கள் கூறும் செய்தி. நாம் நமக்கு வரும் துன்பங்களை தூய குழந்தைத் தெரசாவை போன்று மிகப் பொறுமையோடு ஏற்றுக்கொள்ளும்போது இறையாசிர் பெறுவோம் என்பது உறுதி.
குழந்தை உள்ளம்
குழந்தைத் தெரசாவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பாடம் அவரிடத்தில் இருந்த குழந்தை உள்ளம்தான். அவர் குழந்தைகளிடம் இருந்த தூய உள்ளத்தை, கள்ளம் கபறற்ற மனதை, அதிலிருந்து வெளிப்படுகின்ற தியாக உள்ளத்தை தன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வந்தார். அவருடைய விழாவைக் கொண்டாடும் நாம், அவரிடத்தில் விளங்கிய கள்ளம் கபறற்ற தன்மையைக் கொண்டு வாழ்கிறோமா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
Source: New feed