கொரோனா கொள்ளைநோய் போன்ற அசாதாரண சூழல்களில், வறியோருக்கு ஆற்றும் பணிகளுக்கு, புதியதொரு, வித்தியாசமான பார்வை தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.
உரோம் நகரில் வறியோருக்கு உதவி வருகின்ற, புனித பேதுரு வட்டம் எனப்படும், தன்னார்வலர் அமைப்பின் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளுக்கு, செப்டம்பர் 25, இவ்வெள்ளி காலையில், வத்திக்கானின் கிளமெந்தினா அறையில், உரையாற்றிய திருத்தந்தை, “இறைவேண்டல், செயல், தியாகம்” ஆகிய இலக்குகளுடன் பணியாற்றும், இந்த அமைப்பினருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
கோவிட்-19 சூழல், தெளிவான முறையில் பிறரன்புப் பணிகளை ஆற்றும் முறை குறித்து சிந்திக்க வைத்துள்ளது என்றும், இத்தகைய மாறுபட்ட சூழல்களில், சமுதாயத்தின் காயங்களைப் பார்க்கவும், அச்சூழல்களில், படைப்பாற்றல் திறத்துடன் பிறரன்புப் பணிகளை ஆற்றும் முறைபற்றி அறியவும், இதயம் தேவை என்றும், திருத்தந்தை கூறினார்.
உரோம் நகரில், பொருள் வறுமை, மனித வறுமை, சமுதாய வறுமை என்று, வறுமையின் புதிய வடிவங்கள் வேகமாகப் பரவிவருகின்றன என்றும், இந்த மனிதக் காயங்களை, இதயத்தின் கண்களைக்கொண்டு பார்க்கவேண்டியது முக்கியம் என்றும், திருத்தந்தை குறிப்பிட்டார்.
இவ்வாறு உதவி தேவைப்படுகிறவர் அந்நியர் அல்ல, மாறாக இவர்கள், அன்புக்காகப் பிச்சை எடுக்கும் நம் உடன்பிறப்புகள் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவரை நம் இதயத்தால் நோக்கினால் மட்டுமே, அவரின் தேவைகளை நிறைவேற்ற இயலும் என்றும், இந்நிலை, துன்புறுவோருக்கு, இதயத்தை வழங்கும், இரக்கத்தின் அனுபவம் என்றும் எடுத்துரைத்தார்.
நமது உலகத்தில் இரக்கத்திற்கு இடம் இல்லாததுபோல் தெரிகின்றது என்று, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளார், நாம் அனைவரும் இந்தக் கூற்றை மாற்றுவதற்கு அழைக்கப்பட்டுள்ளோம், கடவுளின் இரக்கத்தால் தொடப்பட நம்மை அனுமதித்தால், இது இயலக்கூடியதே, இதனை அனுபவிக்க, ஒப்புரவு அருளடையாளம், நல்ல ஓர் இடம் என்று திருத்தந்தை கூறினார்.
இந்த அமைப்பினர் தங்களது பணிகளுக்கு தூய ஆவியாரைத் துணைக்கு அழைத்துக்கொள்ளுமாறும், தனக்காகச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உரோம் நகரின் ஏழைகளுக்கு இவர்கள் ஆற்றிவரும் பணிகளை ஊக்கப்படுத்தினார்.
Source: New feed