நீர் கடவுளின் மெசியா. மானிட மகன் பலவாறு துன்பப்பட வேண்டும்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 18-22
அக்காலத்தில்
இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம் “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்று அவர் கேட்டார்.
அவர்கள் மறு மொழியாக, “சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்” என்றார்கள்.
“ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, “நீர் கடவுளின் மெசியா” என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
மேலும் இயேசு, “மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும்” என்று சொன்னார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————–
லூக்கா 9: 18-22
“கடவுளின் மெசியாவாம் இயேசு”
நிகழ்வு
நகரில் இருந்த பிரபல மருத்துவர் அவர். ஒருநாள் அவரிடம் வந்த இளைஞன் ஒருவன், “எனக்கொரு பெரிய பிரச்சனை ஏற்பட்டிருக்கின்றது. நீங்கள்தான் அந்தப் பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும்” என்று பதற்றத்தோடு சொன்னான். அதற்கு மருத்துவர் அவனிடம், “தம்பி! உனக்கு என்ன பிரச்சனை என்று சொல். நான் தீர்த்து வைக்கின்றேன். அதற்கு முன்னதாக நீ பதற்றமடையாமல் அமைதியாக இரு” என்றார்.
மருத்துவர் சொன்னற்தேற்ப அந்த இளைஞன் பதற்றத்தைக் குறைத்துக்கொண்டு, அமைதியானான். பின்னர் அவன் மருத்துவரிடம், “ஐயா! நான் இறந்துவிட்டேன்” என்றான். அந்த இளைஞன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர், “என்ன! நீ இறந்துவிட்டாயா….?” அப்படியானால் இப்பொழுது நான் யாருடன் பேசிக்கொண்டிருக்கின்றேன்…?” என்றார். “நீங்கள் என்னுடைய ஆவியோடு பேசிக்கொண்டிருக்கின்றீர்கள்” என்று மிகவும் சாதாரணமாகச் சொன்னான் அந்த இளைஞன்.
இதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சியடைந்த மருத்துவர், ‘இவனிடம் எல்லாரிடமும் பேசிவதுபோல் பேசிக்கொண்டிருந்தால் பலனிருக்காது; இவனிடம் அறிவியல்பூர்வமாகப் பேசினால்தான் பலனிருக்கும்’ என்று நினைத்துக்கொண்டு, இவர் அவனிடம், “தம்பி! ஆவியினுடைய உடலில் இரத்தம் ஓடாது என்பது உனக்குத் தெரியுமா…?” என்றார். “ஆமாம், ஆவியினுடைய உடலில் இரத்தம் ஓடாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்; சிறுவயதில் கேள்விப் பட்டிருக்கின்றேன்” என்றான் இளைஞன்.
அந்த இளைஞன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு ஓரளவு ஆசுவாசுமடைந்த மருத்துவர், ‘இவன் இறந்துவிடவில்லை; உயிரோடுதான் இருக்கின்றான் என்பதை நிரூபிக்க, இது ஒரு வாய்ப்பு’ என்று நினைத்துக்கொண்டு, ஒரு குண்டூசியை எடுத்து, அவனுடைய விரலில் குத்தினார். உடனே இரத்தம் வெளியே வந்தது. அதை அந்த இளைஞனிடம் சுட்டிக்காட்டிய மருத்துவர் அவனிடம், “தம்பி! இதோ பார்! உன்னுடைய கையிலிருந்து இரத்தம் வழிகின்றது. இது ஒன்றே போதும், நீ உயிரோடு இருக்கின்றாய் என்பதற்கு. ஏனெனில், ஆவியினுடைய உடலிலிருந்து இரத்தம் வருவதில்லை” என்றார். இதற்கு அந்த இளைஞன், “ஐயா! நீங்கள் பெரிய மருத்துவர் என்று உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இப்பொழுதுதான் அதைக் கண்கூடாகப் பார்க்கின்றேன். ஆவியினுடைய உடலிலிருந்து இரத்தம் வரவழைத்ததால், உண்மையில் நீங்கள் பெரிய மருத்துவர்தான்” என்றார். இதைக் கேட்டதுதான் தாமதம், மருத்துவர் மயக்கம் போட்டு விழுந்துவிட்டார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற இளைஞனைப் போன்றுதான் இன்றைக்குப் பலர் தாங்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்பன பற்றித் தெரியாமலேயே இருக்கின்றார்கள். ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, இயேசு தான் யார் என்பதையும், எப்படிப்பட்டவர் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்தார். இன்றைய நற்செய்தியில், தன்னை முழுமையாக அறிந்த இயேசு, தன்னைக் குறித்து மக்களும் தன் சீடர்களும் என்ன அறிந்து வைத்திருக்கின்றார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றார். அதற்கு அவர் தன் சீடர்களிடம் இரண்டு முக்கியமான கேள்விகளைக் கேட்கின்றார். அவை என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
“நான் யார் என மக்கள் சொல்கின்றார்கள்?”
இன்றைய நற்செய்தியை நாம் நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இதற்கு முந்தைய பகுதிகளில் என்னென்ன நடந்தது என்பதைக் குறித்துத் தெரிந்துகொள்வது நல்லது. இதற்கு முந்தைய பகுதிகளில் இயேசு பன்னிருவரைப் பணித்தளங்களுக்கு அனுப்பி வைத்திருப்பார். அவர்களும் இறையாட்சியைப் பற்றிய நற்செய்தியை அறிவித்து, நோய் நொடிகளை நலமாக்கிவிட்டுப் வந்திருப்பார்கள். இதையெல்லாம் அறிய வரும் குறுநில மன்னன் ஏரோது மனம் குழம்புவான். ஏனெனில் இயேசுவைக் குறித்துப் மக்கள் பலவாறு பேசுவார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் இயேசு தம் சீடர்களிடம், “நான் யார் என மக்கள் சொல்கிறார்கள்?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றார். அதற்கு அவர்கள், திருமுழுக்கு யோவான் எனவும், எலியா, முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றார்கள் என்கின்றார்கள். மக்கள் இயேசுவைப் பற்றி இவ்வாறு சொல்வதற்குக் காரணம் இணைச்சட்ட நூல் 18: 18 இல் இடம்பெறும் வார்த்தைகள்தான்.
“நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?”
“நான் யார் என மக்கள் சொல்கின்றார்கள்?” என்று தம் சீடர்களிடம் கேட்ட இயேசு மீண்டுமாக அவர்களிடம், “நீங்கள் நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்கிறார். இதற்குப் பேதுரு, “நீர் கடவுளின் மெசியா” என்கின்றார். உடனே இயேசு அவர்களிடம், “இதை யாரிடமும் சொல்லவேண்டாம்” என்று சொல்லிவிட்டுத் தம் பாடுகளை முதன்முறையாக முன்னறிவிக்கின்றார். ஆம், சீடர்கள் இயேசுவை ஓர் அரசியல் மெசியாவாகப் பார்த்தார்களே ஒழிய, துன்புறும் ஊழியனாக, மானிட மீட்புக்காகத் தன்னையே தருபவராகப் பார்க்கவில்லை. அதனால்தான் இயேசு அவர்களிடம் இதை யாரிடமும் சொல்லவேண்டாம் என்று சொல்கின்றார்.
சீடர்கள் இயேசுவைச் சரியாகப் புரிந்து வைத்திருக்கவில்லை. நாம் இயேசுவைச் சரியாகப் புரிந்துவைத்து அவரது வழியில் நடக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இயேசுவே ஆண்டவர் என வாயார அறிக்கையிட்டு, இறந்த அவரைக் கடவுள் உயிர்த்தெழச் செய்தார் என நீங்கள் உள்ளூர நம்பினால் மீட்புப் பெறுவீர்கள்’ (உரோ 10:9) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் இயேசுவே ஆண்டவர், மெசியா என்ற நம்பி, அவர் வழியில் நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed