பொதுக்காலம் இருபத்து ஐந்தாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 8: 19-21
பெயருக்கு இருப்பவர்கள் அல்லர்; பெயர் சொல்லும்படி இருப்பவர்களே இயேசுவின் உண்மையான உறவினர்கள்
நிகழ்வு
ஒரு நகரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவருக்கு உடைமைகள், சொத்துக்கள் என ஏராளம் இருந்தன. எல்லாம் இருந்தும் இவருக்கு குழந்தை இல்லாததால், அந்தக் கவலையே இவரை மிகவும் வாட்டியது. இதற்கு நடுவில் இவருடைய மனைவி இவரை விட்டுப் பிரிந்ததால், இவர் தனி மரமானார். இவரிடம் பணம் இருந்த ஒரு காரணத்தால் பலரும் இவரிடம் நண்பர்களாக வந்து சேர்ந்தார்கள். அவர்களிடமெல்லாம் இவர் மிகவும் கவனமாக இருந்தார்.
ஒருநாள் இவர் தன் உதவியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும்பொழுது, “நான் இறப்பதற்குள் என்னிடம் பணத்திற்காகப் பழகாமல், உண்மையாகப் பழகுகின்ற நண்பர்கள் யார் யார் எனக் கண்டுபிடித்து, அவர்களிடம் என்னுடைய உடைமைகளை ஒப்படைக்க வேண்டும்” என்றார்.
இப்படி இவர் தன் உதவியாளரிடம் பேசிய ஒருசில நாள்களிலேயே இவர் நோய்வாய்ப்பட்டுப் படுக்கையில் விழுந்தார். மருத்துவர்கள் இவரைச் சோதித்துப் பார்த்தபொழுது, இவர் இன்னும் இருபத்து மணி நேரங்கள் வாழ்வதே பெரிது என்று சொல்லிவிட்டுப் போனார்கள். இதனால் இவர் தன் உதவியாளரை அழைத்து, “மருத்துவர்கள் இன்னும் இருபத்து நான்கு மணி நேரங்களுக்குள் நான் இறந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுப் போயிருப்பதால், எப்படியும் நான் இந்த இருபத்து நான்கு மணிநேரங்களுள் இறந்துவிடுவேன். அதனால் நான் இறந்த பிறகு என்னுடைய இறப்புச் செய்தியை என் நண்பர்களுக்கு உடனடியாகத் தெரிவித்துவிடு. கூடவே என்னுடைய அடங்கச் சடங்கு காலை நான்கு மணிக்கு நடக்கும் என்பதையும் தெரிவித்துவிடு. யாரெல்லாம் அந்த அடக்கச் சடங்கில் கலந்துகொள்கின்றார்களோ, அவர்களுக்கு இந்த உயிலில் உள்ளபடி என் உடைமைகளை நீ பிரித்துக் கொடுத்துவிடு” என்றார்.
இதற்குப் பின்னர் இவர் தான் ஏற்கெனவே எழுதி வைத்திருந்த உயிலை உதவியாளரிடம் ஒப்படைத்துவிட்டு, தன் ஆவியை ஆண்டவரிடம் ஒப்படைத்தார். இவர் இறந்ததும், இவரது இறப்புச் செய்தி, இவருடைய நண்பர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. கூடவே, இவரது அடக்கச் சடங்கு அதிகாலை நான்கு மணிக்குக் நடைபெறும் என்ற செய்தியும் சொல்லப்பட்டது.
செல்வந்தர் இறந்த செய்தியைக் கேட்டு பலரும் வருந்தினார்கள்; அடக்கச் சடங்கு அதிகாலை மணிக்கு என்றதும், ‘அதிகாலை நான்கு மணிக்கு நடைபெறும் அடக்கச் சடங்கில் எப்படிக் கலந்துகொள்வது…?’ என்று நினைத்துப் பலரும் தங்கள் வீட்டில் இருந்துவிட்டனர். ஒரு பெண்மணி உட்பட செல்வந்தரின் நான்கு நண்பர்கள் மட்டும் அடக்கச் சடங்கில் கலந்துகொண்டனர். அடங்கச் சடங்கு முடிந்ததும், செல்வந்தரின் உதவியாளர், தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட உயிலை அவர்களுக்கு வாசித்துக் காட்டி, செல்வந்தரின் உடைமைகளை அந்த நான்கு பேரிடம் ஒப்படைத்தார். செல்வந்தரின் அடக்கச் சடங்கில் கலந்து கொண்ட அந்த பேருக்கும் அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
ஆம், செல்வந்தருக்குப் நண்பர்கள் பலர் இருந்தார்கள்; ஆனால், பெயர் சொல்லும் அளவுக்கு இந்த நான்கு நண்பர்கள்தான் இருந்தார்கள். கிறிஸ்தவர்கள் என்று பெயரளவில் பலர் இருக்கலாம்; ஆனால் பெயர் சொல்லும் அளவுக்கு எத்தனைக் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள் என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இன்றைய நற்செய்தி வாசகம் உண்மையான கிறிஸ்தவர் யார்? அல்லது இயேசுவின் உண்மையான உறவினர் யார்? என்ற கேள்விக்கு விடையாக இருக்கின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவைப் பார்க்க அவருடைய தாய் மற்றும் சகோதர்கள் வருதல்
இறையாட்சிப் பணியைச் செய்யத் தொடங்கி, பல்வேறு பணிகளை மக்கள் நடுவில் செய்துவந்தார் இயேசு. இதனால் அவருடைய போதனையைக் கேட்க மக்கள் மிகுதியாக வந்தார்கள்; அதேநேரத்தில் அவர் பல்வேறு விதமான விமர்சனங்களையும் சந்தித்தார். இயேசு உண்பதற்குக் கூட நேரம்மில்லாமல் பணிசெய்வதைப் பார்த்துவிட்டு, மக்கள் அவரை ‘மதி மயங்கிவிட்டார்’ (மாற் 3:21) என்று பேசிக்கொண்டார்கள். இதைக் கேள்விப்பட்டதும்தான் அவருடைய தாயும் சகோதரர்களும் அவரைப் பார்க்க வருகின்றார்கள்.
இறைவார்த்தையின்படி செயல்படுகிறவர்களே தாயும் சகோதரர்களும் ஆவார்கள்
இயேசுவை அவருடைய தாயும் சகோதர்களும் பார்க்க வந்த சமயத்தை அவர் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திகொண்டு, யார் தன்னுடைய உண்மையான உறவினர் என்பதற்குப் பதில் தருகின்றார். இயேசுவைப் பலரும் பின்தொடர்ந்தார்கள்; அவர்களெல்லாம் தன்னுடைய உண்மையான உறவினர் இல்லை; இறைவார்த்தையைக் கேட்டு, நடப்பவரே தன் உண்மையான உறவினர் என்கின்றார் இயேசு.
ஆகையால், நாம் பாரம்பரியக் கிறிஸ்தவர்கள் என்று மார்தட்டுவதில் எந்தவிதப் பயனுமில்லை; இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடக்கவேண்டும்; அப்பொழுது தான் உண்மையான கிறிஸ்தவர்கள் என்றும், இயேசுவின் உண்மையான சீடர்கள் என்றும் சொல்ல முடியும். நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து, இயேசுவின் உண்மையான உறவினர்களாக இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனை
‘இன்று நீங்கள் அவரது குரலுக்குச் செவிகொடுத்தால் எத்துணை நலம்’ (திபா 95: 7) என்பார் திருப்பாடல் ஆசிரியர். ஆகையால், நாம் இயேசுவின் குரலுக்குச் செவிகொடுத்து, அதன்படி நடப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed