மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 1: 1-16, 18-23
தாவீதின் மகனும் ஆபிரகாமின் மகனுமான இயேசு கிறிஸ்துவின் மூதாதையர் பட்டியல்: ஆபிரகாமின் மகன் ஈசாக்கு; ஈசாக்கின் மகன் யாக்கோபு; யாக்கோபின் புதல்வர்கள் யூதாவும் அவர் சகோதரர்களும். யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த புதல்வர்கள் பெரேட்சும் செராகும்; பெரேட்சின் மகன் எட்சரோன்; எட்சரோனின் மகன் இராம். இராமின் மகன் அம்மினதாபு; அம்மினதாபின் மகன் நகசோன்; நகசோனின் மகன் சல்மோன். சல்மோனுக்கும் இராகாபுக்கும் பிறந்த மகன் போவாசு; போவாசுக்கும் ரூத்துக்கும் பிறந்த மகன் ஓபேது; ஓபேதின் மகன் ஈசாய். ஈசாயின் மகன் தாவீது அரசர்.
தாவீதுக்கு உரியாவின் மனைவியிடம் பிறந்த மகன் சாலமோன். சாலமோனின் மகன் ரெகபயாம்; ரெகபயாமின் மகன் அபியாம்; அபியாமின் மகன் ஆசா. ஆசாவின் மகன் யோசபாத்து; யோசபாத்தின் மகன் யோராம்; யோராமின் மகன் உசியா. உசியாவின் மகன் யோத்தாம்; யோத்தாமின் மகன் ஆகாசு; ஆகாசின் மகன் எசேக்கியா. எசேக்கியாவின் மகன் மனாசே; மனாசேயின் மகன் ஆமோன்; ஆமோனின் மகன் யோசியா. யோசியாவின் புதல்வர்கள் எக்கோனியாவும் அவர் சகோதரர்களும். இவர்கள் காலத்தில்தான் யூதர்கள் பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்கள்.
பாபிலோனுக்குச் சிறைப்பிடித்துச் செல்லப்பட்ட பின்பு எக்கோனியாவுக்குப் பிறந்த மகன் செயல்தியேல்; செயல்தியேலின் மகன் செருபாபேல். செருபாபேலின் மகன் அபியூது; அபியூதின் மகன் எலியாக்கிம்; எலியாக்கிமின் மகன் அசோர். அசோரின் மகன் சாதோக்கு; சாதோக்கின் மகன் ஆக்கிம்; ஆக்கிமின் மகன் எலியூது. எலியூதின் மகன் எலயாசர்; எலயாசரின் மகன் மாத்தான்; மாத்தானின் மகன் யாக்கோபு. யாக்கோபின் மகன் மரியாவின் கணவர் யோசேப்பு. மரியாவிடம் பிறந்தவரே கிறிஸ்து என்னும் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப் பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்.
அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும்போது ஆண்டவரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, “யோசேப்பே, தாவீதின் மகனே, உம் மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்” என்றார்.
“இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்” என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் ‘கடவுள் நம்முடன் இருக்கிறார்’ என்பது பொருள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா
மறையுரைச் சிந்தனை (செப்டம்பர் 08)
இன்று திருச்சபையானது நமது அன்னையும், பாதுகாவலியுமான தூய மரியாளுடைய பிறப்பு விழாவைக் கொண்டாடுகிறது. “இறைவனின் தாய்”, திருச்சபையின் தாய்”, “மீட்பரின் தாய்” என்று பல்வேறு சிறப்புப் பெயர்களோடு அழைக்கப்படக்கூடிய நமது அன்னையின் பிறந்த நாள் விழாவை நாம் கொண்டாடுவது என்பது, நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
தூய அகுஸ்தினார் இவ்விழாவைப் பற்றிக் கூறும்போது பின்வருமாறு எழுதுவார். “நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெருவிழா வந்துவிட்டது. ஆம், மரியாளின் பிறப்புவிழாதான் நாம் ஆவலுடன் எதிர்பார்த்த அந்தப் பெருவிழா. மரியாள் மண்ணில் தோன்றிய விண்மலர். அவருடைய வருகையால்தான் முதல் பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தூசிபடிந்த மனித இயல்பு மாற்றம் பெற்று, மேன்மை அடைந்தது”. ஆம், மரியாள் மீட்பரை உலகிற்கு கொண்டு வந்த நற்கருணைப் பேழையாக இருந்ததனால்தான் நாம் நமது பாவங்களிலிருந்து கழுவப்பட்டு தூயவர்களாக இருக்கிறோம்; புதுவாழ்வை அடைந்தவர்களாக இருக்கிறோம்.
மரியாளின் பிறப்பு விழா நமக்கு என்ன செய்தியைத் தருகிறது என்று சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னால், இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியை சற்று அறிந்துகொள்வோம்.
மரியாளின் பெற்றோர்களான சுவக்கீனும், அன்னாளும் பல ஆண்டுகளாகக் குழந்தைப் பேறு இல்லாது முதுமை அடைந்திருந்தனர். இந்த வேளையில் வானதூதர் அவர்களுக்குத் தோன்றி, குழந்தை ஒன்று அருளப்படும் என்று சொன்னார். அதுபோல பத்தாம் மாதத்தில் மரியாள் அவர்களுக்குக் குழந்தையாகப் பிறந்தார். கடவுள் தங்களுக்கு முதிர்ந்த வயதில் குழந்தைப்பேறு தந்து ஆசிர்வதித்தால், அவருடைய பெற்றோர்கள் அவரை மூன்று வயதில் கோவிலில் காணிக்கையாக ஒப்புக் கொடுத்தனர் என்று திருச்சபை மரபு சொல்கிறது.
மரியாளின் பிறப்பு விழா ஏன் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதற்கான ஒரு மரபுக் கதை உண்டு. முன்பொரு காலத்தில் வாழ்ந்த ஒரு துறவி, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி இனிமையான ஓர் இசையைக் கேட்டு, மகிழ்ந்து ஆச்சர்யப்பட்டார். ஆனால் அந்த இசை அவருக்கு எங்கிருந்து வருகிறது என்பதுதான் தெரியாமல் இருந்தது. எனவே பல ஆண்டுகள் கடவுளிடம் அதை வெளிப்படுத்தும்படி வேண்டினார். இறுதியாக கடவுளும் ஒரு நாள், அதே செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி அவருக்கு அந்த உண்மையை வெளிப்படுத்தப்போவதாக கூறினார். அந்தத் துறவியும் அதற்குச் சரி என்று ஒத்துக்கொண்டார்.
குறிக்கப்பட்ட அந்தநாள் வந்தது. அப்போது கடவுள், விண்ணகத்தில் வானதூதர்கள் அன்னை மரியாளுக்குப் பிறந்தநாள் விழா எடுத்துக் கொண்டாடுவதையும், அதிலே அந்த குறிப்பிட்ட இசை வாசிக்கப்படுவதையும் காட்டினார். இதைப் பார்த்து வியந்துபோன அந்தத் துறவி, அந்த இனிமையான இசை அன்னையின் பிறப்பு விழாவின்போது வானதூதர்கள் எழுப்பக்கூடியது என்பதை உணர்ந்து கொண்டார். பின்னர் நாமும் நமது அன்னைக்கு இந்த உலகத்தில் விழா எடுக்க வேண்டும் என்று திருத்தந்தையிடம் சென்று சொன்னார். அப்பொழுது திருத்தந்தையாக இருந்த 14ம் ஆசீர்வாதப்பர் உலகத் திருச்சபை அன்னையின் பிறப்பு விழாவினைச் செப்டெம்பர் 8 ஆம் தேதி கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி அன்னையின் திருவிழா ஓவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் எட்டாம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இன்று இவ்விழாவிலே நாம் படிக்கக்கேட்ட முதல் வாசகத்தில் ஆண்டவர் கூறுகிறார், “பெத்லகேமே! யூதாவின் ஆட்சி மையங்களில் நீ சிறியதாக இருக்கின்றாய். ஆயினும் என் சார்பாக உன்னை ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்” என்று. நாம் பிறப்பால், சூழ்நிலையால் சிறியவர்களாக, கடையவர்களாக இருந்தாலும், கடவுளின் திட்டத்தின்படி நடக்கின்றபோது கடவுள் நம்மை மேலும், மேலும் ஆசிர்வதிப்பார் என்பதே உண்மை. அதற்கு அன்னை மரியாளின் வாழ்க்கையே மிகப்பெரிய சான்றாக இருக்கிறது.
அன்னை மரியாள் இறைவனின் திட்டத்தின்படி நடந்ததால் அவரைக் கடவுள் இறைவனின் தாயாகின்ற அளவுக்கு உயர்த்துகிறார். லூக் 1:53 ல் வாசிக்கின்றோம், தாழ்நிலையில் இருப்போரை கடவுள் உயர்த்துகின்றார்” என்று. நாம் தாழ்நிலையில் இருந்தபோதும் இறைவனின் விருப்பத்தின்படி நடக்கும்போது இறைவன் நம்மை உயர்த்துவார் என்பதை உணர்ந்து வாழ்வோம்.
அடுத்ததாக அன்னையின் பிறப்புவிழாவை இன்று கொண்டாடும் என்று சொன்னால் நாம் நமது அன்னையை, தாய், தந்தையை பாதுகாத்து, பராமரிப்பது நமது கடமை என்பதை உணர்ந்து செயல்பட அழைக்கப்படுகிறோம். இயேசு, தான் சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்தபோதுகூட, தன் அன்னை – நம் அன்னை – ஒருபோதும் கைவிடப்பட்டவராக ஆகிவிடக்கூடாது என்பதற்காக அவரை தனது அன்புச் சீடரிடம் ஒப்படைத்து, பராமரிக்கச் சொல்கிறார். இதுதான் இயேசு அன்னை மரியாள்மீது கொண்ட உயர்ந்த அன்பாக இருக்கிறது. நாமும் நமது அன்னையை, தாய்தந்தையை சிறப்பாகப் பராமரிக்கவேண்டும் என்பதே இயேசு நமக்குச் சொல்லக்கூடிய போதனையாக இருக்கிறது.
பழைய பாடல் ஒன்று “தாயின் மடிதான் உலகம். அவள் தாழைப் பணிந்திடுவோம்” என்று. ஆம், அன்னைக்கு பணிந்து நாம் சேவை செய்கிறபோது அது ஆண்டவனுக்கே செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஒரு காலத்தில் பயாசித் என்ற இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்வதற்காக வீட்டில் இருக்கக்கூடிய தன்னுடைய தாயை விட்டுவிட்டு காடு, மலை என்று பல ஆண்டுகள் சுற்றித் திரிந்தான். ஆனால் அவனால் ஆன்மீக உண்மைகளை அறிந்துகொள்ள முடியவில்லை. இறுதியில் சோர்ந்துபோய் வீடு திரும்பினான்.
அப்போது அவனுடைய தாய் வீட்டில், “கடவுளே! என்னுடைய மகனை பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அவன் எங்கிருந்தாலும் நல்லா இருக்கவேண்டும்” என்று வேண்டிக்கொண்டிருந்தார். இதைக் கேட்ட மகன், தன் தாயின் அன்பை நினைத்து கண்ணீர் விட்டு அழுதான். அதன் பின்னர் தாயின் காலடியில் இருந்து அவருக்கு சேவை செய்துவந்தான்.
ஒருநாள் இரவு திடீரென்று தூக்கத்திலிருந்து விழித்தெழுந்த அவனுடைய தாய் தண்ணீர் தண்ணீர் என்று கதறினாள். அந்த நேரத்தில் வீட்டில் தண்ணீர் ஏதும் இல்லாததால் எங்கெல்லாமோ அலைந்து திரிந்து தண்ணீர் கொண்டு வந்தான். அந்தத் தண்ணீரைக் குடித்த அந்தத் தாய் அவனை நிறைவாய் ஆசிர்வதித்தார். அப்போது அவன் இத்தனை ஆண்டுகள் தேடிப்பெறாத ஆன்மீக உண்மைகளை அறிந்துகொண்டான். பிற்காலத்தில் அவன் மிகப்பெரிய ஞானியானான்.
தாயே நமது வாழ்வில் எல்லா நலனுக்கும், ஆசிருக்கும் ஊற்று என்பதை இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
எனவே அன்னையின் பிறப்பு விழாவைக் கொண்டாடும் இவ்வேளையில் அன்னையின் வழி நடப்போம். அவரைப் போன்று இறைத்திருவுளம் நிறைவேற்றுவோம். அத்தோடு நம் தாய், தந்தையரைப் பேணி வளர்ப்போம். இறையருள் பெறுவோம்.
Source: New feed