பொதுக்காலம் இருபத்து மூன்றாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 6: 12-19
பன்னிருவரைத் தேர்தெடுத்த இயேசு
நிகழ்வு
மாமன்னர் ஒருவர் இருந்தார். இவருக்குக் குழந்தை கிடையாது. அதனால் இவர் தனக்குப் பிறகு நாட்டை ஆளுகின்ற பொறுப்பை யாரிடத்தில் கொடுப்பது என்று மிகத் தீவிரமாக யோசித்தார். கடைசியாக இவருக்கு ஒரு யோசனை வந்தது. அதன்படியே செய்யலாம் என்று இவர் முடிவுசெய்தார்.
இதைத் தொடர்ந்து இவர் தன்னிடம் பணியாற்றிய நான்கு அமைச்சர்களை அழைத்தார். அவர்களிடத்தில் ஒரு பூட்டைக்க் கொடுத்து, இப்பூட்டானது கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருகின்றது. இதை யார் திறக்கின்றாரோ, அவரையே நான் எனக்குப் பின் இந்த நாட்டின் மன்னராக முடிசூட்டுவேன்” என்றார்.
மாமன்னர் இவ்வாறு சொன்னதும் அந்த நான்கு அமைச்சர்களில் ஒருவரைத் தவிர்த்து மற்ற மூன்று அமைச்சர்களும், ‘பூட்டு கணித முறையில் வடிவமைக்கப்பட்டது என்பதால், இதைத் திறப்பதற்கு ஓலைச் சுவடிகளில் ஏதாவது குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு, பூட்டைத் திறந்து பார்க்கலாம்’ என்று ஓலைச் சுவடிகளைப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினார்கள். அவர்கள் நீண்டநேரம், ஓலைச் சுவடிகளைப் புரட்டிப் பார்த்தபொழுதும், கணித முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் பூட்டைத் திறப்பதற்கான குறிப்புகள் எங்கும் குறிப்பிடப்படாததால், அவர்கள் சோர்ந்து போனார்கள்.
ஆனால், ஓலைச் சுவடிகளையோ, வேறு எந்தவொரு குறிப்பையோ பார்க்காமல், மிகவும் சாதாரண இருந்த நான்காவது அமைச்சர், பூட்டைக் கூர்ந்து கவனித்தபொழுதுதான் தெரிந்தது, அது பூட்டப்படவில்லை என்பது. உடனே அந்த நான்காவது அமைச்சர், பூட்டு பூட்டப்படாமல் திறந்தேதான் இருக்கின்றது என்பதை மாமன்னரிடம் சொன்னபொழுது, மாமன்னர் அவரை மன்னராக முடிசூட்டினார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற மாமன்னர் தனக்குப் பின் நாட்டை ஆள்வதற்கு யார் தகுதியானர் என்பதை ஒரு வித்தியாசமான போட்டியின் மூலம் தேர்ந்தெடுத்தார். ஆண்டவர் இயேசு, தனக்குப் பின் தனது பணியை – இறையாட்சிப் பணியைத் – தொடர்வதற்கு யாரெல்லாம் சரியானவர்கள் என்பதை இரவெல்லாம் இறைவனிடம் வேண்டிவிட்டுத் தேர்ந்தெடுக்கின்றார். இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுத்தது நமக்கு செய்தியை எடுத்துக்கூறுகின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இறைவேண்டலோடு எந்தவொரு செயலையும் தொடங்கும் இயேசு
நற்செய்தியில் இயேசு பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். அதற்கு முன்னதாக அவர் ஒரு மலைக்குச் சென்று இரவெல்லாம் கடவுளிடம் வேண்டுவதற்குச் செலவிட்டார் என்று வாசிக்கின்றோம். ஆம், இயேசு எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடுதான் தொடங்கினார். இறையாட்சிப் பணியைத் தொடங்கும்பொழுது அவர் நாற்பது நாள்கள் நோன்பிருந்து மன்றாடினார் (மத் 4: 1) ஒவ்வொரு நாளும் தன்னுடைய பணியைத் தொடங்குவதற்கு முன்பாகவும் இயேசு இறைவனிடம் வேண்டினார் (மாற் 1: 35). எல்லாவற்றிற்கும் மேலாக பாடுகளைப் படுவதற்கு முன்பாகவும் இயேசு இறைவனிடம் வேண்டினார் (லூக் 22: 41). இவ்வாறு எந்தவொரு செயலையும் தொடங்குவதற்கு முன்பாக இறைவனிடம் வேண்டிய இயேசு, பன்னிருவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவும் இறைவனிடம் வேண்டுகின்றார்.
இயேசு எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கியதுபோன்று, நாமும் எந்தவொரு செயலையும் இறைவேண்டலோடு தொடங்கினோம் எனில், அது நமது மிகப்பெரிய ஆசியாக இருக்கும் என்பது உறுதி
தனக்குப் பின் தன் பணியைத் தொடர்வதாகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்த இயேசு
எந்தவொரு இயக்கமாக இருந்தாலும் அல்லது நிறுவனமாக இருந்தாலும் அது தொடங்கிய கையோடு முடிந்துவிடாமல் தொடர்ந்து நடைபெற இயக்கத் தோழர்கள், தொண்டர்கள், பணியாளர் கட்டாயம் இருந்தாக வேண்டும். இயேசு தன்னுடைய பணி – இறையாட்சிப் பணி – தொடர்ந்து நடைபெறவேண்டும் என்பதற்காகப் பன்னிருவரைத் தேர்ந்தெடுக்கின்றார். இந்தப் பன்னிருவரும் இஸ்ரயேலில் இருந்த பன்னிரு குலங்களையும் அடையாளபடுத்துபவர்களாக இருந்தாலும் (மத் 19: 20) பன்னிருவரும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவர்களாக இருக்கின்றார்கள். இது இறையாட்சிப் பணிக்கு ஒரு குறிப்பிட்ட மக்கள் போதும் என்று இல்லாமல், எல்லாரும் தேவை என்ற செய்தியை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
இயேசு வெவ்வேறு குணங்களைக் கொண்ட பன்னிருவரைத் திருத்தூதர்களாகத் தேர்ந்தெடுத்து, அவர்கள்மூலம் இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுமாறு செய்தார். நாமும்கூட பலரையும் இயேசு கிறிஸ்துவில் ஒன்றிணைத்து, இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறுவதற்கு முயற்சி செய்யவேண்டும்.
சிந்தனை
‘நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்’ (மத் 28: 19) என்பார் இயேசு. ஆகையால், இயேசுவின் சீடர்களாக இருக்கும் நாம், மற்றவரையும் அவருடைய சீடராக்கி, இறையாட்சிப் பணி தொடர்ந்து நடைபெறச் செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed