பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 5: 33-39
“பரிசேயர்களின் பழைய சட்டமும், இயேசுவின் புதிய சட்டமும்”
நிகழ்வு
ஒரு நகரில் ஜான், பெர்னார்டு என்ற இரண்டு மனநல மருத்துவர்கள் இருந்தார்கள்; இரண்டு பேருமே நெருங்கிய நண்பர்கள். ஒருநாள் இருவரும் ஜானுக்குச் சொந்தமான மருத்துவமனையில் பேசிக்கொண்டிருக்கும்பொழுது ஜான், தன் நண்பன் பெர்னார்டைப் பார்த்து, “மனிதர்களில் பலர் செம்மறியாட்டுக் கூட்டம் போன்றவர்கள். ஒருவர் ஒரு செயலைச் செய்தால், அதை மற்றவர் எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்வார்” என்றார்.
“அப்படியா?!” என்று கேட்ட பெர்னார்டிடம், “ஆமாம், நீ வேண்டுமானால் பார்” என்று சொல்லிவிட்டு, “அடுத்த நோயாளர் என்னுடைய அறைக்குள் வருவதற்கு முன்பாக நீ என்னுடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை காலடியில் வைத்துவிட்டுப் போ, அதன்பிறகு என்ன நடக்கிறது என்று பார்” என்றார். பெர்னார்டும் தன் நண்பர் தன்னிடம் சொன்னதுபோன்று, அடுத்த நோயாளர், ஜானின் அறைக்குள் நுழைவதற்கு முன்பாக, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்துவிட்டுப் போனார்.
பெர்னார்டு அங்கிருந்து போன பிறகு உள்ளே வந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த மூவர், மருத்துவர் ஜானிடம் தங்களுடைய பிரச்சனை எடுத்துச் சொல்ல, அவர் அவர்களிடம் அவர்களுடைய பிரச்சனைகள் தீர்வதற்கான வழிகளைச் சொல்லி முடித்ததும், அவர்கள் அவரிடமிருந்து விடைபெறும்பொழுது, அவருடைய காலைத் தொட்டு வணங்கி, ஒரு நூறு உரூபாய் நோட்டை அவரது காலடியில் வைத்தார்கள். இதைப் பார்த்துவிட்டு மருத்துவர் ஜான் அவர்களிடம், “நீங்கள் ஏன் என் காலைத் தொட்டு வணங்கி, நூறு உரூபாயை வைத்தீர்கள்…?” என்று கேட்க, அவர்கள் அவரிடம், “எங்களுக்கு முன்பாக உங்களைப் பார்க்க வந்தவர் இப்படிச் செய்தார். அதைப் பார்த்துவிட்டுத்தான் நாங்கள் இப்படிச் செய்தோம்” என்றார்கள்.
பின்னர் அவர் அவர்களை வெளியே அனுப்பிவிட்டு, தன் நண்பர் பெர்னார்டுவை உள்ளே அழைத்தார். “நடந்த எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதானே இருந்தாய்…! இதிலிருந்தே நாம் தெரிந்துகொள்ளலாம். மனிதர்கள் எப்படிச் செம்மறியாட்டுக் கூட்டம் போன்று, ஒருவர் செய்த செயலை எந்தவொரு கேள்வியும் கேட்காமல், சாத்திர சம்பிரதாதம் என்று அப்படியே செய்கின்றார்கள் என்று” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், மனிதர்களாகிய நாம் எப்படி பழக்கவழக்கம், சாத்திர சம்பிரதாயம் என்ற பெயரில் நம் முன்னோர்கள் செய்ததை எந்தவொரு கேள்வியும் கேட்காமல் அப்படியே செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துவதாக இருகின்றது. நற்செய்தியில் நோன்பு பற்றிய கேள்வி எழுகின்றபொழுது, இயேசு, “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து, அதைப் பழைய ஆடையோடு ஒட்டுப் போடுவதில்லை” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இவ்வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
பரிசேயர்களின் பழைய சட்டம்
நற்செய்தியில் இயேசுவிடம் வருகின்ற பரிசேயரும் மறைநூல் அறிஞரும், “யோவானுடைய சீடர்களும், பரிசேயருடைய சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்து மன்றாடி வருகின்றனர். உம்முடைய சீடரோ உண்பதும் குடிப்பதுமாக இருக்கின்றனரே” என்கின்றார்கள். இக்கேள்விக்கு இயேசு தந்த பதிலைக் குறித்துச் சிந்தித்துப் பார்ப்பதற்கு முன்னர், இஸ்ரயேலில் எப்பொழுதெல்லாம் மக்கள் நோன்பிருந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆண்டுக்கொரு முறை பாவப் பரிகார நாளில் மக்கள் நோன்பிருக்க வேண்டும் என்பது மோசேயின் சட்டம் (லேவி 16: 29) ஒருசில முக்கியமான காரணங்களுக்காகவும் மக்கள் நோன்பிருந்தார்கள் (நீத 20: 26; 1அர 21: 27); ஆனால், பரிசேயர்களோ மக்களுக்கு முன்பாகத் தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக, வாரம் இருமுறை நோன்பிருந்தார்கள் (லூக் 18: 12); இதைப் பார்த்து யோவானின் சீடர்களும் அடிக்கடி நோன்பிருந்தார்கள். யோவானின் சீடர்கள் மெசியாவின் வருகைக்காக நோன்பிருந்தார்கள்; அவர்கள் மெசியா வந்துகூட தெரியாமல் நோன்பிருந்துதான் இதில் உள்ள நகைமுரண். இப்படித்தான் இருந்தது, பரிசேயர் செய்துவந்த நோன்பு. இதில் இறையன்புக்கோ, பிறரன்புக்கோ எந்தவோர் இடமுமில்லை.
இயேசுவின் புதிய சட்டம்
தாங்கள் நல்லவர்கள் என்பதைக் காட்டுவதற்காக நோன்பு மேற்கொள்ளப்பொழுது, இயேசு, “மணமகன் மணவிருந்தினரோடு இருக்கும்பொழுது, அவர்கள் நோன்பிருப்பதில்லை” என்றும், “எவரும் புதிய ஆடையிலிருந்து ஒரு துண்டைக் கிழித்து அதைப் பழைய ஆடையோடு ஓட்டுப் போட்டுவதில்லை” என்றும் சொல்லி, தான் அன்பு என்ற புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கின்றேன், அதைப் பழி, பாவம் என்பதை வலியுறுத்தும் பழைய சட்டத்தோடு ஒப்பிடவேண்டாம் என்று குறிப்பிடுகின்றார்.
ஆம், ஆண்டவர் இயேசு ‘சட்டம்’ என்ற பழையதைத் தூக்கி எறிந்துவிட்டு, அன்பு என்ற புதியதைக் கொண்டுவந்திருக்கின்றார். ஆகையால், நாம் சாத்திர சம்பிரதாயங்கள், மரபுகள் என்ற பழமையைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பு என்ற புதிய கட்டளையைக் கடைப்பிடித்து வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனை
‘அன்பே திருச்சட்டத்தின் நிறைவு’ (உரோ 13: 10) என்பார் புனித பவுல். ஆகையால், நாம் பழைமைவாதத்தைப் பற்றிக்கொண்டிருக்காமல், அன்பைப் பற்றிக்கொண்டு அதன்படி வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed