அனைத்தையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1-11
அக்காலத்தில்
இயேசு கெனசரேத்து ஏரிக் கரையில் நின்றுகொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக் கொண்டிருந்தனர். அப்போது ஏரிக் கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்தனர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்றார். சீமோன் மறுமொழியாக, “ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்” என்றார்.
அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.
இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால்களில் விழுந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்” என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள்.
இயேசு சீமோனை நோக்கி, “அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்று சொன்னார்.
அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்தபின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
லூக்கா 5: 1-11
“அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்”
நிகழ்வு
பதினொன்றாம் நூற்றாண்டில், காவிரிப்பூம்பட்டினத்தில் சோழ மன்னருக்கு இணையாக மிகப்பெரிய செல்வந்தராய் வாழ்ந்து வந்தவர் பட்டினத்தார். கடல் வணிகம் செய்து வந்ததால், பட்டினத்தாரிடம் அவ்வளவு செல்வம் இருந்தது. இதனால் மக்கள் இவரை இவருடைய இயற்பெயரான திருவெண்காடர் என்று அழைப்பதற்குப் பதில், பட்டினத்தார் என்றே அழைத்து வந்தனர்.
இவருக்கு ஒரு மகன் இருந்தான். ஒருநாள் அவனை இவர் கடல் வணிகத்திற்கு அனுப்பி வைத்தார். போனவன் நீண்ட நாள்களாகத் திரும்பி வரவில்லை. ‘தன் மகனுக்கு என்ன வாயிற்று?’ என்று இவர் நினைத்துக்கொண்டிருக்கும்பொழுது, ஒருநாள் அவன் திரும்பி வந்தான். ‘கடல் வணிகத்திற்குச் சென்றவன், நிறையச் சம்பாத்தித்து வந்திருப்பான்’ என்று இவர் எதிர்பார்த்தார். ஆனால், இவர் நினைத்ததற்கு மாறாக, எருவிராட்டியையும் தவிடையும் அவன் கொண்டு வந்திருந்தான்.
இதைக் கண்டு சினமுற்ற பட்டினத்தார் அவனை கடுமையாகத் திட்டித் தீர்த்தார். இதனால் அவன் மிகுந்த வருத்தத்தோடு தன் தாயிடம் சென்றான். பின்னர் அவன் ஓர் ஓலைத் துணுக்கில் ‘காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே!’ என்ற வார்த்தைகளை அவரிடம் கொடுத்துவிட்டு அப்படியே ஓடிப்போய்விட்டான். பட்டினத்தார் இவ்வார்த்தைகளைப் படித்துப் பார்த்தார். ‘காதற்ற ஊசி கடையில் விற்பனைக்கு வராது…! அப்படியானால், நாம் சேர்த்து வைத்திருக்கும் செல்வம் கடைசிவரைக்கும் வராதுதானே! என்ற உண்மையை உணர்ந்தவராய் ஞானம் பெற்றார்.
இதற்குப் பிறகு இவர் தன்னுடைய செல்வம், மனைவி எல்லாவற்றையும் துறந்து, ஒரு துறவியைப் போன்று வாழத் தொடங்கினார்.
மிகப்பெரிய செல்வந்தரான பட்டினத்தார் ஞானமடைந்ததும் எப்படி எல்லாவற்றையும் துறந்து துறவியானாரோ, அப்படி மிகுதியான மீன்பாட்டைக் கண்டதும், பேதுருவும் யாக்கோபும் யோவானும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றார்கள். லூக்கா நற்செய்தியில் இடம்பெறும் இந்த நிகழ்வு நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இரவு முழுவதும் பாடுபட்டும் மீன் ஒன்றும் கிடைக்காத நிலை!
நற்செய்தியில் இயேசு கெனசரேத்து ஏரிக்கு வருகின்றனர். அங்குத் திரளான மக்கள் அவருடைய போதனையைக் கேட்க, அவரை நெருக்கிக் கொண்டிருந்ததால், அவர் சீமோன் பேதுருவின் படகில் ஏறி அமர்ந்து, மக்களுக்குப் போதிக்கின்றார். பின்னர் அவர் பேதுருவிடம், “ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டு போய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்” என்கின்றார். அவரோ, “இரவு முழுவதும் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகின்றேன்” என்கின்றார்.
பேதுரும் அவருடன் இருந்தவர்களும் மீன்பிடிப்பதையே தங்களுடைய தொழிலாகக் கொண்டவர்கள் (யோவா 21: 2-3) அப்படிப்பட்டவர்களுக்கே மீன் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது, மனிதர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அதேநேரத்தில் பேதுரு இயேசுவின் வார்த்தைகளை நம்பி வலைவீசியதும், மிகுதியான மீன் கிடைப்பது, ஆண்டவரால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1: 37) என்ற உண்மையை நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
பலநேரங்களில் நாம் நம்முடைய ஆற்றலால் எதையும் செய்துவிடலாம் என்று நினைக்கின்றோம். உண்மையில் நமது ஆற்றலால் மட்டும் எதையும் செய்ய முடியாது. புனித பவுல் சொல்வது போன்று, நமக்கு வலுவூட்டுகின்றவரின் துணைகொண்டு மட்டுமே நம்மால் எதையும் செய்ய முடியும் (பிலி 4: 13)
ஆண்டவரின் வல்லமையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்தல்
இயேசு தன்னிடம் சொன்னதுபோன்று பேதுரு கடலில் வலையை வீச, மிகுதியான மீன்பாடு கிடைத்ததைப் பார்த்துவிட்டு, அவர் தன்னுடைய தகுதியற்ற நிலையை உணர்ந்து, “ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னைவிட்டுப் போய்விடும்” என்கின்றார். அப்பொழுதுதான் இயேசு பேதுருவிடம், ‘இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்” என்கின்றார்.
இயேசு பேதுவையும் யாக்கோபையும் யோவானையும் முன்னதாகவே தன்னுடைய பணிக்காக அழைத்திருந்தார் (மத் 4: 19). அவர்களோ தங்களுடைய அழைப்பின் மேன்மையை உணராமல், வழக்கம் போல் மீன்பிடித் தொழிலைச் செய்து வந்தனர். இந்நிலையில் மிகுதியான மீன்பாட்டைக் கண்டு, மலைத்துப் போய், அவர்கள் இயேசு சாதாரணமானவர் கிடையாது; ஆண்டவர் என உணர்ந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்கின்றார்கள்.
ஆம், நம்மை அழைப்பது சாதாரணமாணவர் கிடையாது. இறைமகன். ஆகையால், நாம் அவருடைய அழைப்பின் மேன்மையை உணர்ந்து, அவரைப் பின்தொடர்ந்து செல்வோம்
சிந்தனை
‘என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு, என்னைப் பின்பற்றட்டும்’ (மத் 16: 25) என்பார் இயேசு. எனவே, நாம் தன்னலத்தைத் துறந்து, சிலுவையைத் தூக்கிக்கொண்டு இயேசுவைப் பின்தொடர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed