ஆண்டவர் நம் வாழ்வில் ஆற்றும் மாபெரும் செயல்களை, ஒவ்வொரு நாளும், குறைந்தது, ஒருமுறையாவது நினைத்து, அவரை, போற்றிப் புகழ்வோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 15, இச்சனிக்கிழமையன்று கூறினார்.
அன்னை மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவாகிய இச்சனிக்கிழமை நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு மூவேளை செப உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது” (லூக்.1:47) என்ற அன்னை மரியாவின் புகழ் பாடலை மையப்படுத்தி தன் சிந்தனைகளை வழங்கினார்.
“மனிதரின் ஒரு சிறிய காலடி, மனித சமுதாயத்திற்கு மிகப்பிரமாண்டமான பாய்ச்சல்” என்று, மனிதர் முதன் முதலில் நிலவில் காலடி பதித்தபோது உதிர்த்த கூற்று புகழ்பெற்றதாக மாறியுள்ளது, அச்சமயத்தில் மனித சமுதாயம், ஒரு வரலாற்று இலக்கைத் தொட்டது என்பது உண்மைதான், எனினும், மரியாவின் விண்ணேற்பில், இன்று நாம் எல்லையற்ற மாபெரும் வெற்றியைச் சிறப்பிக்கின்றோம் என்று திருத்தந்தை கூறினார்.
நாசரேத்தின் மனத்தாழ்மையுள்ள மரியா, தன் ஆன்மாவோடு மட்டுமல்லாமல், தன் உடலோடும், முழுவதுமாக விண்ணகத்தில் தன் காலடியைப் பதித்த இந்நிகழ்வு, மனித சமுதாயத்திற்கு, முன்னோக்கிச் செல்லும் மிகப்பெரும் உந்துசக்தியாக உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, கடவுள் நம் உடல்களை ஒன்றுமில்லாமல் அழிவதற்கு அனுமதிக்கமாட்டார், ஏனெனில், கடவுளோடு இருக்கையில், எதுவுமே இழக்கப்படுவதில்லை என்று கூறினார்.
மரியா, ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்தார் என்றால், அவர் அக்காலக்கட்டத்தில் பிரச்சனைகளை எதிர்கொள்ளவில்லை என்று அர்த்தமில்லை, ஆனால் அவர், தன் வாழ்வில் அனைத்திற்கும் மேலாக, ஆண்டவரை முதலிடத்தில் வைத்தார், இதிலிருந்தே அவருக்கு மகிழ்வு பிறக்கின்றது என்றுரைத்த திருத்தந்தை, நாமும், இன்னல்கள் மற்றும், அச்சங்களில் மூழ்கிவிடாமல், கடவுளின் பிரசன்னத்தில் நம்பிக்கை வைத்து வாழுமாறு, மரியா நமக்கு ஆலோசனை வழங்குகிறார் என்று கூறினார்.
மரியா, தனது தாழ்நிலையை ஏற்றுக்கொண்டு ஆண்டவரைப் புகழ்ந்தார் என்றும், வாழ்வில் தன் மீது நம்பிக்கை வைக்காமல், தம்மை நம்புகின்ற சிறியோருக்கு, ஆண்டவர் வல்ல செயல்களை ஆற்றுகிறார் என்றும் கூறிய திருத்தந்தை, கடவுள் ஒவ்வொரு நாளும் நமக்கு வழங்கும் கொடைகளையும், நம்மீது அவர் காட்டுகின்ற கனிவன்பையும் நினைத்து, அவரைப் புகழ்கின்றோமா? என்ற கேள்வியையும் எழுப்பினார்.
கடவுள் எப்போதும் நம்மை மன்னித்து, அன்புகூர்கிறார், இதனால், அவர் நமக்கு வல்லசெயல்களை ஆற்றுவதோடு, நமக்கொரு அன்னையையும் தந்திருக்கிறார், நமக்காக விண்ணகத்தைத் திறந்திருக்கிறார் என்றும் கூறிய திருத்தந்தை, நாம் அவர் ஆற்றிவரும் நன்மைகளை மறந்தால், நம் இதயம் சுருங்கிவிடும் என்றும் கூறினார்.
எனவே, ஆண்டவர் நமக்கு ஆற்றிவரும் மாபெரும் செயல்களை, மரியாவைப் போன்று, நினைப்போம், ஒரு நாளில் குறைந்தது ஒருமுறையாவது அவற்றை நினைத்து மகிழ்ந்து அவரைப் போற்றிப் புகழ்வோம், அப்போது, நாம் முன்னோக்கி பாய்ந்து செல்லக்கூடியவண்ணம், நீண்டதொரு காலடியை எடுத்துவைக்கிறோம் என்று தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
நம் பார்வையை விண்ணை நோக்கி, கடவுளை நோக்கித் திருப்பி, அவருக்கு நன்றி சொல்லி ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்குத் தேவையான அருளை, விண்ணக வாயிலான நம் அன்னையிடம் மன்றாடுவோம் என்று சொல்லி, மரியாவின் விண்ணேற்புப் பெருவிழாவன்று ஆற்றிய, மூவேளை செப உரையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவு செய்தார்.
Source: New feed