இனிய இயேசு பாலனே, உம்மை நேசித்து ஆராதித்து உம்முடனே எனது துயரங்களைப் பகிர்ந்து கொள்ள தாழ்ச்சியுடன் வருகிறேன். எனக்குத் தேவையான உதவியை அன்புடன் தருவீர் என்னும் நம்பிக்கையுடன் வருகிறேன். ஏனெனில் உம்மால் இயலாதது ஒன்றும் இல்லை. பாவத்தினுடையவும், சாத்தானுடையவும் அடிமைத் தனத்திலிருந்து எங்களை மீட்கும்படி எங்கள் மனித சுபாவத்தை எடுத்து எங்கள்மேல் உள்ள அன்பால் நீர் பலவீனர் போல் ஆனீர். உமது நன்மைத்தனத்தில் நாங்கள் நம்பிக்கை வைத்து, “தந்தாய், இந்த கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றியருளும். ஆயினும் என் மனதின்படி அல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகட்டும்” என்று நீர் மரண அவஸ்தைப்படும் போது சொன்னதையே நானும் சொல்கிறேன். சிறுவர்களுக்கு உமது அரசைத்தருவதாக வாக்களித்தீரே. சிறுமை நிறைந்த என்னை கண்ணோக்கும். எனது துயரத்தை மகிழ்ச்சியாக மாற்றுவீராக. இவ்விதம் நான் நட்பில் உமது நண்பனாக வளர்வேன். உமது நட்பை பரகதியில் என்றென்றும் அனுபவிப்பேனாக.
– ஆமென்.
Source: New feed