பொதுக்காலம் பதினெட்டாம் வாரம் திங்கட்கிழமை
மத்தேயு 14: 22-36
தனியே இறைவனிடம் வேண்டுவதற்கு மலைமேல் ஏறிய இயேசு
நிகழ்வு
ஒரு பெரிய சர்க்கஸ் நிறுவனத்தில் கோமாளி வேடம் தரித்து, வித்தியாசமாக நடனமாடியும் குறும்புத்தனங்கள் செய்தும் மக்களை மகிழ்ச்சிப்படுத்திய கோமாளி ஒருவர் இருந்தார். இவருக்குத் திடீரென ஒருநாள், இவ்வுலக வாழ்க்கை சலித்துப்போனது. அதனால் இவர் தன்னுடைய மீதி வாழ்க்கையை ஒரு துறவியாக வாழலாம் என்று முடிவுசெய்தார். அதன்படி இவர் ஒரு துறவுமடத்திற்குச் சென்று, அங்கிருந்த தலைமைத் துறவியிடம் தன்னைப் பற்றி எடுத்துச் சொல்லி, தன்னை அந்த மடத்தில் துறவியாக ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தலைமைத் துறவியும் இவர் வைத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, இவரை அந்த மடத்தில் துறவியாகச் சேர்த்துக்கொண்டார்.
நாள்கள் மெல்ல நகர்ந்தன. துறவுமடத்தில் செய்யப்பட்ட வழிபாடுகள் கோமாளியாக இருந்து துறவியாக மாறிய இந்தப் புதிய துறவிக்கு வித்தியாசமாக இருந்தன. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்துகொண்டு இறைவனிடத்தில் வேண்டுவதும் தியானம்செய்வதும், அங்கும் இங்கும் ஆடியும் ஓடியும் கொண்டிருந்த இவருக்குக் கடினமாக இருந்தன. இதனால் இவர் தனியாக ஓர் இடத்திற்குச் சென்று, முன்பு தான் மக்களை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக எப்படி நடனமாடினாரோ அப்படி நடனமாடி இறைவனிடம் வேண்டினார். இப்பொழுது இவரால் மனம் ஒன்றி இறைவனிடம் வேண்ட முடிந்தது. இதையே தொடரலாம் என்றும் இவர் முடிவு செய்தார்.
இதற்கு பிறகு இவர் ஒவ்வொருநாளும் தனியாகக் காட்டுப் பகுதிக்கு வந்து நடனமாடிக் கொண்டே இறைவனிடம் வேண்டி வந்தார். இது இவருடைய உள்ளத்திற்கு மிகுந்த ஆறுதலையும் அமைதியையும் தந்தது. இதை எப்படியோ நோட்டம் விட்ட துறவி ஒருவர் தலைமைத் துறவியிடம் இவரைப் பற்றிப் பற்ற வைத்தார். இதனால் தலைமைத் துறவி, இந்தப் புதிய துறவியை அழைத்தார். புதிய துறவியோ, தலைமைத் துறவிக்கு நாம் தனியாக வந்து, நம்முடைய பாணியில் இறைவனிடம் வேண்டுகின்ற செய்தி தெரிந்துவிட்டதுபோலும்… எப்படியும் அவர் நம்மை இந்தத் துறவுமடத்திலிருந்து அனுப்பி விடுவார் என்று பயந்துகொண்டே அவர் முன் சென்றார்.
தலைமைத் துறவி புதிய துறவியின் அருகில்சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டு, “உங்களைக் குறித்து இங்கிருக்கும் ஒரு துறவி சொல்வதைக் கேள்விப்பட்டேன். நீங்கள் எப்படி இருந்து இறைவனிடம் வேண்டினால் இறைவனோடு ஒன்றிக்க முடியுமோ, அப்படி இருந்து இறைவனிடம் வேண்டி, அவரோடு ஒன்றித்திருங்கள். யாருக்காகவும் உங்களுடைய தனித்தனியை இழந்துவிடாதீர்கள்; வாழ்த்துகள்” என்றார். தலைமைத் துறவியிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திராத அந்தப் புதிய துறவி, இதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அதிகாலையில் காட்டிற்குச் சென்று, நடனமாடிக் கொண்டே இறைவனிடம் வேண்டி, அவரோடு ஒன்றித்திருந்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும், ஒருகாலத்தில் கோமாளியாக இருந்து பின் துறவியாக மாறியவர் தனக்குப் பிடித்த வழியில் இறைவனிடம் வேண்டி, அவரோடு ஒன்றித்திருந்தது போன்று, ஆண்டவர் இயேசுவும் தனக்குப் பிடித்த வழியில் இறைவனிடம் வேண்டி ஆண்டவரோடு ஒன்றித்திருந்தார். ஆண்டவரோடு ஒன்றித்திருப்பதற்கு, இயேசு எப்படி வேண்டினார், அவருடைய இறைவேண்டல் அவரை என்ன செய்யத் தூண்டியது என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தனியாக மலைமேல் ஏறி இறைவனிடம் இயேசு
இயேசு கிறிஸ்து இறைவனிடம் வேண்டுவதற்கெனத் தனிக்கென்று ஒரு வழிமுறையை வைத்திருந்தார். அதுதான் தனியாக மலைக்குச் சென்று இறைவனிடம் வேண்டியது. இயேசு தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார் என்று மாற்கு நற்செய்தியாளரும் (மாற் 1: 35), இரவு நேரங்களில் ஒலிவம் என்று வழங்கப்பட்ட மலைக்குச் சென்று தங்கினார் என்று லூக்கா நற்செய்தியாளரும் (லூக் 21: 37) எடுத்துக்கூறுகின்றார்கள். இவையெல்லாம் இயேசு, தந்தைக் கடவுளிடம் வேண்டுவதற்குத் தனக்கென்று ஒரு வழிமுறையைப் பின்பற்றினார் என்பதை எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது. நாமும் இறைவனிடம் வேண்டுகின்றபொது தனித்தன்மையோடு வேண்டலாம். மற்ற வேலைகளையும் தனித்தன்மையோடு செய்யலாம் என்பதை இயேசுவின் இச்செயல் நமக்கு எடுத்துக்கூறுவதாக இருக்கின்றது.
இயேசுவின் இறைவேண்டல் அவரைச் செயலுக்கு உந்தித் தள்ளியது
இயேசு இறைவனிடம் வேண்டிக்கொண்டதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. மாறாக, சீடர்களுக்கு ஒரு பிரச்சனை வந்ததும், அதாவது அவர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்தியதும் (மாற் 6: 48) அவர்களுக்கு உதவக் கடல் மேல்நடந்து செல்கின்றார். ஆகையால், நாம் இறைவனிடம் வேண்டுகின்றபொழுது, எல்லாரையும் போல் வேண்டிக் கொண்டிருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. இயேசுவைப் போன்று தனிதன்மையோடும் வேண்டலாம். மட்டுமல்லாமல், நாம் இறைவனிடம் வேண்டுவது, நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்வதாக இருக்கவேண்டும். நம்முடைய இறைவேண்டல் நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்கின்றதா? சிந்திப்போம்.
சிந்தனை
‘உங்களில் யாரேணும் துன்புற்றால் இறைவேண்டல் செய்யட்டும்’ (யாக் 5:13) என்பார் புனித யாக்கோபு. ஆகையால், நாம் நம்முடைய துன்பத்தை இன்பமாக மாற்றும் இறைவேண்டலை, இயேசுவைப் போன்று தனித்தன்மையோடு செய்வோம். அதே நேரத்தில் நம்முடைய இறைவேண்டல் நம்மைச் செயலுக்கு இட்டுச் செல்லுமாறு பார்த்துக்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed