இறைவேண்டலையும், இறைவேண்டலை மேற்கொள்வோரையும் மையப்படுத்தி, இறைவேண்டல் என்ற ‘ஹாஷ்டாக்’குடன் (#Prayer) திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 29, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.
“மனத்தளர்ச்சியைக் காட்டிலும், எதிர்நோக்கு சக்திமிக்கது என்பதை, இறைவேண்டல் செய்யும் ஆண்களும் பெண்களும் அறிந்துள்ளனர். மரணத்தைவிட, அன்பு சக்திவாய்ந்தது என்பதையும், நம்மால் அறிந்துகொள்ள முடியாத நேரங்களிலும், வழிகளிலும், அன்பு ஒருநாள் நிச்சயம் வெல்லும் என்பதையும், அவர்கள் அறிந்துள்ளனர்” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக பதிவு செய்திருந்தார்.
மேலும், வத்திக்கான் நகர அரசின் நலம் மற்றும் தூய்மையைக் கண்காணிக்கும் அலுவலகத்தின் இயக்குனராக, பேராசிரியர் அந்த்ரேயா அர்காஞ்சலி (Andrea Arcangeli) அவர்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 27, இத்திங்களன்று நியமித்துள்ளார்.
இதுவரை, இந்த அலுவலகத்தின் உதவி இயக்குனராகப் பணியாற்றிய பேராசிரியர் அர்காஞ்சலி அவர்கள், ஆகஸ்ட் 1ம் தேதியன்று தன் புதிய பொறுப்பை ஏற்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வத்திக்கான் நகர அரசின் நலம் மற்றும் தூய்மையைக் கண்காணிக்கும் அலுவலகத்தின் பணி, வத்திக்கான் நகரம், திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தேல் கந்தோல்போ, மற்றும், உரோம் நகரின் பல்வேறு இடங்களில் அமைந்துள்ள பாப்பிறை இல்லங்களில் மேற்கொள்ளப்படுகின்றது.
நோயுற்றோருக்குத் தேவையான மருந்துகளின் விநியோகம், நோய்தடுப்பு நடவடிக்கைகள், தூய்மை குறித்த நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் முக்கியப் பணிகளாக உள்ளன.
Source: New feed