கடுகு விதை வளர்ந்து வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 31-35.
அக்காலத்தில்
இயேசு மக்களுக்கு எடுத்துரைத்த வேறு ஓர் உவமை: “ஒருவர் கடுகு விதையை எடுத்துத் தம் வயலில் விதைத்தார். அவ்விதை எல்லா விதைகளையும் விடச் சிறியது. ஆனாலும், அது வளரும்போது மற்றெல்லாச் செடிகளையும் விடப் பெரியதாகும். வானத்துப் பறவைகள் அதன் கிளைகளில் வந்து தங்கும் அளவுக்குப் பெரிய மரமாகும். விண்ணரசு இக்கடுகு விதைக்கு ஒப்பாகும்.”
அவர் அவர்களுக்குக் கூறிய வேறு ஓர் உவமை: “பெண் ஒருவர் புளிப்பு மாவை எடுத்து மூன்று மரக்கால் மாவில் பிசைந்து வைத்தார். மாவு முழுவதும் புளிப்பேறியது. விண்ணரசு இப்புளிப்பு மாவுக்கு ஒப்பாகும்.”
இவற்றை எல்லாம் இயேசு மக்கள் கூட்டத்துக்கு உவமைகள் வாயிலாக உரைத்தார். உவமைகள் இன்றி அவர் அவர்களோடு எதையும் பேசவில்லை. “நான் உவமைகள் வாயிலாகப் பேசுவேன்; உலகத் தோற்றமுதல் மறைந்திருப்பவற்றை விளக்குவேன்” என்று இறைவாக்கினர் உரைத்தது இவ்வாறு நிறைவேறியது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மத்தேயு 13: 31-35
சிறிய அளவில் தொடக்கம்; பெரிய அளவில் மாற்றம்
நிகழ்வு
பெரியவர் ஒருவர் துறைமுகத்தில் பணியாற்றி வந்த தன்னுடைய மகனைப் பார்க்கத் துறைமுகத்திற்கு வந்தார். அவர் அங்கு வந்து, தன்னுடைய மகனைச் சந்தித்து அவனோடு பேசிக்கொண்டிருக்கும்பொழுது, கடலுக்குள் சற்று தள்ளி, பாய்மரக் கப்பல் ஒன்று நின்றுகொண்டிருப்பதைக் கொண்டார். அந்த நேரத்தில் காற்று மிக வேகமாக வீசியது. அப்படியிருந்தும் அந்தப் பாய்மரக் கப்பல் நகராமல், அங்கே நின்றுகொண்டிருந்தது.
அதைப் பார்த்துவிட்டுப் பெரியவர் தன்னுடைய மகனிடம், “தம்பி! காற்று இவ்வளவு வேகமாக வீசுகின்றது. அப்படியிருந்தும் இந்தப் பாய்மரக் கப்பல் கொஞ்சம்கூட முன்னேறாமல், இருந்த இடத்தில் அப்படியே இருக்கின்றதே…! அது ஏன்?” என்றார். “அப்பா! இந்தப் பாய்மரக் கப்பல் கொஞ்சம்கூட முன்னேறாமல், இருந்த இடத்தில் அப்படியே இருக்கக் காரணம், கடலுக்குள் இருக்கும் நங்கூரம் இதைக் பற்றிப் பிடித்துக் கொண்டிப்பதால்தான்” என்றான் மகன்.
உடனே பெரியவர் தன்னுடைய மகனிடம், “கடலுக்குள் இருக்கும் நங்கூரம் எப்படி இந்தப் பாய்மரக் கப்பலைப் பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பதால், இது கொஞ்சம் கூட முன்னேற முடியாமல் இருக்கின்றதோ, அப்படி சில மனித்ரகளையும் அவர்களுடைய ஆசைகள், உலகக் கவலைகள் ஆகியவை பற்றிப் பிடித்துக்கொண்டிருந்தால், அவர்கள் முன்னேறாமல், மாறாமல் அப்படிய் இருக்கின்றார்கள்” என்றார்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற பெரியவர் சொன்னது போன்று, இன்று ஒருசிலர்கள் ஒருசிலவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருப்பதால் அவர்கள் முன்னேறாமல், மாற்றம் அடையாமல் இருக்கின்றார்கள்; ஆனால், இயேசு அப்படிக் கிடையாது. அவர் ஆண்டவர் ஒருவரைத் தவிர வேறு எதையும் பற்றிக்கொண்டிருக்கவில்லை. அதனால்தான் அவர் தொடங்கிய விண்ணரசு எங்கும் பரவி, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு விண்ணரசைக் கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். இயேசு ஏன் விண்ணரசைக் கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிட வேண்டும்…? இதன்வழியாக இயேசு நமக்குச் சொல்லக்கூடிய செய்தி என்ன? என்பன குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பாப்போம்.
விண்ணரசைக் கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடும் இயேசு
விண்ணரசை நிலத்தில் விதைக்கப்பட்ட விதை, வயலில் தோன்றிய களைகள்… ஆகிய பலவற்றிற்கும் ஒப்பிடுகின்ற இயேசு, இன்றைய நற்செய்தியில் அதை கடுகு விதைக்கும், புளிப்பு மாவுக்கும் ஒப்பிடுகின்றார். காரணம், இரண்டும் அளவில் சிறிதாக இருந்தாலும், அவற்றிலிருந்து அல்லது அவற்றால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பதாலாகும். அதைப் போன்றுதான் விண்ணரசும் நாசரேத்து என்ற ஒரு சாதாரண ஊரில் தொடக்கப்பட்டு, உலகமெங்கும் நிறைந்து இருக்கும். இயேசு சொல்லக்கூடிய இரண்டு உவமைகளும் நமக்கொரு முக்கயமான செய்தியை எடுத்துச் சொல்கின்றது. அதைக் குறித்துத் தொடர்ந்து சிந்தித்துப் பார்ப்போம்.
சிறிதாகத் தொடங்கி, பெரிதாக மாற்றம் காண்போம்
கடுகு விதையும், புளிப்பு மாவும் அளவில் சிறியதுதான்; ஆனால், அவற்றிலிருந்து மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். அதுபோன்று விண்ணரசைப் பற்றிய நற்செய்தியை அறிவிப்பதற்கு நாம் எடுக்கும் முயற்சிகள் சிறியதாக இருந்தாலும், அவற்றால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். இதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்தான் புனித பவுலும், புனித பிரான்சிஸ் சவேரியாரும்.
பிற இனத்தாருக்கு நற்செய்தி அறிவிக்கப் பவுல் என்ற ஒற்றை மனிதர் எடுத்த முயற்சிகளை நாம் மறந்துவிடமுடியாது. அவரோடு ஒருசிலர் உடன் பணியாளர்களாகப் பணியாற்றினாலும், பிற இனத்தாருக்கு ஆண்டவரின் நற்செய்திக் கொண்டு சென்றதில் புனித பவுல் ஒரு முன்னோடிதான். அதைப்போன்று இந்தியாவிலுள்ள கடற்கரை ஊர்களுக்கும் சீனாவிற்கும் ஜப்பானுக்கும் ஆண்டவரின் நற்செய்தியைக் கொண்டுசென்ற புனித பிரான்சிஸ் சவேரியாரும். இவர் தனியொரு மனிதனாகவே பல இடங்களுக்குச் சென்று நற்செய்தி அறிவித்தார். அப்படியானால், நாம் ‘சிறியவர்களாக’ இருந்தாலும், சிறிதளவில் நற்செய்தியை அறிவித்தாலும், அதனால் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்பது உறுதி
எனவே, நாம் இயேசுவின் விண்ணரசு பற்றிய நற்செய்தி எல்லா மக்களையும் சென்றடைய, நம்மால் முடிந்த முயற்சிகளை மேற்கொள்வோம் இறைவன் நிச்சயம் அவற்றிலிருந்து பெரிய மாற்றங்களைக் கொண்டு வாருவார்.
சிந்தனை
‘இதன் பின் யாராலும் எண்ணிக்கையிட முடியாத பெரும் திரளான மக்களைக் கண்டேன்’ (திவெ 7:9) என்பார் நற்செய்தியாளர் யோவான். ஆம். இயேசுவால் தொடங்கப்பட்ட விண்ணரசு, யாராலும் எண்ணிக்கையிட முடியாத அளவுக்கு மக்களை உள்ளடக்கியது. ஆகையால், விண்ணரசு இன்னும் பல மக்களையும் உள்ளடக்க, நாம் இயேசு விட்டுச் சென்ற நற்செய்திப் பணியைத் தொடந்து செய்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed