“வாழ்வளிக்கும் (இறை)வார்த்தை”
நிகழ்வு
அது ஒரு கிராமப்புறப் பங்கு. அந்தப் பங்கில் இருந்த பங்குத்தந்தையைப் பார்க்க இளைஞன் ஒருவன் வந்தான். அவன் ஒருகாலத்தில் ஊதாரியாக வாழ்ந்தவன்; பங்குத்தந்தைதான் அவனைத் திருத்தி நல்வழிக்குக் கொண்டுவந்திருந்தார். அதனால் அவனுக்குப் பங்குத்தந்தையின்மீது தனிப்பட்ட பாசமும் மதிப்பும் இருந்தன.
பங்குத்தந்தை அவனைப் பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். பின் அவனிடம் அவர் நலம் விசாரித்துவிட்டு, அவன் வந்த நோக்கத்தைக் கேட்டார். அவனோ, “சுவாமி! நான் இயேசுவின் மலைப்பொழிவை பாராமல் சொல்வேன்” என்று உற்சாகமாகச் சொன்னான். “சொல், பார்க்கலாம்” என்று அவர் சொன்னதும், அவன் கொஞ்சம்கூட பிசிறு இல்லாமல், திருவிவிலியத்தில் இருப்பதுபோன்று அப்படியே சொல்லி முடித்தான். பங்குத்தந்தைக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. “தம்பி! அருமையாகச் சொன்னாய்! வாழ்த்துகள்” என்று அவர் அவனைப் பாராட்டிவிட்டு, “ஆனால், இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டும் நின்றுவிடக்கூடாது; அதை உன்னுடைய வாழ்வில் கடைப்பிடித்து வாழவேண்டும்” என்றார்.
பங்குத்தந்தை இவ்வாறு சொன்னதற்கு அந்த இளைஞன், “சுவாமி! நான் இறைவார்த்தையை மனப்பாடம் செய்வதோடு மட்டுமல்லாமல், அதைக் கடைப்பிடித்து வாழ்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்தான்: “வழக்கமாக நான் திருவிவிலியத்திலிருந்து ஓர் இறைவார்த்தைப் பகுதியை வாசித்தேன் என்றால், அதை நான் பணிசெய்யும் இடத்தில் இருக்கின்ற என்னுடைய நண்பனிடம் சொல்லிக்காட்டுவேன். அவன் பிற சமயத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும், இறைவார்த்தையைக் கேட்பதில் அவனுக்கு அவ்வளவு ஈடுபாடு! இப்படி நான் அன்றாடம் வாசிக்கக்கூடிய இறைவார்த்தையை அவனிடம் சொல்வதால் அந்த இறைவார்த்தை எனக்கு மனப்பாடம் ஆகிவிடுகின்றது. அத்தோடு, அந்த இறைவார்த்தை எனக்குள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. இந்த மாற்றத்தைக் காணும் என்னுடைய நண்பனும் இப்பொழுது நல்லதொரு வாழ்க்கை வாழத் தொடங்கிவிட்டான்.”
அந்த இளைஞன் சொன்னதை அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த பங்குத்தந்தை, “தம்பி! நீ இறைவார்த்தையை வாசிப்பதோடு மட்டுமல்லமல், அதை வாழ்ந்து காட்டி, மற்றவருக்கும் ஒளியாக இருக்கின்றாயே! அதை நினைக்கும்பொழுது மிகவும் பெருமையாக இருக்கின்றது. வாழ்த்துகள்” என்று சொல்லி, அவனை அனுப்பி வைத்தார்.
நாம் வாசிக்கின்ற, கேட்கின்ற இறைவார்த்தை முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலனளிக்கவேண்டும். அதைத்தான் இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. பொதுக்காலத்தின் பதினைந்தாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, கடவுளின் வார்த்தைக்கு இருக்கும் வல்லமையை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியத்தைப் பற்றி அறிஞர் பெருமக்கள்
“கடவுள் மனிதர்களுக்குக் கொடுத்த பெரிய கொடை திருவிவிலியம்” – முன்னாள் அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லிங்கன்.
“இங்கிலாந்து நாட்டிற்கு இரண்டு நூல்கள் மிகவும் முக்கியமானவை. ஒன்று திருவிவிலியம். மற்றொன்று, ஷேக்ஸ்பியரின் நூல்கள். இதில் வியப்புக்குரிய உண்மை என்னவெனில், ஷேக்ஸ்பியரை இங்கிலாந்து உருவாக்கியது. அந்த இங்கிலாந்தைத் திருவிவிலியம் உருவாக்கியது” –விக்டர் ஹுகோ.
‘இறைவேண்டல் செய்யும்பொழுது, இறைவனிடம் நாம் பேசுகின்றோம்; திருவிவிலியத்தை வாசிக்கும்பொழுது, இறைவன் நம்மோடு பேசுகின்றார்” – மறைப்பணியாளர் டி.எல்.மூடி.
“திருவிவிலியத்தில் சொல்லப்பட்ட உயர்ந்த நெறிகளின்படி வாழ்ந்தால், மேலும் மேலும் நாம் வளர்ச்சியடைவோம். அதன்படி நாம் வாழவில்லை என்றால், நம்முடைய அழிவு எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது” –டானியல் வெப்ஸ்டர்.
திருவிவிலியத்தைக் குறித்து அறிஞர் பெருமக்கள் மேலே கூறியுள்ள வார்த்தைகள், திருவிவிலியம் எவ்வளவு வல்லமையானது என்பதை நமக்கு எடுத்துக்கூறுகின்றன. இத்தகைய வல்லமை நிறைந்த திருவிவிலியத்திற்கு அதில் உள்ள இறைவார்த்தைக்கு எப்படிப் பதில் தருகின்றோம் என்பதைப் பொருத்தே நம்முடைய வாழ்வும் தாழ்வும் இருக்கின்றது. அதை விளக்குவதாக இருப்பதுதான் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமை.
இறைவார்த்தையைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்
இயேசு சொல்லக்கூடிய விதைப்பவர் உவமையில் ‘வழியோர நிலம், பாறைநிலம், முட்செடி நிலம், நல்லநிலம் என்று நான்கு வகையான நிலங்கள் இடம்பெறுகின்றன. இந்நான்கு வகையான நிலங்களையும், ஒருவர் இறைவார்த்தைக்குப் பதிலளிப்பதன் அடிப்படையில் அவருடைய உள்ளத்தோடு ஒப்பிடலாம். மேலும், இந்த நான்குவகையான நிலங்களைக்கூட, இறைவார்த்தைக் கேட்டும் பலன்கொடுக்காதவர்கள்; இறைவார்த்தைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள் என்று இருவகையாகப் பிரிக்கலாம்.
வழியோர நிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்றவர்கள். இவர்கள் இறைவார்த்தை தங்களுடைய செவிகளில் விழாதவண்ணம், காதுகளை அடைத்துக்கொள்ளக்கூடியவர்கள். இப்படிப்பட்டவர்கள் பலன் கொடுக்கமாட்டார்கள் என்று உறுதியாகச் சொல்லிவிடலாம். பாறைநிலம் போன்ற மனதுடையவர்கள், இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மக்களைப் போன்றவர்கள். இப்படிப்பட்டவர்கள் இறைவார்த்தையை முதலில் ஆர்வமாகக் கேட்பார்கள்; ஆனால், இவர்கள் இறைவார்த்தை தங்களை ஊடுருவ அனுமதிப்பதில்லை. ஆன்மாவையும் ஆவியையும் பிறக்கும் அளவுக்குக் குத்தி ஊடுருவும் இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதித்தல்தானே, அது பலன்கொடுக்கும். பாறை நிலம் போன்றவர்களோ இறைவார்த்தை தங்களுடைய உள்ளத்தை ஊடுருவ அனுமதிக்காததால் பலன்கொடுக்காதவர்களாகப் போய்விடுவார்கள்.
முட்செடி நிலம் போன்றவர்கள், இயேசுவின் பன்னிரு சீடர்களின் ஒருவனும், அவரைக் காட்டிக் கொடுத்தவனுமாகிய யூதாசு இஸ்காரியோத்து போன்றவர்கள். இவர்களுக்கு இறைவார்த்தையும் முக்கியம்; உலக இன்பமும் முக்கியம். வேடிக்கை என்னவெனில், உலக இன்பமும் உலகக்கவலையும் தங்களுடைய உள்ளத்தில் விழுந்த இறைவார்த்தையை நெருக்கிவிடுவதால், இவர்கள் கடைசியில் பலன் கொடுக்காமல் போய்விடுவார்கள். இவ்வாறு வழியோர நிலம் போன்ற மனம்கொண்டவர்களும், பாறைநிலம் போன்ற மனம்கொண்டவர்களும், முட்செடி நிலம் போன்ற மனம் கொண்டவர்களும் பலன் கொடுக்காமலே போய்விடுவார்கள்.
இறைவார்த்தையைக் கேட்டுப் பலன்கொடுப்பவர்கள்
ஜே.ஹச். ஸ்மித் என்ற எழுத்தாளர் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்டார்: “கிறிஸ்தவர்கள் அனைவரும் தங்களிடம் உள்ள திருவிவிலியத்தை ஒரே நேரத்தில் தட்டினால், அதிலிருந்து எழும் தூசு, உலகில் மிகப்பெரிய சூறாவளியை உருவாக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.” எவ்வளவு வேதனை கலந்த உண்மையாக இருக்கின்றது. நாம் இறைவார்த்தையை வாசிப்பது இல்லை. வாசித்தாலும் அதன்படி வாழ்வதில்லை என்பதையே மேலே உள்ள வார்த்தைகள் நமக்கு எடுத்துக்கூறுகின்றன.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக இருப்பவர்கள் நல்லநிலம் போன்ற மனதுடையவர்கள். இவர்கள் புனித கன்னி மரியாவைப் போன்றவர்கள். காரணம், புனித கன்னி மரியா, இறைவார்த்தையைக் கேட்டார். கேட்டதோடு மட்டுமின்றி, அதைத் தன்னுடைய உள்ளத்தில் பதித்து வைத்து (லூக் 2: 51), அதன்படி வாழ்ந்தார். அதனால் மிகுந்த கனிதந்தார். நாமும் மரியாவைப் போன்று இறைவார்த்தையைக் கேட்டு, அதை வாழ்வாக்கினால் முப்பது மடங்காக, அறுபது மடங்காக, நூறு மடங்காகப் பலன்தருவோம். உறுதி. ஏனென்றால், இன்றைய முதல் வாசகத்தில் நாம் வாசிப்பது போன்று, இறைவார்த்தை மழையைப் போன்று, பனியைப் போன்று எதற்காக அனுப்பப்பட்டதோ, அந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும. ஆகையால், நாம் இறைவார்த்தையைக் கேட்டு, அதன்படி நடந்து மிகுந்த பலன் தருபவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘இவ்வுலகில் இதுவரை அச்சடிக்கப்பட்ட நூல்களில் மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதுமான ஒரு நூல் உண்டெனில், அது திருவிவிலியம்தான்’ என்பார் பேட்ரிக் ஹென்றி (1736-1799) என்ற அறிஞர். ஆகையால், மிகவும் போற்றுதற்குரியதும் பயனுள்ளதும் வாழ்வளிப்பதுமான திருவிவிலியத்தில் உள்ள இறைவார்த்தை வாசித்து, வாழ்வாக்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed