மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 8: 28-34
அக்காலத்தில்
இயேசு கலிலேயாவின் மறு கரையை அடைந்து கதரேனர் வாழ்ந்த பகுதிக்கு வந்தபோது, பேய் பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வெளியேறி அவருக்கு எதிரே வந்துகொண்டிருந்தனர். அவ்வழியே யாரும் போகமுடியாத அளவுக்கு அவர்கள் மிகவும் கொடியவர்களாய் இருந்தார்கள். அவர்கள், “இறைமகனே, உமக்கு இங்கு என்ன வேலை? குறித்த காலம் வருமுன்னே எங்களை வதைக்கவா இங்கே வந்தீர்?” என்று கத்தினார்கள்.
அவர்களிடமிருந்து சற்றுத் தொலையில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. பேய்கள் அவரிடம், “நீர் எங்களை ஓட்டுவதாயிருந்தால் அப்பன்றிக் கூட்டத்திற்குள் எங்களை அனுப்பும்” என்று வேண்டின. அவர் அவற்றிடம், “போங்கள்” என்றார். அவை வெளியேறிப் பன்றிகளுக்குள் புகுந்தன. உடனே அக்கூட்டம் முழுவதும் செங்குத்துப் பாறையிலிருந்து கடலில் பாய்ந்து நீரில் வீழ்ந்து மடிந்தது.
பன்றிகளை மேய்த்துக்கொண்டிருந்தவர்கள் ஓடிப்போனார்கள். அவர்கள் நகருக்குள் சென்று, பேய் பிடித்தவர்களைப் பற்றிய செய்தியையும், நடந்த அனைத்தையுமே அறிவித்தார்கள். உடனே நகரினர் அனைவரும் இயேசுவுக்கு எதிர் கொண்டு வந்து, அவரைக் கண்டு, தங்கள் பகுதியை விட்டு அகலுமாறு வேண்டிக்கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
மத்தேயு 8: 28-34
புதுவாழ்வு தரும் இயேசு
நிகழ்வு
ஜப்பானில் ஷோய்ச்சி யோகோய் (Shoichi Yokoi) என்றோர் இராணுவ வீரர் இருந்தார். இவர் 1944 ஆம் ஆண்டு, தன்னுடைய நாட்டின்மீது பெரிய போர் வரப்போகிறது என்பது தெரிந்ததும், உயிருக்குப் பயந்து மலைக்குத் தப்பியோடி, அங்கிருந்த ஒரு குகையில் வாழத் தொடங்கினார். இவர் தனக்குப் பசியெடுத்தபொழுது, இயற்கையாகக் கிடைத்தப் பழங்கள், பச்சைக் காய்க்கறிகள் ஆகியவற்றைப் பறித்துச் சாப்பிட்டு வந்தார். சில நேரங்களில் அவை கிடைக்காதபொழுது, தவளைகள், நத்தைகள், எலிகள் ஆகியவற்றைப் பிடித்துச் சாப்பிட்டு வந்தார். இரவு நேரங்களில் மட்டும் இவர் வெளியே வருவார். இப்படியே இவர் பல ஆண்டுகள் வாழ்ந்து வந்தார்.
இதற்கு நடுவில் வெளியே கிடந்த ஆயுதங்கள், குண்டுவெடிப்பினால் ஏற்பட்ட சேதங்கள் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு போர் முடிவுக்கு வந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டார். ஆனால், ஊருக்குள் போனால் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும், அதனால் பேசாமல் இங்கேயே இருப்போம் என்று குகைக்குள்ளே வாழ்ந்து வந்தார்.
ஆண்டுகள் உருண்டோடின. ஒருநாள் இரவு வேளையில் இவர் வழக்கம்போல், தான் இருந்த குகையை விட்டு வெளியே வந்து, சாப்பிடுவதற்கு ஏதாவது கிடைக்குமா என்று தேடியலைந்தார். அப்பொழுது தற்செயலாக அங்குவந்த இரண்டு வேடர்கள், குகையில் வாழ்ந்து வந்த இந்த இராணுவ வீரரைக் கண்டார்கள். இவர் பார்ப்பதற்கு ஒரு காட்டுவாசியைப் போல் இருப்பதைக் கண்டு, அவர்கள் இவரிடம், “நீங்கள் யார்…? உங்களுக்கு என்ன ஆயிற்று…? நீங்கள் ஏன் இப்படி ஒரு காட்டுவாசியைப் போன்று அலைந்துகொண்டிருக்கின்றீர்கள்…?” என்று கேட்டார்கள். அதற்கு அந்த இராணுவ வீரர், நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் அவர்களிடம் சொல்லி முடித்தார்.
உடனே அந்த இரண்டு வேடர்களில் ஒருவர், “போர் முடிந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன…! நீங்கள் இராணுவத்திலிருந்து ஓடிவந்ததை அவர்கள் இன்னுமா நினைவில் வைத்திருக்கப் போகிறார்கள்?” என்று சொல்லி, அவரை ஊருக்குள் அழைத்து வந்து, அவரைப் புதிய மனிதராக வாழ வழி வகுத்தார்கள்.
ஆம். உயிருக்குப் பயந்து, மலைக்குத் தப்பியோடி ஒரு காட்டுவாசியைப் போன்று வாழ்ந்து வந்த அந்த இராணுவ வீரருக்கு எப்படி அந்த இரண்டு வேடர்கள் புது வாழ்வினைத் தந்தார்களோ, அப்படிப் பேய்பிடித்து, விலங்குகளைப் போன்று வாழ்ந்து வந்த இருவருக்கு இயேசு புதுவாழ்வு தருகின்றார். இயேசு அந்த இருவருக்கும் தந்த புதுவாழ்வு எத்தகையது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
கதரேனர் பகுதிக்கு வந்த இயேசு
நற்செய்தியில் இயேசு கலிலேயாவின் மறுகரையை அடைந்து, கதரேனர் வாழ்ந்து வந்த பகுதிக்கு வருகின்றார். இப்பகுதியானது கலிலேயாக் கடற்கரையின் தென்புறமாக இருக்கின்றது. மேலும் இந்தப் பகுதி அல்லது இந்த நகர் தெக்கப்பொலி எனப்படும், பத்து நகர்களில் ஒன்றாக இருந்தது. பிற இனத்து மக்கள் மிகுதியாக வாழ்ந்து வந்த இந்தப் பகுதிக்கென்று தனிப்பட்ட கட்டுப்பாடும் சட்டதிட்டங்களும் அதிகாரமும் இருந்தன. இப்படிப்பட்ட பகுதிக்கு இயேசு வருகின்றபொழுது, பேய் பிடித்திருந்த இருவர் கல்லறையிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்தார்கள். இவர்கள் இருவரும் கொடியவர்களாகவும் இருந்தார்கள். இவர்கள் இயேசுவை நோக்கி, “இறைமகனே! குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா இங்ககே வந்தீர்?” என்று சொல்கின்றபொழுது, இயேசு அவர்களிடமிருந்த தீய ஆவியை அங்கு மேய்ந்துகொண்டிருந்த பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பி சாகடிக்கின்றார்.
இங்குப் பேய்பிடித்திருந்த இருவருக்குள் இருந்த தீய ஆவி, “குறித்த காலம் வரும்முன்னே எங்களை வதைக்கவா வந்தீர்” என்று இயேசுவிடம் சொல்கின்ற வார்த்தைகளைப் பற்றி நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். குறித்த காலம் என்பது தீய ஆவிகள் கந்தக, நெருப்பு ஏரியில் எரிக்கப்படும் காலத்தைக் குறிக்கின்றது (திவெ 20: 10) இயேசு அதற்கு முன்னேயே அவைகளை வதைக்க வந்ததால்தான் அவை அப்படிச் சொல்கின்றன.
பேய்பிடித்தவர்களுக்குப் புதுவாழ்வு தந்த இயேசு
தீய ஆவிகள் இயேசுவிடம் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப, அவர் அவைகளைப் பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்ப, அவை செத்து மடிந்ததைப் பார்த்த, பன்றிகளின் உரிமையாளர்கள், இயேசுவை தங்களுடைய பகுதியிலிருந்து அகலுமாறு சொல்கின்றார். இதன்பிறகு இயேசு அப்பகுதிக்குச் சென்றதாக நமக்குச் சொல்லவில்லை.
இங்கு நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும். தீய ஆவி பிடித்திருந்தவர்கள் இயேசுவால் புதுமனிதர்களாக மாறியிருந்தார்கள். அதைக் கண்டு பன்றிகளின் உரிமையாளர்கள் மகிழவில்லை. மாறாக, தங்களுடைய பன்றிகள் போய்விட்டனவே என்றுதான் வருந்துகின்றார்கள். நாமும்கூட பல நேரங்களில், மனிதர்களுக்குக் கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை மனிதர்களுக்குக் கொடுக்காமல், பொருளுக்கும் பணத்திற்கும், இன்ன பிறவற்றிற்கும் கொடுத்து வாழ்கின்றோம். இத்தகைய சூழ்நிலையில் நாம் இயேசுவைப் போன்று மனித்ரகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ அழைக்கப்படுகின்றோம்.
சிந்தனை
‘மிகச் சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள்’ (மத் 25: 40) என்பார் இயேசு. ஆகவே, நாம் மனிதருக்குச் செய்யும் உதவிகள் யாவும், இறைவனுக்குச் செய்யப்படக்கூடியவை என்ற உண்மையை உணர்ந்து, சக மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுகொண்டு வாழ்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Source: New feed